நமது நிருபர்
தில்லி செங்கோட்டைக்கு அருகே திங்கள்கிழமை நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பழைய கார் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் உரிமையாளரிடம் இருந்து இரண்டு பேருக்கு கைமாறி பிறகு நாசவேலைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வாகனத்தின் ஆவணங்களில் முதல் உரிமையாளர் பெயரே பதிவாகியிருப்பதால் அவரை காவல் துறையினர் விசாரணைக்காகப் பிடித்து வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் பழைய வாகனம் வாங்கும்போது வாடிக்கையாளர் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் இத்தகைய சட்ட சர்ச்சைகளில் சிக்காமல் தவிர்க்க முடியும்.
ஒரு வாகனம் விற்கப்பட்டவுடன் அது தொடர்பான பதிவுச்சான்றிதழில் உரிமையாளரின் பெயர் முறைப்படி வட்டார போக்குவரத்து அலுவலரின் அலுவலகத்தில் மாற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறை நிறைவு பெறும்வரை யாருடைய பெயரில் வாகனம் பதிவாகியுள்ளதோ அவரே அதற்கு சட்டப்படி முழு பொறுப்புடைமை உள்ளவர் ஆவார்.
இதில் எழும் சில சந்தேகங்கள், நாம் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பதைப் பார்ப்போம்.
ஒரு வாகனம் முறைப்படி விற்கப்படாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் வரும்?
வாகனம் ஒருவேளை விபத்துக்குள்ளானாலோ, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆன்லைன் அபராதத்தொகையை கட்டத் தவறினாலோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போக்குவரத்து காவல்துறையினரும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரையே பொறுப்புடைமையாக்கி நடவடிக்கை எடுக்க சட்டம் வகை செய்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கூட செலுத்த நேரிடலாம். ஒருவேளை விற்கப்பட்ட வாகனம் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டால், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையாளர் மீதே சட்ட நடவடிக்கை பாயும்.
வாகன விற்பனையாளரின் அத்தியாவசிய சரிபார்ப்பு பட்டியல் என்னென்ன?
வாங்கும் நபரின் வசிப்பிட சான்று (ஆதார் அட்டை அல்லது அரசு ஆவணம்), அடையாளச்சான்று, பான் கார்டு போன்றவற்றின் அசல் அட்டையை வாங்கிச் சரிபார்க்க வேண்டும். இவை மூன்றும் வாகனத்தை வாங்கும் நபரின் ஆவணங்களோடு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். வாகனத்தை வாங்குபவராக இருந்தால் அதன் அனைத்து நிலுவை அபராதத்தொகை, சாலை வரி போன்றவை செலுத்தப்பட்டுள்ளதா என்பதை போக்குவரத்துத் துறையின் வலைதளத்திலும் நகர போக்குவரத்து காவல் துறை வலைதளத்திலும் வாகன பதிவெண்ணை வைத்து சரிபார்த்துக் கொள்ளவும்.
வங்கிக்கடன் மூலம் வாகனம் வாங்கப்பட்டிருந்தால் அந்தக் கடனை அடைத்து வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்கக் கோரவும். பிறகு வாகன பதிவுச்சான்றிதழில் அந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பெயர் அகற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வாகனத்தை விற்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?
உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமோ இறுதி உரிமையாளராக இருக்கும் ஒருவரிடமோ காரை விற்பது எப்போதும் நல்லது. வாங்கும் நபரின் முழு விவரங்கள் ஆர்டிஓ படிவங்களில் இருந்தால் மட்டுமே அதில் கையெழுத்திடுங்கள். வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திடக்கூடாது.
வாகனத்துக்கான காப்பீட்டை ரத்து செய்து (என்சிபியுடன்) புதிய உரிமையாளரிடம் சொந்த காப்பீட்டை வாங்கும்படி கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதேபோல, புதிய உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வசிப்பிட சான்றின் நகல்களை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட தேதியில் வாகனம் அவருக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் வாங்குபவர் கையொப்பமிடுவதையும் விற்கப்படும் வாகனத்தை குறிப்பிட்ட தேதிக்குள் (அதிகபட்சமாக 30 நாள்களுக்குள்) தனது பெயருக்கு அவர் மாற்றிக்கொள்வார் என்றஉத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக பெறவும். அத்துடன் விற்பனை பேரம் இறுதி செய்த ஆவணத்தில் இரு தரப்பிலிருந்தும் இரு சாட்சிகள் தங்களுடைய முகவரியைக் குறிப்பிட்டு கையொப்பமிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இதற்கு எந்தவொரு இடைத்தரகரையும் அணுகக்கூடாது. அரசு அங்கீகரித்துள்ள ஸ்கிராப் வியாபாரியிடம் மட்டுமே பழைய வாகனத்தை வழங்க வேண்டும்.
அப்படி செய்தால் வாகனத்தின் இரும்பு எடைக்கு ஏற்ப அரசு நிர்ணயித்த கட்டணமும் உங்களுக்குக் கிடைக்கும்.
விரிவான தகவல்களுக்கு கீழ்கண்ட வலைதளத்தைப் பார்க்கவும்:
https://vscrap.parivahan.gov.in/vehiclescrap/vahan/welcome.xhtml.
அத்தியாவசிய ஆவணங்கள்
• அசல் பதிவுச் சான்றிதழ் (ஆர்சி) ஆர்சி புத்தகம் /அட்டை
• செல்லத்தக்க காப்பீட்டு பாலிசி அல்லது காலாவதியான பாலிசி நகல்
• மாசுக் கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ்
• அடையாள மற்றும் முகவரிச் சான்று, ஆதார் அட்டை, பான் அட்டை போன்றவை
• வாகன சேசிஸ் எண்ணின் தட்டு அல்லது தெளிவான தோற்றம்
• (பென்சிலால் உரைத்து சேசிஸ் எண்ணைப் படிவத்தில் பதிவு செய்தல்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.