தலையங்கம்

இரட்டைத் தலைமை!

காங்கிரஸ் கட்சியில், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வேறு வேறாக இருப்பதை அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் விமர்சனம் செய்தது முதல், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருப்பது சரியா, தவறா என்கிற விவாதம் தலைநகர வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.

ஆசிரியர்

காங்கிரஸ் கட்சியில், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வேறு வேறாக இருப்பதை அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் விமர்சனம் செய்தது முதல், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருப்பது சரியா, தவறா என்கிற விவாதம் தலைநகர வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி பல்வேறு பிரச்னைகளையும், ஊழல் தொடர்பான விவகாரங்களையும், நிர்வாக ரீதியிலான பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகக்கூடத் திட்டமிட்டே இப்படி ஒரு விவாதம் கிளப்பப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்தாலும், ஜனநாயகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இப்படியொரு விவாதம் தேவைப்படுகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், ஒருவேளை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்திய ஆட்சி ஏற்படுமானால் அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் இப்படியொரு பிரச்னை எழுப்பப்படுகிறது என்று தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கட்சித் தலைவர் வேறு, ஆட்சித் தலைவர் வேறு என்ற நடைமுறை ராகுல் காந்திக்குப் பொருந்தாது என்கிற முன்னறிவிப்பாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் முறைகேடுகளுக்கும், ஊழல்களுக்கும், தவறுகளுக்கும் பொறுப்பேற்கப் போவது பிரதமராகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால், இந்த முறைகேடுகளின் பின்னணியில் காங்கிரஸ் தலைமை இருந்திருந்தாலும்கூட, கட்சித் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாத சூழலைக் கடந்த ஒன்பதாண்டு "இரட்டைத் தலைமை' ஏற்படுத்தி இருக்கிறது. "இரட்டைத் தலைமை' என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டிருப்பதை தேவையற்ற விவாதம் என்று காங்கிரஸ் தலைமை புறந்தள்ளி இருந்தாலும், கடந்த 9 ஆண்டுகளாக நிர்வாக மையமாகப் பிரதமர் அலுவலகமும், அதிகார மையமாக காங்கிரஸ் தலைமையும் இருந்து வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

1885-இல் மும்பையில் உமேஷ் சந்தர் பானர்ஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது முதல், ஆண்டுதோறும் அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதன்முதலில் காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தொடங்கியது 1929-இல்தான். மோதிலால் நேருவைத் தொடர்ந்து காங்கிரஸ் அக்கிராசனராக, அதாவது, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பண்டித ஜவாஹர்லால் நேரு என்பது மட்டுமல்ல, தொடர்ந்து முதல் முறையாக இரண்டாண்டுகள் தலைவராகத் தொடர்ந்தவரும் அவர்தான் (1929, 1930).

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், பிரதமராகப் பண்டித நேரு இருந்தாலும், கட்சித் தலைவர்களாக ஆச்சாரிய கிருபளானி, பட்டாபி சீதாராமய்யா, புருஷோத்தம்தாஸ் தாண்டன் போன்றவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புருஷோத்தம்தாஸ் தாண்டனுக்கும், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் பல பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதுதான், கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் தனது கையில் இருக்க வேண்டும் என்கிற முடிவு பிரதமர் நேருவால் எடுக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் தொடர்ந்து கட்சித் தலைமையையும் ஏற்றிருந்த பிரதமர் நேரு, அது பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கு வழிகோலும் என்று உணர்ந்து 1955-இல் நடந்த ஆவடி மாநாட்டில் யு.என். தேபரைக் கட்சித் தலைவராக்கினார். தேபரைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, கே. காமராஜ் என்று கட்சித் தலைவர்கள் வேறாகவும் ஆட்சிப் பொறுப்பில் பிரதமர் நேருவும் தொடர்ந்தபோது, இப்போது திக்விஜய் சிங் குறிப்பிடுவதுபோல, இரட்டைத் தலைமையோ, இரட்டை அதிகார மையமோ ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தலைமை ஆட்சித் தலைமையையோ, ஆட்சித் தலைமை கட்சித் தலைமையையோ தனது தலையாட்டி பொம்மையாக அமர்த்தி, பொம்மலாட்டம் நடத்த முற்படவில்லை.

1969-இல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவுக்குப் பிறகும், 1977-இல் நடந்த தேர்தல் தோல்வி மற்றும் இரண்டாவது பிளவுவரை, இந்திரா காந்தியே கூட ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் வெவ்வேறாக இருப்பதைத்தான் விரும்பினார். ஜகஜீவன்ராம், சங்கர் தயாள் சர்மா, தேவகாந்த் பரூவா ஆகியோர் கட்சித் தலைவர்களாக இருந்தனர். இப்போது இருப்பதற்கு நேர் எதிர்மாறாக பிரதமரின் கைப்பாவைகளாக அவர்கள் செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்ததே தவிர, அதிகார மையமாகக் கட்சித் தலைவர்கள் செயல்படவில்லை.

1978க்குப் பிறகு சீதாராம் கேசரியின் இரண்டாண்டு பதவிக் காலத்தைத் தவிர, 2004 வரை கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒன்றாகவேதான் இருந்து வந்திருக்கிறது. கட்சி தன்னைவிட பலம் பொருந்தியதாகிவிடக் கூடாது என்கிற அச்ச உணர்வின் வெளிப்பாடுதான் பிரதமர் கட்சித் தலைமையையும் தனது கையில் வைத்துக் கொள்வது. ஆனால், அதுவே ஆரோக்கியமான வழிமுறை என்று கூறிவிட முடியாது.

முறையான கொள்கைகளை வகுப்பதும், அதைத் தனது கட்சியின் சார்பில் ஆட்சி நடத்துபவர் சரியாக நடைமுறைப்படுத்துகிறாரா என்பதைக் கண்காணித்து அவருக்கு வழிகாட்டுவதும் கட்சித் தலைமையின் பொறுப்பாக இருக்க வேண்டும். அந்தக் கட்சித் தலைமை நியமனத் தலைமையாகவோ வம்சாவழித் தலைமையாகவோ இல்லாமல், அடிமட்டத்திலிருந்து தொண்டர்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போதுதான், நாடாளுமன்ற ஜனநாயகம் நிஜமான மக்களாட்சியாக இருக்கும்.

அப்படி எதுவுமே இல்லாமல், அரசியல் என்பது பணக்காரர்களுக்காகப் பணக்காரர்களால் நடத்தப்படும் சூதாட்டமாகிவிட்ட நிலையில், திக்விஜய் சிங் சொல்வதுபோல அதிகார மையம் ஒன்றாக இருந்தால் என்ன, இரண்டாக இருந்தால்தான் என்ன? ஒன்று, இரண்டுமே குடும்பத்தின் கையில் இருக்கும். அல்லது, ஒன்று மற்றொன்றின் கைப்பாவையாக இருக்கும். எப்படி இருந்தாலும் அதனால் நமக்கோ தேசத்திற்கோ பிரயோஜனம் இருக்கப் போவதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT