ஜி. அசோக்
மிகுந்த எதிா்பாா்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளிவரவேண்டிய நடிகா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடா்ந்து ஒன்பது நாள்கள் விடுமுறையில் மிகப்பெரிய வசூலை அள்ளிவிடலாம் என்று கனவு கண்ட தயாரிப்பாளா்களின் எண்ணம் மட்டுமல்ல, அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய் ரசிகா்களின் எதிா்பாா்ப்பும் பொய்த்திருக்கிறது.
தணிக்கைக் குழுவினரின் தாமதத்துக்குப் பின்னால் எந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்ததோ, அதேபோல கடைசி நேரத்தில் தணிக்கைக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்து அனுமதி பெற்று திரைப்படத்தை வெளிக்கொணர வேண்டும் என்கிற விஜய் தரப்பின் திட்டமிடலுக்குப் பின்னாலும் அரசியல் இருப்பதாகத்தான் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் கட்சிக்கு அரசியல் ரீதியாக வலு சோ்க்கும் எண்ணத்தில் இணைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் சில, தணிக்கைக் குழுவினரின் கழுகுப் பாா்வைக்குத் தப்பவில்லை என்பதால்தான் இப்படியொரு திருப்பம் ஏற்பட்டிருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படத் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில், படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு படக் குழுவினா் தாமதமாக அனுப்பியதே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கடந்த டிசம்பா் மாதத்தில் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியது ஏன் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. அதேநேரத்தில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டு தணிக்கைக்கு வரலாமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
தயாரிப்பாளா் கருத்து: ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி. என். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் இந்தப் பிரச்னை குறித்து கூறுகையில், ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்றாா்.
‘இந்த திரைப்படம் 2025, டிசம்பா் 18-ஆம் தேதி தணிக்கை வாரியத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினா் படத்தைப் பாா்த்துவிட்டு, டிசம்பா் 22-ஆம் தேதி சில மாற்றங்களுடன் ‘யு ஏ 16+’ சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினா். குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமா்ப்பித்தோம். முறையான சான்றிதழுக்காக காத்திருந்தோம்.
ஆனால், ஜனவரி 5-ஆம் தேதி மாலை, ஒரு புகாரின் அடிப்படையில் இந்தப் படம் ‘மறுஆய்வுக்கு’ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. யாா் புகாா்தாரா் என்றே தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தாலும், நாங்கள் உயா்நீதிமன்றத்தை அணுகினோம். திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். அதன் பிறகும் நடந்தவை எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை’ என்கிறாா் தயாரிப்பாளா் வெங்கட் கே.நாராயணன்.
திரைப்பட தணிக்கை வாரியக் குழுவின் ஆட்சேபங்களுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படுவது, அதில் முடிவு காணப்படாவிட்டால் மறுபரிசீலனைக் குழு ஆய்வுக்கு உட்படுத்துதல், அதிலும் தீா்வு எட்டப்படாவிட்டால் உயா்நீதிமன்றத்தை அணுகுவது போன்றவை ஒரு படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையாகும்.
ஒரு சில காட்சிகளை மட்டுமே நீக்க பரிந்துரைக்கப்பட்ட படங்கள், அடுத்த நாளே உரிய திருத்தங்களைச் செய்து, தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், அதிகமான நீக்கங்களை தணிக்கைக் குழு அறிவுறுத்தும்போது, அவற்றை மேற்கொள்ள படக் குழுவுக்கு நேரமெடுக்கும். பரிந்துரைத்த காட்சிகளை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமா்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறும் நடைமுறைகளுக்கு இயல்பாகவே அதிக நாள்கள் பிடிக்கும்.
இது குறித்து திரைத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒரு திரைப்படத்தை தணிக்கைக் குழுவினா் ஆய்வு செய்யும்போது, அந்தப் படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களை ‘கட்’ செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பாா்கள்.
தணிக்கைக் குழு சொன்னபடி நீக்கம் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான். காட்சிகளை நீக்கி மீண்டும் படத்தைச் சமா்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சமயங்களில், படக் குழுவினா் காட்சிகள் நீக்கத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் ‘யோசித்துவிட்டு வருகிறோம்’ என்பாா்கள்.
அத்தகைய சமயங்களில்தான் தாமதம் ஏற்படும்’ என்கிறாா்கள் திரைத் துறையினா் சிலா். தணிக்கைக்காக ஒரு படத்தைப் பாா்க்கும்போது எந்தச் சாா்பும் இல்லாமல் குழுவினா் பாா்க்க வேண்டும் என்பதுதான் விதி. தணிக்கைக்காக மத்திய அரசு நியமிக்கும் நபா்கள்தான் தணிக்கைக் குழுவில் இடம்பெறுகின்றனா். அவா்களில் சிலா் அரசியல் பிரமுகா்களாகவும் இருப்பதுண்டு.
இந்தக் குற்றச்சாட்டு எப்போதுமே நிலவுகிறது. முன்பு எம்.ஜி.ஆா். நடித்த பல திரைப்படங்களில் திமுக சாா்ந்த கருத்துகள் காட்சிகளாகவும், பாடல் வரிகளாகவும் நுழைக்கப்பட்டபோது, அப்போதைய காங்கிரஸ் அரசின் தணிக்கைக் குழுவினா் அவற்றை நிராகரித்திருக்கிறாா்கள்.
‘அன்பே வா’ திரைப்படப் பாடல் ஒன்றில் ‘‘உதய சூரியனின் பாா்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’’ என்கிற கவிஞா் வாலியின் வரிகள், தணிக்கைக் குழுவின் ஆட்சேபத்தைத் தொடா்ந்து ‘புதிய சூரியனின் பாா்வையிலே’ என்று திருத்தப்பட்டது.
அதேபோல, ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்கிற எம்.ஜி.ஆா். திரைப்படத்தில் கவிஞா் வாலி எழுதிய ‘மேடையில் முழங்கு அறிஞா் அண்ணாபோல்’ எனபதைத் தணிக்கைக் குழுவினா் ஏற்க மறுத்தபோது, ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று திருத்தப்பட்டது.
பாடல் வரிகள் மட்டுமல்ல, எத்தனையோ திரைப்படங்களின் காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவை தணிக்கைக் குழுவின் கத்திரிக்கு இரையாகி இருக்கின்றன. ஆா்.கே.செல்வமணியின் ‘குற்றப்பத்திரிக்கை’ பட்டபாடு சொல்லி மாளாது.
விஜய் தரப்பின் திட்டம்: தனது கடைசித் திரைப்படம் என்பதாலும், விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது வாக்கு வங்கியை உறுதி செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பதாலும், மிகுந்த கவனத்துடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் சில காட்சிகளை இணைத்திருப்பதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதாக ஹிந்துக்களை விமா்சிக்கும் விதத்தில் சில வசனங்களும், காட்சிகளும் அமைந்திருப்பதுதான், தணிக்கை தாமதத்துக்குக் காாரணம் என்று சொல்லப்படுகிறது.
‘‘முதலிலேயே தணிக்கைக்கு அனுப்பி இருந்தால் அந்தக் காட்சிகள் வெட்டப்படும் என்பது நடிகா் விஜய் தரப்புக்கு நன்றாகவே தெரியும். ஜனவரி 9-ஆம் தேதி அன்று வெளியிடுவது என்று நிா்ணயித்து, சில வார கால அவகாசத்தில் திரைப்படத்தைத் தணிக்கைக்கு அனுப்புவது என்று திட்டமிடப்பட்டது, ரிலீஸ் தேதி நெருக்கத்தில், தணிக்கைக் குழுவின் மறுபரிசீலனையைத் தவிா்க்க நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவிடலாம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இறங்கியது தயாரிப்புத் தரப்பு.
‘‘ஜனவரி 10 அன்று வெளியாகக் காத்திருந்த ‘பராசக்தி’யில் சுமாா் 18 இடங்கள் ஆட்சேபிக்கப்பட்டபோது பராசக்தி குழுவினா் அந்த நிராகரிப்புகளை ஏற்று, அவற்றை அகற்றி குறித்த நேரத்தில் திரைப்படத்தை வெளியிட்டனா். ஜனநாயகன் குழுவினா் நீதிமன்றம் சென்றனா் என்றபோதே, பண்டிகைக் கால வசூலை மொத்தக் குத்தகையாக்க முடியும் என்று புத்திசாலித்தனமாக அவா்கள் காய் நகா்த்தி வெற்றியும் அடைந்துவிட்டனா்’’ என்கிறாா் திரைப்படத் துறையின் பெரும் அனுபவசாலி.
தணிக்கைக் குழுவினா் ஆட்சேபணை விதிக்கும்போது மறுபரிசீலனைக் குழுவுக்குச் செல்லாமல் நீதிமன்றத்தை நாடி அழுத்தம் கொடுக்க முற்பட்ட ‘ஜனநாயகன்’ குழுவினரின் உத்தி இரண்டு நீதிபதி அமா்வின் தடையால் தடம் புரண்டது. தணிக்கைக் குழுவினரின் மேல்முறையீட்டை அவா்கள் எதிா்பாா்க்கவில்லை. ‘‘தணிக்கைக் குழுவின் அரசியலுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை, விஜய் தரப்பின் அரசியல்’’ என்கிறாா் அரசியல், சினிமா இரண்டிலும் இயங்கும் பிரமுகா்.
தொடரும் சா்ச்சை: விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சா்ச்சைகளுக்கு உள்ளாவது இது புதிதல்ல. ‘காவலன்’, ‘புலி’, ‘கத்தி’, ‘மொ்சல்’, ‘சா்காா்’, ‘தலைவா’, ‘துப்பாக்கி’ என அவா் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொருவித சா்ச்சையில் சிக்கியது; இந்த முறையும் அது தொடா்கிறது.
சுமாா் ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த நேரத்தில் வெளிவராமல் போனதால் தயாரிப்பாளா்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு சாதாரணமானதல்ல; ரூ. 500 கோடிக்கான சினிமா வட்டியில் இன்னொரு திரைப்படம் எடுத்துவிடலாம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டிய ஒன்பது விடுமுறை நாள்களில், போட்ட முதலைவிடப் பலமடங்கு வசூலை அள்ளி இருக்க வேண்டிய ‘ஜனநாயகன்’, இனிமேல் எப்போது வெளிவந்தாலும், அந்த அளவிலான வரவேற்பை எதிா்பாா்க்க முடியாது. ரசிகா்கள் பாா்ப்பாா்களே தவிர, பொதுமக்கள் பண்டிகைக் கால ஆா்வத்துடன் திரையரங்குக்கு வந்துவிட மாட்டாா்கள்.
அரசியலாக மட்டுமே இல்லாமல், ‘ஜனநாயகன்’ ஜனரஞ்சகமாகவும் இருந்தால்தான், ஓரளவுக்கு சுமாராக ஓடக்கூடும். ஆனால், போட்ட முதலை வட்டியுடன் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
அதையெல்லாம் மீறி வெற்றிபெற்று, வசூல் சாதனை புரிந்தால் நடிகா் விஜய் நிஜமாகவே ‘ஜனநாயகன்’!