தவெக தலைவர் விஜய். 
சிறப்புக் கட்டுரைகள்

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

திரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.

தினமணி செய்திச் சேவை

ஈ.ஆர்.ஈஸ்வரன்,

சட்டப்பேரவை உறுப்பினர்,

பொதுச் செயலர்,

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.

திரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம். அந்த வரிசையில் திரைத் துறையில் உச்சத்தில் இருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருக்கிறார்.

தமிழகத்தில் அரசியலுக்கு வந்த நடிகர்கள் எல்லாம் தங்களை எம்ஜிஆர்போல நினைத்துக் கொண்டனர். அதன்படியே, நடிகர் விஜய்யும் 1977}இல் எம்ஜிஆர் முதல்வர் ஆனதைப் போல தானும் முதல்வர் ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறார். ஆனால், முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு எம்ஜிஆர், 25 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றியிருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அதோடு, எம்ஜிஆர்}க்குப் பிறகு திரைப்பட கதாநாயகர்கள் யாரையும் தமிழகத்தை ஆளக்கூடிய ஆட்சியாளராக மக்கள் பார்க்கவில்லை என்பதைக் கடந்த கால வரலாறு தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலை இருக்கும்போது, ஒரு நடிகராக வெற்றி பெற்ற விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை யாரும் குறையாகச் சொல்ல முடியாது. அதேநேரம், அவரது அரசியல் வருகைக்குப் பிறகான செயல்பாடுகளை, பொதுமக்களும், பிற அரசியல் கட்சியினரும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

அவரது செயல்பாடுகள்தான் தவெகவுடன் இணைந்து களமாடுவதற்கு பிற கட்சிகளை ஈர்க்கும். ஆனால், இதுவரை அவ்வாறு எந்தவொரு கட்சியும் ஈர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் விஜய், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் தனது கருத்தை, நிலைப்பாட்டை பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஓரிரு பிரச்னைகளில் மட்டுமே கருத்தை தெரிவிக்கிறார். அவை அரசியல் லாபத்துக்கான செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு அழைத்து உதவி செய்யும் பண்பாட்டை இதுவரை நாம் கண்டதில்லை. இதுவரை ஒருமுறைகூட செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுதான் திரைத் துறையில் கோலோச்சிய அவர், அரசியல் கட்சியின் தலைவராக மாற முடியும்.

விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளிலும் தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதைச் சொல்லாமல், தான் எதிர்க்கத் திட்டமிட்டுள்ள இரு கட்சிகளை குறைகூறி விமர்சனம் செய்வதையே மீண்டும் மீண்டும் செய்திருக்கிறார் விஜய்.

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாத விஜய், அக் கட்சியை கொள்கை எதிரி என விமர்சனம் செய்வது நம்பும்படியாக இல்லை. எதிர்ப்பது போல் நடிப்பதாகவே தெரிகிறது.

களத்துக்கு இன்னும் வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த பிறகே, சென்னை பரந்தூருக்கு சென்று புதிய விமான நிலையத்துக்கு எதிராக வீரவசனம் பேசினார். அதற்குப் பிறகு எங்கேயாவது அதைப் பற்றி பேசினாரா?

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்று தமிழக முதல்வரையோ, பிரதமரையோ சந்தித்து வலியுறுத்தவில்லை. மாற்று இடத்தையும் சுட்டிக்காட்டவில்லை. இப்படி எதையுமே செய்யாமல் ஒரு திரைப்படத்தில் வசனத்தைப் பேசிவிட்டு, அடுத்த திரைப்படத்துக்கான வசனத்தை தயார் செய்வதைப் போல செயல்பட்டால் அரசியல் களத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது.

அவரது இரு மாநாடுகளையும் ஆய்வு செய்தால், பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை தரக்குறைவாக அழைத்ததை தவிர்த்து, வேறெந்தப் புதிய கருத்தும் இரண்டாவது மாநாட்டில் இல்லை. ஒரே மாதிரியாக நடந்து முடிந்துள்ளது. இப்போது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்க உள்ள விஜய், மாநாடுகளைப் போலவே பேசினால் மக்களிடம் எடுபடாது.

தனக்கு வரும் கூட்டத்தை நம்பி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என விஜய் மனக்கணக்கு போட்டால் அது ஏமாற்றமாகவே அமையும். முதலில் அரசியல் அங்கீகாரத்தைப் பெறுவதை இலக்காக வைத்து அவர் பயணிக்க வேண்டும். அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி அடையத் திட்டமிடுவதே எதார்த்தமாக இருக்கும். அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய ஊடக வெளிச்சத்தைப் பயன்படுத்தி மக்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அரசியல் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.

தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும். எதிர்ப்பு வாக்குகள் பிரதான எதிர்க்கட்சிக்கு சென்று, அந்தக் கட்சி ஆட்சியில் அமருவதும் வழக்கமானது. அதேநேரம் புதிய கட்சிகள் வரும்போது, இந்த எதிர்ப்பு வாக்குகள் பிரியும். தேமுதிக, மக்கள் நீதி மய்யம் வரிசையில் அத்தகைய வாக்குகளை தவெகவும் பெறக்கூடும்.

அதேபோல, மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வரும் கட்சிகளை விரும்பாமல் மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்குகள், நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாக்குகளை இம்முறை தவெகவும் பங்கிட்டுக் கொள்ளும் என்றே தெரிகிறது. எனது கணிப்பின்படி வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 7 அல்லது 8 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். இதை அடித்தளமாக வைத்து கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்தினால் தவெகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.

இப்போதைய சூழலில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள், மாற்றத்தை விரும்பும் வாக்குகள் ஆகியன பல கட்சிகளுக்கு பிரிந்து கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தவெக தனித்துப் போட்டியிடுவது திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்.

நாளை

கே.பாலபாரதி,

மத்தியக் குழு உறுப்பினர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT