தலையங்கம்

அவசரக் கோலம் ஏன்?

பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கும் தற்போது உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்த விழைவதற்கும் வேறுபாடு இருக்கிறது.

ஆசிரியர்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கும் தற்போது உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்த விழைவதற்கும் வேறுபாடு இருக்கிறது. முன்னது, அவசரத் தேவை. பின்னது அரசியல் தேவை.

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம், சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் ஆறு மாதத்துக்கு அவசரச் சட்டம் கொண்டு வரலாம் என்கிற நம்பிக்கைதான். தேர்தலுக்கு முன் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து 120 கோடி மக்களில் 80 கோடி பேருக்குப் பயன்தரும் என்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நோக்கம். கடந்த முறை "சோனியா காந்தியின் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்' என்று விளம்பரப்படுத்தியதுபோல இப்போது "சோனியா காந்தியின் உணவுப் பாதுகாப்புச் சட்டம்' என்று பிரசாரத்தை முடுக்கிவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தேறிய ஊழல்களை ஓரம்கட்டுவது என்பதுதான் காங்கிரஸின் தேர்தல் உத்தி.

அவசரச் சட்டம் என்பது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட முடியாத தருணங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக அரசியல் சாசனம் ஆட்சியாளர்களுக்குத் தந்திருக்கின்ற ஒரு ஆயுதமே தவிர, விவாதமே இல்லாமல் சட்டங்களைப் பின்வாசல் வழியாகக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே விவாதக் கலாசாரம்தான். எந்த ஒரு சட்டமும் அவையில் முறைப்படி விவாதிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கும் குற்றம் குறைகளை கருத்தில்கொண்டு தக்க மாற்றங்களுடன் பெரும்பான்மை ஒப்புதல் பெற்று அமல்படுத்துவதுதான் சரியான முறையாக இருக்கும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது சோனியா காந்தி முன்வைக்கும் ஒரு திட்டம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு திட்டம். மழைக்காலக் கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்தை முடக்கி இந்த மசோதாவை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பது நியாயம் அல்ல. இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகப் பார்க்காமல், இதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டவும், நேர்படுத்தவும் முனைப்பு காட்டுவதுதான் சரியானதாக இருக்கும்.

இச்சட்டத்தின்படி உணவுப்பொருள் என்பது அரிசி (கிலோ ரூ.3) கோதுமை (கிலோ ரூ.2), பருப்புவகை (கிலோ ரூ.1) என்பதாக வகைப்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு நபருக்கு 5 கிலோ உணவுப்பொருள் என்று சொன்னாலும், இவற்றின் உள்அளவு, அதாவது அரிசி அல்லது கோதுமை 3 கிலோ, பருப்பு 2 கிலோ என்பது போன்ற வகைப்பாடு இல்லாத நிலையில், அரிசி உணவுக்குப் பழகிய தமிழ்நாட்டில் கோதுமை வாங்கப்படாமல் தேக்கமடையும். ஆகவே, உள்அளவுகளை மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

உணவுப் பொருளின் விற்பனை விலை மூன்றாண்டுகளுக்கு மாற்றப்பட மாட்டாது என்று சட்டம் சொல்கிறது. இது சரியல்ல. இந்த விலையை மாநிலங்கள் தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரம் தேவை. ஏனெனில், தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படுகிறது. கர்நாடக அரசு தற்போது கிலோ அரிசி ரூ.1 திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு நபர் செலவிடும் தொகை தோராயமாக ரூ.12 மட்டுமே. இந்தத் தொகையை மொத்தமாக மாநிலங்களுக்கு வழங்கிடவும், மாநிலங்கள் உணவுப்பொருள் விலையை நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதிப்பதுதான் நடைமுறைக்குப் பொருந்துவதாக இருக்கும்.

தமிழ்நாடு, கேரளம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் பொது விநியோகத் திட்டம் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படவில்லை. பொது விநியோகத்தை முறைப்படுத்தாத மாநிலங்களில் நிச்சயமாக இத்திட்டம் முறைகேடான கள்ளச் சந்தைக்கே அதிக இடம்தரும். ஆகவே, இச்சட்டத்தின்படி அமைக்கப்படவுள்ள "மாநில உணவு ஆணையம்' முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து, பொதுவிநியோகத்தில் திருப்தி தெரிவித்த பிறகே இத்திட்டத்தை அந்த மாநிலங்களில் அமல்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால் அரிசி அல்லது கோதுமை உற்பத்தி குறையும்போது, பொது விநியோகத் திட்டத்திலிருந்து சந்தைக்குப் போவதுதான் நடக்கும். ஆகவே, பொது விநியோக முறை எந்த மாநிலங்களில் சிறப்பாக உள்ளதோ, அந்த மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் அமலுக்கு வரும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம், அனைத்து மாநிலங்களும் பொது விநியோக முறைக்கு அதிக கவனம் தரும்.

தமிழ்நாட்டில், குழந்தைகள் சத்துணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துமாவு திட்டம் என, உணவுப் பாதுகாப்பு மசோதா குறிப்பிடும் அனைத்துத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய இணைத்தொகை எவ்வளவு? எத்தனை சதவீதம்? அதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

விவாதிக்காமல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், குழப்பத்துக்கும் கள்ளச்சந்தைக்கும்தான் வழிவகுக்கும். அதுமட்டுமல்ல, விவாதம் இல்லாமல் அவசரச் சட்டத்தின் மூலம் ஆட்சி நடத்துவது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்பதையும் ஆட்சியாளர்களுக்குப் பெருமை சேர்க்காது என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT