சுக்ரன்! பெண் கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் மாஸ் வழக்கறிஞராக விஜய்!
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக வரும் விஜய்யின் நடிப்பு பற்றி...
விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து, இயக்கிய ‘சுக்ரன்’ திரைப்படத்தில் மாஸ் வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய்.
யூத், பகவதி, கில்லி, திருப்பாச்சி என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், தனது தந்தைக்காக சுக்ரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்திருந்தார். ஆனாலும், விஜய் நடித்த கதாபாத்திரம்தான் சுக்ரன். அதுவேதான் படத்தின் பெயரும்கூட.
‘7 ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் நாயகனாக ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். நாயகி அனிதா ஹசனந்தானி. தற்போது நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிவரும் விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் படமும் இதுதான்.
Advertisement
Advertisement
இப்படத்தில் வரும் ‘சாத்திகடி போத்திகடி’, ‘சப்போஸ் உன்னை காதலிச்சு’ ஆகிய பாடல்கள் இன்னும் பலரின் விருப்பப் பட்டியலில் இருக்கின்றன.
கல்லூரி மாணவர்களான ரவி சங்கர் (ரவி கிருஷ்ணா) மற்றும் சந்தியா (அனிதா ஹசனந்தானி) காதலிக்கிறார்கள். ஆனால், சந்தியாவின் மாற்றாந்தாயாக வரும் நளினி, அவரது அண்ணன் மகனுக்கு சந்தியாவைத் திருமணம் செய்துவைக்க முயல்கிறார். இதனை அறிந்த ரவி சங்கரின் தந்தை கதாபாத்திரத்தில் வரும் நாசர், இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னையில் இறங்கியவுடன் நாசரைக் கொன்றதாகப் பொய் வழக்கில் ரவி சங்கர் கைது செய்யப்படுகிறார். காவல்துறை அதிகாரி ஸ்ரீமன், நீதிபதி குமாரன் மற்றும் அமைச்சரின் மகன் ஆகியோர் நாயகியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்.
பின்னர், அவமானம் தாங்க முடியாமல் ரவி சங்கரும் சந்தியாவும் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களைக் காப்பாற்றும் குற்றவியல் வழக்கறிஞராக விஜய் (சுக்ரன்), “தற்கொலை செய்துகொள்ளதான் அதிக தைரியம் தேவை, அந்த தைரியத்தை வாழ்வதில் காட்டுங்கள்” என்று ஊக்கமளிப்பார்.
அப்போது, திரைத்துறையின் தனது ஆரம்ப காலத் தோல்வியை வசனமாக பேசும் விஜய், “வெற்றி, தோல்வியெல்லாம் நிரந்தரமே இல்ல. நான் எனது ஆரம்ப காலத்தில் தொழிலைத் தொடங்கும்போது மிகப் பெரிய தோல்வி. எல்லாரும் என்னை ரொம்ப கேவலமா பார்த்தாங்க. சொந்தங்கள்கூட சொத்தைனு சொன்னாங்க. அன்னைக்கு அவமானம் தாங்காமா கடல்ல குத்திருந்தால் இன்னைக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கை கிடைத்திருக்காது” எனப் பேசியிருப்பார்.
இதையடுத்து, அனைத்தையும் மறந்து திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கும் ரவி சங்கர் - சந்தியாவின் மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. தனக்கான நீதியைப் பெற சந்தியா முயற்சிக்கும்போது, அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் என்று தவறான வழக்கில் காவல்துறை அதிகாரி ஸ்ரீமன் கைது செய்கிறார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் தவறான குற்றச்சாட்டுகளால் கோபமடையும் ரவி சங்கர், காவல்துறை அதிகாரி ஸ்ரீமன், நீதிபதி குமாரன், நாயகியின் சித்தி நளினி மற்றும் அமைச்சரின் மகனைச் சுட்டுக் கொல்கிறார்.
அங்கிருந்து தப்பிக்கும் அவர்களுக்கு சுக்ரன் அடைக்கலம் கொடுக்கிறார். ரவி சங்கர் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கு மட்டுமின்றி, அமைச்சர், அமைச்சரின் மகன், நீதிபதி ஆகியோரால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கையும் கையில் எடுத்து நீதி பெற்று கொடுக்கிறார் சுக்ரன்.
கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், படத்தின் மையக் கருவாக விலகும் விஜய்யின் தோற்றம், வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்தும் சுக்ரன் கதாபாத்திரத்துக்கு கம்பீரத்தைக் கொடுத்திருப்பார்.
இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, 2002-ல் வெளியான தமிழன் திரைப்படத்தில், சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் இளம் வழக்கறிஞராக விஜய் கலக்கியிருப்பார்.
சுக்ரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த அமைச்சருக்கு தண்டனை கோரி வாதாடும் விஜய், “மனித உயிர்களைக் கொலை செய்பவரைவிட, மனித உணர்வுகளைக் கொலை செய்பவரே கொடூரமான கொலையாளி”, “கற்பழித்தது அவர்களின் தேகத்தை அல்ல, தேசத்தை” என்றெல்லாம் பேசியிருப்பார்.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளியை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும் என்ற வாதத்தை சுக்ரன் முன்வைப்பார்.
வழக்கறிஞர் சுக்ரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதே விஜய், இப்போது தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க சிங்கப்பெண் அதிரடிப் படை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சுக்ரன் பட கிளைமேக்ஸ் காட்சியைப் போன்று, பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளும் கடுமையாகுமா?
Sukran - The film is average, but Vijay shines as a 'mass' lawyer who fights against the abuse of women
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.