அண்ணாமலை பல்கலைக்கழகம்.  
சிறப்புக் கட்டுரைகள்

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

விரைவில் நூற்றாண்டு காண உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்திய பிறகும் அங்கு நீடித்துவரும் பேராசிரியர்கள், ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

ஜி சுந்தரராஜன்

விரைவில் நூற்றாண்டு காண உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்திய பிறகும் அங்கு நீடித்துவரும் பேராசிரியர்கள், ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகம் திசை தெரியாமல் பயணித்து வருகிறது.

ஆசிய கண்டத்திலேயே முதல்முறையாக தமிழ் மொழி காக்கவும், தமிழிசை போற்றவும் தொடங்கப்பட்டு கலை, அறிவியல், கல்வியியல், மொழியியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் என பல்துறை படிப்புகளோடு ஆலமரம் போல கிளை பரப்பிய சிறப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

ஆனால், 1929-ஆம் ஆண்டுமுதல் இன்று வரை லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இந்த உயர் கல்வி நிறுவனத்தின் இன்றைய நிலை இலக்கும் திசையும் தெரியாததாக உள்ளது.

1996 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகக் குளறுபடிகள், மிகைப்பணி நியமனம், தவறான நிதி மேலாண்மை மற்றும் ஊழல் முறைகேடுகள் சர்ச்சையில் இந்தப் பல்கலைக்கழகம் சிக்கியது. முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில், அதன் விளைவாக தவறு செய்யாத ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகத்தை 2013-ஆம் ஆண்டில் தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் தமிழக அரசு கொண்டு வந்தது. இருப்பினும் இன்றளவும் அங்கு நிலவும் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்கிறது.

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி. சுப்பிரமணியன் கூறியதாவது: 2016-ஆம் ஆண்டுமுதல் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களில் ஒப்பந்த முறையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இப்போது பல்கலைக்கழகத்தில் ஏராளமான பேராசிரியர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சென்னையில் அமைக்கப்பட்ட சில வாரங்களில் சேதமடையும் சாலைகள்!

கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு முழுவதுமாகப் பணி நீட்டிப்பு வழங்காமல் நிதியை மிச்சப்படுத்தும் நோக்கில் நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக, கணிதம், புள்ளியியல், பொருளாதாரவியல், வரலாறு மற்றும் தமிழ்த் துறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அதிக மாணவர்களை ஒரே அரங்கில் அமர வைத்துப் பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் கவனிப்புத் திறன் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க பணி நீட்டிப்பைத் தொடர்தல் மற்றும் பணிநிரவலில் சென்ற ஆசிரியர்களைத் தேவைக்கேற்ப திரும்ப அழைத்தல் முறையைச் செயல்படுத்தலாம்.

பல்கலைக்கழகத்துக்கு வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிற்றுண்டி நிலையம் இல்லை. அரசுக் கல்லூரிகளில் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிற்றுண்டி நிலையங்கள் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக அரசு, பல்கலைக்கழகங்களிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தலாம் என்றார்.

யோசனை: கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.முத்து வேலாயுதம் கூறுகையில், ஆசிரியர்களுக்கான காலமுறை பதவி உயர்வுகள் 2019-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்படவில்லை. ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகை, முனைவர் பட்ட ஊக்கத்தொகை, காலமுறை பதவி உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களைப் போலவே ஊழியர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

கடந்த 40 ஆண்டுகளாக ஊழியர்கள் பெற்று வந்த தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைக் குறைக்கும் முயற்சி ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

பல்கலைக்கழக காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, அயல் பணி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைத் திரும்ப அழைப்பது மற்றும் மீதமுள்ள அயல் பணி ஆசிரியர் மற்றும் ஊழியர்களை அவர்கள் தற்போது பணிபுரியும் அரசுத் துறைகளிலேயே உடனடியாக உள்ளெடுப்பு செய்வதே, தற்போதுள்ள நிதி நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வாகும் என்றார்.

ஓய்வூதியதாரர்கள் பாதிப்பு: ஊழியர் சங்கத் தலைவர் அ.ரவி தெரிவித்தது: ஓய்வு பெறும் ஆசிரியர் - ஊழியர்கள் ஓய்வூதிய பணப் பயன்களைக் கொண்டு தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம், மருத்துவச் செலவினங்கள் ஆகியவற்றை சமாளிக்கலாம் என்ற கனவு பொய்த்துப்போனது. ஓய்வு பெற்று 10 மாதங்கள் கடந்தும்கூட ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஏறத்தாழ 2 ஆண்டுகள் கடந்தும்கூட 50% பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு போன்ற பல ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க இயலாத நிலை உள்ளது. மீதமுள்ள 50% பணப் பலன்கள் கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்படவே இல்லை. சிலர் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்குள்ளாகவே இறந்து போயுள்ளனர்.

தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க நிதி ஒதுக்கி ஓய்வூதிய பணப் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட வேண்டிய கல்விக் குழுக் கூட்டம் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆட்சி மன்றக் குழு மற்றும் கல்விக் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முறை நடைமுறையில் இல்லை. அக்குறையைக் களைய வேண்டியது அரசின் தலையாய கடமை என்றார்.

இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும்போது தன்னிறைவு பெற்ற தகைசால் பல்கலைக்கழகமாக சிறந்து விளங்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Even after the government took over Chidambaram Annamalai University, the ongoing problem of professors and staff has not been resolved.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் பலி: அவதூறு பரப்பி கைதானவர்கள் பேசும் விடியோ! | TVK | Vijay

எனக்கு மரியாதை வேண்டாமா? சிம்பு குறித்து விஜய் சேதுபதி!

விலக மறுக்கும் திரைகள்

SCROLL FOR NEXT