கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் ஷா 
சிறப்புக் கட்டுரைகள்

நள்ளிரவில் கடத்தப்பட்ட கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் ஷா! கவிதைதான் குற்றம் - 20

கவிதைகளால் சிறைப்பட்டவர்களின், துயருற்றவர்களின் தொடர் - கவிதைதான் குற்றம். கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் ஷா பற்றி...

இராஜ முத்திருளாண்டி

நேரம்: இரவு 1 மணி,

நாள்: சற்றுமுன்தான் 14 மே கரைந்தது; 15 மே, 2024 உதயம்.

இடம்: பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் ஒரு அமைதியான குடியிருப்புப்பகுதி.

நிகழ்வு: கருப்புக் கார் ஒன்று - காதலியின் காதருகே ரகசியம் சொல்லவரும் காதலன்போல ஓசையில்லாமல் மெல்ல ஊர்ந்து வந்து ஒரு வீட்டின் வாசலைச் சற்று கடந்து நிற்கிறது; காத்திருக்கிறது.

சிறிது நேரத்தில் 38 வயது மதிக்கத் தக்க நபரொருவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். வந்து வீட்டருகே தனது வாகனத்தை நிறுத்துகிறார்.

நேரங்காலமில்லாத தனது அன்றாடப் பணியில்- அன்றைய நாளில் இரவு விருந்தொன்றின் காரணமாகக் கூடுதல் -தாமதமாக வீடு திரும்பிய அந்த நபர், தனது வீட்டருகில் அகால நேரத்தில் கார் ஒன்று நிற்பதைக் கண்டு திகைத்துக்கொண்டே, தனது வீட்டின் காம்பவுண்ட் கேட்டைத் திறக்க முற்படுகிறார். குகைக்குள் இருந்து புலிகள் சரேலென்று பாய்ச்சலாகப் பாய்ந்து வெளிவருவதுபோல, காத்திருந்த கருப்புக் காருக்குள்ளிருந்து நான்கு பேர் வெளிப்போந்து, காம்பவுண்ட் கேட்டைத் திறக்க முற்பட்டுக் கொண்டிருந்த நபர்மேல் பாய்கிறார்கள்.

இதற்கிடையில், அந்த நபரின் மனைவியும் குழந்தைகளும் இருசக்கர வாகனம் வந்து நிறுத்தப்பட்ட வழக்கமான அரவங்கேட்டு வீட்டின் வாயிற்கதவைத் திறந்தனர். கதவைத் திறந்த பெண், அவருடன் நின்ற இரு குழந்தைகள் கண்ணெதிரே, வீட்டிற்குள் வரவேண்டிய அப்பெண்ணின் கணவரைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நான்கு நபர்கள் வலுக்கட்டாயமாகத் தள்ளிக்கொண்டு சென்று, காருக்குள் நுழைத்ததும் பறந்துவிட்டது அந்தக் கருப்புக்கார்.

‘அப்பா, அப்பா’ என்ற அந்தக் குழந்தைகளின் அழுகுரல், காரில் கடத்தப்பட்ட நபரது மனைவியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்து எழுந்து வெளியே வந்து பார்ப்பதற்குள் கருப்புக் கார் கிளப்பிச் சென்ற புழுதியும்கூடபடிந்து மடிந்து விட்டது.

கண்முன் நடந்த இந்தக் காட்சி விளைவித்த அதிர்ச்சியில் செய்வதறியாது பதற்றத்தோடு, தவிப்போடு தன் குழந்தைகளோடு வீட்டுவாயிலில் உறைந்து, நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் கரிசனத்தோடு சென்று விசாரித்த பிறகுதான் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது சேதி. ‘தங்கள் பக்கத்து வீட்டுக்காரர், பத்திரிகைத் துறையில் வேலை பார்த்து வரும் அஹ்மத் ஃபர்ஹாத் ஷாவை யாரோ நான்கு பேர், நம்பர் பிளேட் இல்லாத கருப்புக் காரில் வலுக்கட்டாயமாக, அவரது குடும்பத்தார் கண்ணெதிரே, அந்த அகாலப் பொழுதில் கடத்திச் சென்று விட்டார்கள்’ என்பது அப்போது அவர்கள் அறிந்து கொண்ட செய்தி.

அக்கம் பக்கத்தில் அமைதியான, இனிமையான நபராக அறியபட்டிருந்த அஹ்மத் ஃபர்ஹாத், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதியில் (Pakistan Occupied Kashmir –PoK) பிறந்தவர் என்பதும், அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதும், கடைக்குட்டிக்கு தற்போதுதான் நான்கு வயது ஆகியுள்ளது என்பதும்; அவர் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்து வருபவர் என்பதும்; அவரது வேலை காரணமாக அடிக்கடி இரவு நேரங்களில் தாமதமாகத் தன் வீட்டுக்கு வருபவர் என்பதும் தெரியும்.

ஆனால், அருகாமையில் வசிப்போரில்- இலக்கியப் பரிச்சயம் உள்ள ஓரிருவர் தவிர- அஹமத் ஃபர்ஹாத் சிறந்த உருதுக் கவிஞர் என்பது பல பேருக்குத் தெரியாது. இப்போது அவருக்கு நடந்துள்ள மாதிரி ‘பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ குறித்து அரசு மீதும், காவல்துறை மீதும் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தனது எழுத்துகள் மூலம் முன்வைக்கும் மிகத் துணிச்சலான பத்திரிகையாளர் அவர் என்பதும் அருகாமையில் வசிப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. சரி, நாம் கொஞ்சம் அகமது ஃபர்ஹாத் ஷா பற்றி அறிந்து கொண்டு மேற்செல்வோமே... வாங்க...

இந்தியாவிலிருந்து 1947 இல் பிரிந்த காலத்தில் காஷ்மீரின் சில பகுதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. அவ்வாறு பாகிஸ்தான் ராணுவத்தால் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கும் பகுதிகளை ‘ஆசாத் ஜம்மு காஷ்மீர் (ஏஜேகே)’, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் (Pakistan occupied Kashmir-PoK ‘பிஓகே’) என்று பலவாறாக அரசியல் களத்தில் குறிப்பிடப்பட்டு வரும் வழக்கம் உள்ளது. அகமது ஃபர்ஹாத் ஷா, பிஓகே பகுதியில் (ஆசாத் ஜம்மு -காஷ்மீரின்) பாக் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில், சையத் முஹம்மது ஹுசைன்ஷா என்பவரின் குடும்பத்தில் 1986 இல் பிறந்தவர். இவருக்கு 7 சகோதரர்கள், 4 சகோதரிகள். ஃபர்ஹாத் திருமணம் ஆனவர்.

ராவல்பிண்டி நகரில் மனைவி (பெயர்: ஐன்நக்வி என்று அழைக்கப்படும் சயீதா உரூஜ்ஜைனப்) நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அஹ்மத்தின் சொந்த ஊர், அவர் தற்போது வசித்துவரும் ராவல்பிண்டி நகரிலிருந்து சுமார் 70 - 80 கி.மீ. தூரம்தான் என்பதால் அங்கு (பிஓகே) நிகழ்பவைகள் குறித்த விஷயங்களில் ஆர்வமும், ஈடுபாடும், கொண்டிருந்தார்.

அஹ்மது 15 வருட அனுபவமுள்ள பத்திரிகையாளர், ஒரு புகழ்பெற்ற உருது கவிஞரும் ஆவார். ‘போல் நியூஸ்’ உள்பட 10-க்கும் மேற்பட்ட முக்கியமான பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் பணியாற்றியுள்ளார். இவரது கவிதைகளில் ‘கட்டாயமாகக் காணாமல் போதல்’ போன்ற அரசியல் கருப்பொருள்கள் மிகுந்து காணப்படும். (பாகிஸ்தானில், குறிப்பாக பிஓகே பகுதியில், 2011 முதல், வலுக்கட்டாயமாகக் காணாமல்போன சம்பவங்கள் குறைந்தது 10,078-க்கு மேல் இருக்குமெனப் பாகிஸ்தான் விசாரணை ஆணையப் (COIED) பதிவுகள் மூலம் அறியப்படுகின்றன.)

அஹ்மத் பாகிஸ்தானில் ஆயுதப்படைகளின் அரசியல் தலையீட்டை வெளிப்படையாக விமர்சிப்பவர். பிஓகே பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினரால் நடத்தப்படும் வன்முறை இரத்தக்களரிக்கு எதிராகக் கவிதைகள் மூலம் கண்டனக்குரல் எழுப்பி வருபவர். அண்மையில்கூட அங்கு நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து விளக்கமான செய்திகளை அவர் வெளியிட்டு வந்தார். அவரது மனித உரிமை செயல்பாடுகளுக்காக, அக்களம் நிற்போரிடையே அஹ்மத் நன்கு அறியப்பட்டவர். தனது பிறப்பிடமான  ஆஸாத் காஷ்மீர் பகுதி மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன்நிற்பவர்.

அப்பகுதியில் அடிக்கடி நிகழும் ‘காணாமற் போனவர்கள்’ பற்றிய செய்திகளை தனது பத்திரிகையில் வலுவாக எழுதுபவர். இதன் காரணமாகவே கடந்தகாலங்களில் இருந்தே ராணுவத்தரப்பிலிருந்து அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தார். ஆகவே, தமக்கும் குடும்பத்துக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக வீட்டின் நாலாபுறங்களிலும், வாயிலிலும் கண்காணிப்புக் கேமிராக்களை அமைத்து வைத்திருந்தார். (கண்காணிப்புக் கேமிராப்பதிவுகள், அவர் கடத்தப்பட்டதை பின்னர் நீதிமன்றத்தில் நிரூபிக்க பெரிதும் உதவின.)

அஹ்மத் தற்போது ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருக்கிறார், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கண்காணிப்பில் இருந்து வந்தார் என்பதையும், கடந்த ஆண்டு ஒரு விசாரணையின்போது அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்ட தகவலையும் அவருடைய மனைவி சயீதா உரூஜ்ஜைனப் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

“வாழ்க்கை

இயற்கையான,

தானே விளையும்

மாற்றங்களின் தொடர்ச்சி.

அவற்றை எதிர்க்காதீர்கள்,

அது துக்கத்தைத்தான் தரும்.

துக்கத்தைத்தான் தரும்.

யதார்த்தம் யதார்த்தமாகவே இருக்கட்டும்.

விஷயங்கள்... இயல்பாக...

எப்படி வேண்டுமானாலும்...

முன்னோக்கி ஓடட்டும்.”

என்பது அவரது வலைத்தளத்தில் ‘தன்னைப்பற்றி’ (About) என்ற பகுதியில் அவரெழுதி வைத்திருக்கும் உருதுக் கவிதையின் தமிழ்ப் பிழிவு.

இனி, கவிஞர் அகமது ஃபர்ஹாத் மே 14 / 15 சந்தியில் கடத்தப்பட்ட பின் நிகழ்ந்தவைகளை ஒரு கோர்வையாகப் பார்க்கலாம்...வாங்க...

பாகிஸ்தானில்’ நிகழ்ந்தவை, பிஓகே பகுதியில் நிகழ்ந்தவை என இருகள நிகழ்வுகளாக நாம் கவிஞர் கைது விவகாரத்தைக் காண வேண்டியுள்ளது. அடிக்கடி இந்த இரு பகுதிகளுக்கும் நாம் மாறி, மாறிப் பயணித்து வரவேண்டியதாவும் இருக்கும்... வாங்க.

இந்நிலை ஏனெனில், ‘பாகிஸ்தான்’ என்ற நாட்டிலும், பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியிலுமுள்ள நிர்வாக அமைப்புகளுக்கிடையே உள்ள தீரா முரண்பாடுகள்; பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி அந்நாட்டில் அமையும் அரசாங்கத்திற்கும், அந்நாட்டின் ராணுவத்திற்கும் உள்ள “நித்ய கண்ட” உறவுச் சிக்கல் ஆகியவற்றின் வெளிப்பாடுகளால் ஏற்பட்டிருப்பவை. மேலும், இது, “பிஓகே பகுதியைத் தாங்கள் தன்னாட்சியுள்ள பிரதேசமாக வைத்திருக்கிறோம். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர், பிரதமர், சட்டப்பேரவை இருக்கிறது” என்று சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நடத்திவரும் கபட நாடகத்தின் மூலக்கதைப் பகுதியுமாகும்! (உண்மையில், பிஓகே பகுதியில் நடைபெறுவது முழுக்க முழுக்கப் பாகிஸ்தான் ராணுவத்தின் தர்பாரே!)

முதலில், ‘பாகிஸ்தானில்’ நிகழ்ந்தவை (இஸ்லாமாபாத் நீதிமன்ற நிகழ்வுகள்)

கவிஞர் கடத்தப்பட்ட சிலமணி நேரங்களிலேயே... மே 15 அதிகாலை 4 மணிக்கே அஹ்மத்தின் மனைவி சயீதா உரூஜ்ஜைனப் தங்கள் வசிப்பிடத்திற்குரிய லோஹெபர் காவல் நிலையத்திற்கு வீட்டில் பதிவான சிசிடிவி கேமிராப் பதிவுகளுடன் சென்று புகாரளித்தார். ஆனால், காவல் நிலைய அதிகாரிகள் புகாரைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

லோஹெபர் காவல் நிலையத்தில் கவிஞரின் மனைவி ஜைனப் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளப்படாததால், மே 15 காலையிலேயே, நீதிமன்ற அலுவல் நேரத்தில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் வழக்குரைஞர் இமான் ஜைனப் மசாரி - ஹசீர் மூலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

தனது கணவரை விடிவதற்குமுன் சிலர் வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாகவும் ராணுவ உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) மீது தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகவும் புகார் தெரிவித்து, ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. தன் கணவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் காணாமல் போனதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு விசாரிக்கவும் அவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் ஜைனப் தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு அடுத்தநாளே (16 மே) உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மொஹ்சின் அக்தர் கயானி முன் விசாரணைக்கு வந்தது. ஃபர்ஹாத்தின் மனைவி, ஐ.எஸ்.ஐ தனது கணவரைக் கடத்தியதாகக் கூறிய ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொண்டது. முதலில், லோஹெபர் காவல் நிலையத்திற்கு கவிஞரின் மனைவி ஜைனப் அளித்து, காவல் நிலையத்தில் மறுக்கப்பட்ட  புகார் உடனடியாகப்பதிவு செய்யப்படவும் அந்தப் புகாரின் மேல் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தது. அடுத்ததாக, கவிஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஐ.எஸ்.ஐ.க்கு உத்தரவிட்டது. ஐ.எஸ்.ஐ.யின் காவலில் ஃபர்ஹாத் இல்லை என்று பாகிஸ்தான் அரசுத் தரப்பு வலுவாக மறுத்தது. காவல் துறையும் எங்களுக்கு ஃபர்ஹாத் விஷயமாக எதுவும் தெரியாது எனக் கைவிரித்து விட்டது.

கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் தன் மனைவியுடன் ...

ஆக, கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் காணாமல் போயிருப்பதற்குக் காவல்துறையோ அல்லது வேறு எந்தப் புலனாய்வு அமைப்போ பொறுப்பேற்காத நிலையில், பர்ஹாத்தின் மனைவி தனது மனுவுடன் தாக்கல் செய்திருந்த, அவரது வீட்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி காமிராப் பதிகளின்படி, கவிஞர் அகமது ஃபர்ஹாத் வலுக்கட்டாயமாகக் காணாமல்போனவர், பாதிக்கப்பட்டவர் (Victim of Enforced Disappearance) என்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கயானி அறிவித்தார். அத்துடன் அடுத்த நான்கு நாள்களுக்குள் உளவு / புலனாய்வு அமைப்புகள் காணாமற்போன கவிஞர் ஃபர்ஹாத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

ஃபர்ஹாத்தின் வழக்கு பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாகக் காணாமல்போகும் சம்பவங்கள் மீது மீண்டும் நாடுதழுவியதொரு கவனத்தை ஈர்த்துள்ளது, வழக்கமாகப் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட நபர்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளாகக் காணாமல் போய்விடுவதாகவும், சிலநேரங்களில்- அலுவலர்களால் உறுதிசெய்யப்பட்ட விளக்கங்கள் ஏதுமில்லாமல்– எங்காவது இறந்துகிடப்பதாகக் கண்டறியப்பட்ட தகவல்கள் குடும்பங்களுக்கு எட்டுகின்றன. இத்தகைய காணாமல் போன நபர்கள் குறித்த சம்பவங்களில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று சாதிப்பதே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளின் மாறா வழக்கமாகியுள்ளது.

நீதிபதி கயானி, முதலில் விதித்த நான்கு நாள் கெடு காலத்திற்குள் எதுவும் நடக்கவில்லை. மே 24 இல் இந்த வழக்கு மீண்டும் அந்நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. கவிஞரை ஆஜர் செய்யாததால் கோபமுற்ற நீதிபதி ஒரு எட்டு பக்க எழுத்துப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்தார். அதில் நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் தரார், ஐ.எஸ்.ஐ, ராணுவ புலனாய்வு (எம்ஐ), புலனாய்வு பணியகத்தின் (ஐபி) இயக்குநர், பாதுகாப்பு, உள்துறை செயலாளர்கள் ஆகிய உயர் பொறுப்பிலுள்ள அனைவரும் இவ்வழக்கு தொடர்பாக மே 29 இல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். அன்று மே 29 புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை,

ஆனால், அட்டர்னி ஜெனரல் மன்சூர் உஸ்மான் அவான் மட்டும்  நீதிபதி முன் ஆஜராகி, அஹ்மத் ஃபர்ஹாத் தற்போது ஆஸாத் காஷ்மீர் காவல்துறையின் காவலில் (அதாவது பிஓகே / ஏஜேகே பகுதியில்) இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், பிஓகே / ஏஜேகேயிலுள்ள திர்கோட் காவல்நிலையத்தின் அறிக்கை நகல் ஒன்றையும் அட்டர்னி ஜெனரல் அவான் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதன்படி, திர்கோட் காவல்நிலையத்தில் அஹ்மத் ஃபர்ஹாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கவிஞர் ஆஸாத் காஷ்மீர் போலீசாரின் காவலில் ஜூன்  2 வரை வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவலளித்ததுடன், அந்த பகுதி இஸ்லாமாபாத் காவல்துறையின் அதிகார வரம்புக்கு வெளியே உள்ளதால் அவரை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலவில்லை என்று தெரிவித்தார். வெகு விநோதமாக இருக்கிறதல்லவா?

இவற்றையெல்லாம் கேட்டுப்பதிவு செய்துகொண்ட இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கயானி, தனது ஆணையாக, ‘கவிஞர் மே 15 முதல் காணாமல் போயுள்ளார், இதுவரை அவர் வீட்டிற்குத் திரும்ப முடியவில்லை’; அவரது கைது "சட்ட விரோதமானது"; எனவே, அவர் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டார் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவரை மீட்கத் தவறிவிட்டன என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, ‘பர்ஹாத் தனது வீட்டிற்குத் திரும்பும் வரை "காணாமல்போன நபர்" என்ற நீதிமன்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஏற்கனவே, நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஃபர்ஹாத் காணாமல்போனது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) இஸ்லாமாபாத்தில் உள்ள லோஹெபர் காவல்நிலையத்தில் பிரிவு 427 மற்றும் 365 பிபிசியின் கீழ்பதிவு செய்யப்பட்டுள்ளதால், லோஹெபர் காவல்நிலையத்தின் விசாரணை அதிகாரி கவிஞரின் வாக்குமூலத்தைப் பிரிவு 164 இன் கீழ் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும், அந்த வாக்குமூலம் வழங்கும் வெளிச்சத்தில் தன் விசாரணையைத் தொடரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அட்டர்னி ஜெனரல், நீதிபதியிடம் “தற்போது அஹ்மத் ஃபர்ஹாத் எங்கிருக்கிறார் என்ற தகவல் (அதாவது அவர் பிஓகே பகுதி, திர்கோட் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்) நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டு விட்டதால், ஃபர்ஹாத் காணாமல் போனது குறித்த வழக்கை முடித்துவைத்து ஆணையிடுமாறு (நைஸாக) ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். ஆனால், நீதிபதி எதற்கும் மசியாமல், “ ஃபர்ஹாத் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் நாளில் வழக்கு முடிவடையும்” என்று உறுதிபடக்கூறி அட்டர்னி ஜெனரல் வேண்டுகோளை நிராகரித்தார், உண்மையான நீதியரசர் கயானி. வழக்கை ஜூன் - 7க்கு ஒத்திவைத்தார்.

[இந்த இடத்தில் காட்சி மாறுகிறது... இஸ்லாமாபாத் / பாகிஸ்தானிலிருந்து, பிஓகே எனப்படும் - ஆசாத் ஜம்மு - காஷ்மீர் (ஏஜேகே) எனப்படும் - பாகிஸ்தான் ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்கு வாங்க... அங்கே செல்லலாம்.

அதற்குமுன், கவிஞர், பத்திரிகையாளர், அஹ்மத் ஃபர்ஹாத் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட வழக்கில், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் எனப் பாகிஸ்தானுக்குள்ளும், திர்கோட், முஸாபராபாத் என, ஏஜேகே (பிஓகே) பகுதிக்கும் நம்மை மாறிமாறி அலையவைத்துக் கொண்டிருக்கும் அரசியல் சூழல், சட்ட நிலைப்பாடு (legal status) குறித்த பின்புலத்தை மிகச்சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

1947 இல் இந்தியா பிரிவினை செய்யப்பட்டு பாகிஸ்தான் தோற்றுவிக்கப்பட்டபோதே, மன்னராட்சியிலிருந்து வந்த காஷ்மீரின் மேற்கில் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் வசப்படுத்திக்கொண்டது. ஆனால், அரசியல் ரீதியாகப் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவில்லை. சொல்லப்படும் அரசியல் நிலைப்பாடு, 13,297 சதுர கி.மீ. பரப்புள்ள, சுமார் 40.3 லட்சம் மக்கள்தொகை கொண்ட  ஏஜேகே, பாகிஸ்தானின் ஒரு மாநிலமோ, அங்கமோ கிடையாது. பொருளாதார, நிர்வாக உறவுகளும், வெளிப்படையாக விளக்கப்படாவிட்டாலும், பிணைந்துதான் கிடக்கின்றன. வெளியில், 1947 முதல் பாகிஸ்தான் ஆசாத் ஜம்மு - காஷ்மீர் (ஏ.ஜே.கே) ஒரு தன்னாட்சி பெற்றிருக்கும் பிரதேசம் என்றே அறிவித்து வைத்திருக்கிறது. (சீனா, திபெத்தை வைத்திருப்பது போல.)

ஏஜேகே அரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட (?!) அதிபர், பிரதமர், சட்டப்பேரவை உண்டு. நம்புங்கள்.மேலும், காஷ்மீர் கவுன்சில், ஏஜேகே உச்ச / உயர்நீதிமன்றம் ஆகியவையும் கொண்டுள்ளது. 1949 இல் ஏஜேகேயுடன் பாகிஸ்தான் செய்து கொண்ட கராச்சி உடன்பாட்டின்படி ஏஜேகேயின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு முதலியன பாகிஸ்தானின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆக, முழுக்க முழுக்க பாகிஸ்தான் ராணுவமே அங்கு ஆள்வது. ஆசாத் என்றால் ‘சுதந்திரமான’ என்று பொருள். நல் முரண்! ]

பிஓகே / பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதி நிகழ்வுகள்:

அஹ்மத் ஃபர்ஹாத் நள்ளிரவில் ராவல்பிண்டியில் தன்வீட்டின் முன் கடத்தப்பட்டது மே 14 / 15 சந்தியில். சிசிடிவி ஆதாரம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் கவிஞரது மனைவியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமறிவோம்.

ஆனால், பிஓகே பகுதியிலிருந்து புதுக்கதை ஒன்று எழுதப்பட்டு வந்தது. கதை இதுதான்.:

அஹ்மத் ஃபர்ஹாத், மே 29 (கவனிக்க, மே 29) காலையில் பிஓகே பகுதியிலுள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக ஒரு காரில் வருகிறார். ஆசாத் காஷ்மீரில் உள்ள கோஹலா பாலம் அருகே காலை 7 மணியளவில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டு, அவரது அடையாள அட்டை கேட்கப்படுகிறது. காருக்குள் இருந்தவாறே, தனது அடையாள அட்டையைச் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்குத் தர மறுக்கிறார். அவர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். (கதை இப்படி சரியான திசையில் எழுதப்பட்டால்தானே, “அரசு / பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து, இடையூறு செய்ததாகக்” குற்றச்சாட்டு எழுதமுடியும்? அது சரி, கவிஞர் கடத்தப்பட்ட மே 14 / 15-க்கும், மே 29-க்கும் இடைப்பட்ட நாள்கள்? அது கதையில் ஓட்டையா? காவல்துறை அசட்டையா? அது பற்றியெல்லாம் கேட்கக் கூடாது, ஆமாம்.)

“ஆசாத் காஷ்மீரில் உள்ள திர்கோட் காவல்நிலையத்தில் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, பாகிஸ்தானிலிருந்து (பிஓகே) காஷ்மீரில் உள்ள தனது மூதாதையர் கிராமத்திற்கு செல்ல முயன்றபோது கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் போலீசாரால் மே 29 காலையில் கைது செய்யப்பட்டார்” என்று அரப்நியூஸ் என்ற நாளேடு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தச் செய்தியில் “ஆசாத் காஷ்மீரில் உள்ள கோஹலா பாலம் அருகே காலை 07:00 மணியளவில் ஃபர்ஹாத்தின் காரை போலீசார் நிறுத்தி அடையாளத்தைக் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் அதிகாரிகளுடன் தவறாக நடந்துகொண்டு அவர்களைச் சொற்களால் அவமானம் செய்ததாகவும், தாக்க முற்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பிஓகே தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ்,“அரசு/ பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து, இடையூறு செய்ததாக”, “அரசாங்க விவகாரங்களில் தலையிட்டதற்காக” ஃபர்ஹாத் கைது செய்யப்பட்டார் என்றும் அரப் நியூஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (எல்லாம் கதைப்படி, பிசகாமல்!)

‘பாகிஸ்தானின் ராணுவம், அதன் புலனாய்வு அமைப்புகள் எந்தவொரு விளக்கமும் இல்லாமல் அல்லது உரிய சட்டநடைமுறைகளைப் பின்பற்றாமல் எதிர்ப்பாளர்களைச் சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதாக உள்நாட்டிலும் பாகிஸ்தானுக்கு வெளயேயுள்ள நடுநிலையான மனித உரிமை அமைப்புகள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றன. வழக்கமான வாய்ப்பாடாக, ராணுவமும் உளவுத்துறைப் பிரிவுகளும் ‘இத்தகைய செயல்களில் தங்களுக்குத் தொடர்பு இல்லை’ என்றே கூறி மறுத்து வருகின்றன’ என்ற கருத்தையும் அந்த நாளேடு வழங்கியுள்ளது.

இதுபோக, மற்றொரு பயங்கரவாத வழக்கில் ஆசாத் காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்திலுள்ள சதார் காவல் நிலையத்தால் தேடப்பட்டுவந்த கவிஞர் அஹ்மத் அந்த வழக்கிற்காகவும் கைது செய்யப்பட்டிருப்பதாக அல் அஸீரா இணையதளத்தில் செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பின்னர், அஹ்மத்தின் மனைவி, குடும்பத்தார் வழக்குரைஞருடன் திர்கோட் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், அஹ்மத் ஃபர்ஹாத் அங்கு இல்லை. வேறொரு வழக்கின் விசாரணைக்காக முசைராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தவித்துக் கொண்டிருந்த குடும்பம் முசைராபாத்திற்கு விரைந்தது, பதினைந்து நாள்களாக பரிதவித்துக் கொண்டிருந்த அவரது மனைவியும் குழந்தைகளும், வழக்குரைஞரின் தீவிர முயற்சியால், சிறிது நேரம் ஃபர்ஹாத்தை அங்கு சந்திக்க முடிந்தது. ஃபர்ஹாத் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதான அறிகுறிகள் காணப்பட்டன. உடல் சோர்வுடன், நலங்குறைந்தும் காணப்பட்டார்.

கூடுதல் செய்திகளாகக் இணையப் பரப்புகளிலிருந்து கிடைத்திருப்பவை: அஹ்மத் தான் கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்த்தும் தன்னைப் பிணையில் விடுவிக்குமாறும் முசைராபாத்திலுள்ள ஆசாத் ஜம்மு - காஷ்மீர் (ஏஜேகே) உயர்நீதிமன்றத்தில் தன் மனைவி அழைத்து வந்திருந்த வழக்குரைஞர் மூலம் மனுச்செய்தார். அம்மனு, ஜூன் 4 இல் நிராகரிக்கப்பட்டது.

(காட்சி இஸ்லாமாபாத்துக்கு மாறுகிறது...வாங்க)

அஹ்மத் ஃபர்ஹாத் கடத்தப்பட்ட நாளிலேயே அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்ததை அறிவோம் நாம்.

இரண்டு நாள்கள் கழித்து கடத்தப்பட்ட அவரது கணவர் அஹ்மத் ஃபர்ஹாத்தின் வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து மனைவிக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அதில் “தான் விடுதலையாகி வெளியில் வரவேண்டுமானால், முதலில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற வேண்டுமென்றும் இல்லாவிட்டால் தான் வெளியே வரமுடியாது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைப் படித்த உடனேயே கவிஞரின் மனைவி “இந்தச் செய்தி வற்புறுத்தலால் அனுப்பப்பட்டிருக்கிறது “என்பதை யூகிக்க முடிந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக (ஒப்புக்கு) ஒரு மனுச்செய்து அதன் நகலைத் தனக்குத் தகவல் வந்த அதே வாட்ஸ்ஆப் நம்பருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், எந்த எதிர்வினையும் அம்முனையிலிருந்து நிகழவில்லை; அஹ்மத் ஃபர்ஹாத் விடுதலையாகி வீடுவரவும் இல்லை. இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வாபஸ்பெறச் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேயில்லை. (நல்லதாகப் போயிற்று!)

கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் ஷா

வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு, நீதிபதி கயானி தனது எழுத்துப்பூர்வ தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தார். "தலைமை நீதிபதி தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய அமர்வை அமைக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜூன் 7-க்கு ஒத்திவைத்ததோடு இங்கு காட்சி ’கட்’ செய்யப்பட்டு, காட்சி மீண்டும் முசாபராபாத்துக்கு மாறுகிறது. வாங்க... அங்கே.

அஹ்மது ஃபர்ஹாத்தை முசாபராபாத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அதன் விசாரணை முடிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அகமது ஃபர்ஹாத்தின் போலீஸ் காவல் முடிந்த பின்னர் அவரை வழக்கமான சிறைக்கு மாற்றவும், ஜூன் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் அவரை மீண்டும் ஆஜர்படுத்தவும் ஏஜேகே பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஜூன் 4 இல் பிணைகேட்டு கவிஞர் முசாபராபாத்திலுள்ள ஆசாத் ஜம்மு - காஷ்மீர் (AJK) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது வரை, இதற்கு முந்தைய முசாபராபாத் காட்சியில் கண்டது நினைவிருக்கும்.

2024 ஜூன் 14 இல் முசாபராபாத், ஆசாத் ஜம்மு - காஷ்மீர் (AJK) உயர்நீதிமன்றம் (திரைப்படங்களில் இறுதிக்காட்சியில்  வில்லன் மனந்திருந்திவிடுவதுபோல) பத்து நாள்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட- பிணையில் விடுதலை செய்யப்படக் கவிஞர் அஹ்மத் கோரிய – வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக - கவிஞரையே ஆச்சரியப்படுத்தும் –ஒரு முடிவை அறிவித்தது. பிணைத்தொகை ரூ. 2 லட்சம் (பாகிஸ்தான் கரன்ஸியில்) என்றும், தொடர்ந்து நடக்கவுள்ள விசாரணைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. முன்னதாக, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஜாமீன் பத்திரத்தைக் கவிஞரது குடும்பத்தார் அளித்த பின் ஃபர்ஹாத்தின் ஜாமீன் மனுவை ஏ.ஜே.கே நீதிமன்றம் அங்கீகரித்தது. கைது செய்யப்பட்டதிலிருந்து பல வாரங்களாகச் சிறையில் இருந்த கவிஞர், விடுதலையான பின்னர் இஸ்லாமாபாத்திற்கு புறப்பட்டுச் சென்றார் என்று அல்ஹசீரா செய்தி தெரிவிக்கிறது.

ராவல்பிண்டியில் 2024 மே 14 / 15 நள்ளிரவில் கடத்தப்பட்டுப் பின்னர் ஆசாத் காஷ்மீரில் மே 29 இல் கைது செய்யப்பட்டதான புனைவில் கவிஞர்- பத்திரிகையாளர் அஹ்மத் ஃபர்ஹாத் ஒரு வழியாக 2024 ஜூன் 14 இல் ஏஜேகே உயர்நீதிமன்றத்தில் ரூ. 2 லட்சம் கொடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார், தொடர் விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளோடு.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் கவிஞரது மனைவி சயீதா உரூஜ்ஜைனப் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு 2024 ஜூன் 7-க்கு ஒத்திவைக்கப்பட்டதோடு நிற்கிறது.

கவிஞர் ஃபர்ஹாத் கைது செய்யப்பட்டிருந்த நாள்கள் குறைவுதான் என்றாலும் நள்ளிரவில் குடும்பத்தினர் கண்முன்னே பதைபதைக்கப் பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டது; பதினைந்து நாள்கள் எங்கிருந்தார் என்று தெரியாத மர்மம்; திடீரென மே 29 இல் ஆஸாத் காஷ்மீர் பகுதியில் ஒரு சோதனைச் சாவடியில் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டதான புனைவு, பின்னர் வேறு சில சதி வழக்குகளில் முஸாபராபாத்தில் கைது என்ற கதைத் திருப்பம்; அங்கு நீதிமன்றம் முதலில் பிணை மறுத்து, அதன்பின்னர் தானாகவே பிணையளித்த திடீர் கிளைமாக்ஸ் என மர்மத் திரைப்படம்போல விரிந்திருக்கிறது இந்த வழக்கு.

சரி, கவிதைதான் குற்றம்?

பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி அஹ்மத் ஃபர்ஹாத் எழுதிய கவிதையால் கோபமுற்ற ராணுவம்தான், அவரைப் பாகிஸ்தான் பகுதியில் நள்ளிரவில் கடத்திப் பதினைந்து நாள்கள் ‘நன்கு கவனித்து’ அதன்பின்  இஸ்லாமாபாத் நீதிமன்ற நீதிபதி கயானியின் கடுமையான நிலைப்பாட்டால் அதிர்ந்து, ஆஸாத் காஷ்மீர் பகுதி வழக்காக அதனை மாற்றிப் புனைந்து நீதிமன்றமே பிணையை முதலில் மறுத்துப் பின்னர் வழங்கியதாக ஜோடனை செய்திருக்கிறது என்று உள்விவரங்களறிந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

முதற்பார்வையில் (prima facie) கவிதைதான் குற்றம். எந்தக் கவிதையில் என்ன குற்றம் என்று அறிவிக்கப்படாத இன்னொரு வழக்காக இது நீள்கிறது.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலும் ஆசாத் காஷ்மீர் முஸாபராபாத்திலும் உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் இன்னும் முடித்துவைக்கப்படவில்லை. (அஹ்மத் ஃபர்ஹாத் வழக்கு இரண்டாம் பாகத்திற்கான விதை பதிக்கப்பட்டுள்ளது.) ஒருவேளை அப்போது தெரியலாமோ, அஹ்மத்தின் எந்தக் கவிதை குற்றம் என்பது அல்லது கவிதையில் என்ன குற்றம் என்பது?

**

[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை அளித்த பொதுத்துறை வங்கிகள்!

மலர் வாசம்... வாமிகா கேபி!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

இளஞ்சுடர்... ராஷி கன்னா!

தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

SCROLL FOR NEXT