கோப்புப்படம் ENS
சிறப்புக் கட்டுரைகள்

பழம்பெருமைமிகு இந்தியா...4 ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன?

பண்டைய காலத்தில் மருத்துவம், உளவியல், யோகா சிறப்புகள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மருத்துவம்

இந்தியா மருத்துவத்திலும் மிகப் பழங் காலம் முதலே சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஹரப்பா நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு. இதில் மூளையின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக மூளையில் துளையிடும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

மெஹர்க் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பகுதியில் 7500-9000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன பல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டில் இந்தியா - சீனா இடையே ஆயுர்வேத மருத்துவம் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இந்தியாவின் முக்கியமான மருத்துவர்கள் சரகர் மற்றும் சுஷ்ருதர். சரகர் 'இந்திய மருத்துவத்தின் தந்தை என்றும் சுஷ்ருதர், 'அறுவைச் சிகிச்சையின் தந்தை' என்றும் அழைக்கப்படுகிறார்கள். சரக சம்ஹிதை, சுஷ்ருத சம்ஹிதை முறையே இவர்கள் எழுதிய ஆயுர்வேத நூல்கள். உள் உறுப்புகளின் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு அடித்தளமிட்டு அதற்கான கொள்கைகளை வகுத்தவர்கள்.

சுஷ்ருதர், மூக்கு அறுவைச் சிகிச்சை, கண்புரை அகற்றுவது என 300 அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகளைத் தெரிவித்துள்ளார். மூலிகை மருத்துவத்துடன் கூடிய அவரது அறுவைச் சிகிச்சை முறைகள் உலகளவில் மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தின. 2018-ல் ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

ஆயுர்வேத சிகிச்சை முறையில் நாகார்ஜுனா மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். உலோகவியலாளர் ஆச்சார்யா நாகார்ஜூனா உலோகத்தைத் தங்கமாக மாற்றுவதிலும் மருத்துவத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு உலோகங்கள், தாதுக்களைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருத்துவத்தில் ரசசாஸ்திர முறையில் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்.

அடுத்து ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு விரிவான புரிதலை வழங்கிய ஒரு முக்கியமான அறிஞர் வாக்பட்டர். இவர் அஷ்டாங்க ஹிருதயம் என்ற நூலை எழுதியுள்ளார். சித்த மருத்துவர் சரங்கதரர் எழுதிய மருத்துவ நூலை அடிப்படையாகக் கொண்டு சரங்கதரர் மருத்துவம் என்ற சிகிச்சை முறை உள்ளது. இவரது சித்த மருத்துவ கொள்கைகள் உலகெங்கும் உள்ள அறிஞர்களை ஈர்த்தது. நோய்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரிசெய்து குணப்படுத்தும் முறையை கொண்டு வந்தார். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்க்கை முறையை மேம்படுத்தியது. உலகளவில் தற்போதுள்ள ஆயுர்வேத மருத்துவ முறைகள் அனைத்தும் இந்தியாவின் சரகர், சுஷ்ருதர் கொண்டுவந்த முறைகளின் அடிப்படையே ஆகும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பஞ்சகர்மா சிகிச்சை முறை உடல் மற்றும் மன ரீதியாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக அதுதொடர்பான பயிற்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். யோகாவும் இதில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

பிசியோதெரபியுடன் ஆயுர்வேதமும் இணைந்து பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களைக் குணப்படுத்துகிறது. இசை மூலமாகவும் உடல், மன ஆரோக்கியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படும் நடைமுறையும் இருந்துள்ளது. இசையை பற்றிய கந்தர்வ வேதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

உளவியல்

உலகளவில் 4-ல் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பண்டைய காலத்தில் சிறப்பான சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டுள்ளன. நினைவாற்றல் பயிற்சிகள், தியானம், யோகா ஆகியவற்றின் மூலமாக உளவியல் ரீதியான பிரச்னைகளை மக்கள் கையாண்டுள்ளனர். குறிப்பாக முனிவர்கள் பலரும் தியானம், யோகா மூலமாக தங்களது மன அமைதியையும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளனர். இவை ஆன்மிகம் சார்ந்து மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தியுள்ளது நிரூபணமாகியுள்ளது.

இதில் முக்கிய அம்சம் என்றால் தியானம். இது மூளையை மறுவடிவமைப்பு செய்து நினைவாற்றலை அதிகரிப்பதுடன் மன உறுதியையும் மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான தியானம் செய்வது மன அழுத்தம், பதற்றத்தை 60% வரை குறைக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பிரணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி என்பது சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதுடன் மன அமைதியையும் தருகிறது. இது மன அழுத்தத்திற்கு காரணமாக கார்டிசோல் ஹார்மோன் அளவை 20% குறைப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பண்டைய கால முனிவர்களும் இதையேதான் கூறினர்.

கபம், வாதம், பித்தம், உடலின் இயக்கத்தை நிர்வகிப்பவை, இவை மூன்றும் சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மூன்றையும் சமநிலைப்படுத்த உணவு முறை, மூலிகைகளை எடுத்துக்கொள்வது, தியானம், யோகா செய்வது உதவும் என்று சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது வரை நவீன அறிவியல் முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

யோகா உடல் ரீதியாக மட்டுமின்றி மனதையும் ஒருமுகப்படுத்துகிறது. யோகா மன உளைச்சலை 33% குறைக்கும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மனத் தெளிவையும் ஏற்படுத்துகிறது.

இவை அனைத்துமே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மனத் தெளிவை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

சத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவை மனதின் மூன்று குணங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. சத்வம் என்பது தூய்மை, உண்மை, அறிவு, அமைதியைக் குறிக்கிறது. ரஜஸ் என்பது செயல்பாடு, ஆர்வம், ஆசை, இயக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. தமஸ் என்பது அறியாமை, மந்தநிலை, சோம்பல், இருள் ஆகிய குணங்களைக் குறிக்கிறது.

இந்திய பாரம்பரிய ராகங்கள் இசை உணர்ச்சியைத் தூண்டி 65% மன பதற்றத்தைக் குறைக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல மந்திரங்களை உச்சரிப்பதும் கேட்பதும் மூளை தொடர்புடைய உணர்ச்சிகளைத் தூண்டி கவனம், நினைவாற்றல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை 55% அதிகரித்துள்ளதாக நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.

யோகா

1960களில் யோகா மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்றதாக இருந்தது. உடல் ஆரோக்கியத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு குழுக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டன.

யோகா பிரபலமானதால் தியான மையங்கள், கோயில்கள் நிறுவப்பட்டன. உடற்பயிற்சிக் கூடங்களிலும் யோகா பயிற்றுவிக்கப்பட்டது.

1980 களில் பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர், ஜெனிபர் அனிஸ்டன் ஆகியோர் யோகாவை கற்றுக்கொண்டு பயிற்சியாளராகி வணிக ரீதியாகவும் பயன்பெற்றனர்.

யோகா என்பது 'யுஜ்' என்ற சமஸ்கிருத வார்த்தையை குறிக்கிறது. இதற்கு இணைப்பு என்பது பொருள். பல்வேறு யோகா மூலமாக உச்சபட்ச முழுமையான உண்மையை அடையலாம் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதையில் யோகா என்பது தன்னலமற்ற கடமையைச் செய்து ஐந்து புலன்களைக் கடந்து கடவுளை அடைவது என்று சொல்லப்படுகிறது.

தியானம், சுவாச பயிற்சி, ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும் யோகாவில் அடங்கும்.

ஆன்மிக விடுதலையாகவும் யோகா கருதப்படுகிறது. மனம் சமநிலையினை அடைவதையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆன்மிக வழிமுறை என்றும் கூறப்படுகிறது.

ஆன்மிகம் மற்றும் தத்துவம் சார்ந்த யோகா, இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியது.

கி.மு. 2500ல் சிந்து சமவெளி நாகரிகத்தில் யோகா இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. யோகா அல்லது தியான முத்திரைகளில் உருவங்கள் உள்ளன. யோகாசனங்கள் செய்வது போன்ற பல உருவங்களும் கிடைத்துள்ளன. ரிக் வேதத்தில் யோகா பற்றிய தகவல்களும் உள்ளன.

புத்தர் தியான நிலையில் அமர்ந்து யோகா பற்றியும் பல அம்சங்களை ஊக்குவித்தார். ஞானம் பெறுவதற்காக தியானம், யோகா ஆகியவற்றை தனது போதனைகளுடன் ஒருங்கிணைத்தார்.

பதஞ்சலியின் யோகம், 8 யோக சூத்திரங்களை அறிமுகப்படுத்தி அதற்கென ஒரு அணுகுமுறையைக் கொண்டுவந்தது.

தற்போது உலகளவில் 30 கோடி மக்கள் யோகா பயிற்சி செய்து வருகின்றனர்.

கி.மு. 150 ஆம் ஆண்டைச் சேர்ந்த வெள்ளிக் கோப்பையில் பசுபதி யோகா வடிவிலான ஒரு முத்திரை டென்மார்க்கில் கண்டறியப்பட்டுள்ளது.

2021 ஜூன் 21 ஆம் தேதி யோகா நாளாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆன்மிக பயிற்சி, வாழ்க்கை முறை, உடல் நலனைப் பேணுவதற்கான ஒரு முறையாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ராமகிருஷ்ணா ராவின் யோகா பற்றிய ஆய்வுகள், நினைவாற்றலை அதிகரிப்பதுடன் மன ஆரோக்கியத்திற்கு யோகா உதவுவதாகக் கூறுகின்றன.

Ancient India: There is much evidence that India has excelled in medicine since ancient times. And mind science and yoga too...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR-ஐ கண்டித்து Vijay ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கக் கூடாது! - Tamilisai Soundararajan

இன்று முதல் புதிய நேரத்தில் இரு தொடர்கள்!

இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு! பிகார் தேர்தல் காரணமா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

பிரபஞ்சத்தின் ஒரே அழகி... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT