தலையங்கம்

ஆவணப்படுத்த ஆவன செய்வோம்!

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில், ஜூன் 13-ஆம் தேதியன்று, காணொலிப் பிரிவை (ஆடியோ-விஷுவல் செக்ஷன்) தொடங்கி வைத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

ஆசிரியர்

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தில், ஜூன் 13-ஆம் தேதியன்று, காணொலிப் பிரிவை (ஆடியோ-விஷுவல் செக்ஷன்) தொடங்கி வைத்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இந்தியாவிலிருந்து லார்டு மவுண்ட்பேட்டன் புறப்பட்டுச் சென்றது மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவியேற்றது தொடர்பான செய்தித்திரைப்படங்களை திரையிடச்செய்து பார்த்து ரசித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட ஒலிப்பேழைகளில், ராஜாஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியதை மீண்டும் கேட்டு ரசித்துள்ளார்.

இந்த காணொலிப் பிரிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அனைத்தும் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன், மத்திய அரசின் செய்திப் பிரிவு (பிலிம் டிவிஷன்) ஆகியவற்றின் ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த நூலகத்தில் இன்னும் பல தலைவர்களின் அரிய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழை, செய்திப் பிரிவு தயாரித்த ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த வேளையில், தமிழகத்தில் இதுபோன்று ஒரு காணொலிப் பிரிவு இருக்கலாகாதா, அதிலும் குறிப்பாக தமிழக சட்டப்பேரவை வைரவிழா ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், இத்தகைய காணொலிப் பிரிவை சட்டப்பேரவை நூலக வளாகத்திலேயே தமிழக முதல்வர் தொடங்கலாகாதா என்கிற ஏக்கம் எழுகிறது.

அண்ணாவின் பேச்சாற்றல் பற்றி அனைவரும் புகழ்கின்றார்கள். அவர் எப்படிப் பேசினார்? அவரது ஆற்றல் எத்தகையது? அண்ணா ஆங்கிலத்திலும் வல்லவர் என்று சொல்லப்படுகிறதே; நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைவீச்சை, அல்லது வேறு நிகழ்வுகளில் பேசிய ஆங்கில உரை அல்லது பேட்டியை தற்போது கேட்க விரும்பினால் அவை கிடைக்குமா? இவையெல்லாம் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் எழும் நியாயமான கேள்விகள்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அரசில் இடம்பெற்ற தமிழகத் தலைவர்கள் குறித்த நிழற்படத் தொகுப்புகள்கூட அரசுக் காப்பகங்களிலும், நூலகங்களிலும் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறதா என்பது சந்தேகம்தான். பத்திரிகைகளில் வெளிவரும் மிக அரிய புகைப்படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, அரசு ஆவணக் காப்பகங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி "தினமணி' மலர் வெளிக்கொணர முற்பட்டபோது, அரசுத் தரப்பிலிருந்து கிடைத்த புகைப்படங்கள் மிகவும் குறைவு. அண்ணாவுக்கே அந்த நிலைமை என்றால், முன்னாள் முதல்வர்களான ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் பற்றிய புகைப்படங்களும் தகவல்களும் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நூலகம் என்பது புத்தகங்களை மட்டுமே சேகரிக்க வேண்டும் என்கிற கருத்திலிருந்து இப்போதுதான் மெல்ல வெளியேவந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் என்கின்ற வழக்கம் குறைவாக இருக்கிறது. இதை யாராவது செய்யட்டும் என்ற எண்ணத்தால் யாருமே செய்யாமல் விட்டுவிடும் நிலைமைதான் பெரும்பாலான ஆவணப்பதிவுகளை நாம் இழந்து போனதற்குக் காரணம்.

தமிழக முதல்வர்களின் பதவியேற்பு விழாக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு நடைபெற்றன, அவர்கள் முதல்வராகப் பதவி வகித்த காலங்களில் பங்கேற்ற இன்றியமையாத நிகழ்ச்சிகள் யாவை, அதில் பங்குகொண்டு ஆற்றிய உரைகள் என்ன? போன்றவை எழுத்து மூலமாக நமக்குக் கிடைக்கிறதே தவிர, காணொலிப் பதிவுகள் நம் நூலகங்களில் இல்லை. இவற்றில் பலவும் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன், மத்திய, மாநில செய்திப் பிரிவுகளில் இருக்கும். அவற்றை படியெடுத்து நூலகத்தில் பாதுகாப்பது அப்படியொன்றும் இயலாத செயல் அல்லவே?

தற்போது சென்னை வானொலி நிலையம் 75-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. அவர்கள் தங்கள் ஆவணக் காப்பகத்திலிருந்து பல அரிய பேட்டிகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில், சென்னை மற்றும் திருச்சி வானொலி நிலையத்தில் தமிழக அரசியல் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்களின் பேட்டிகளைப் பெற்று அவற்றை சட்டப்பேரவை நூலகத்தில் ஆவணப்படுத்தலாம்.

பல அரிய புகைப்படங்கள், பல ஒலிநாடா, ஒலிப்பேழைகள் தன்னார்வ அமைப்புகளிடமும், பத்திரிகைகளிடமும் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகங்களிலும் உள்ளன. அண்மையில், ஈ.வி.கே. சம்பத் குறித்து வெளியான புத்தகத்தில் (தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது) அண்ணாவுடன் ஈ.வி.கே. சம்பத் இடம்பெறும் அரிய புகைப்படங்களுடன், சம்பத் பேச்சு அடங்கிய குறுந்தகடும் இணைத்து விற்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் குறித்தும் அவர் மீது அபிமானம் கொண்டவர்கள் பல ஒலி - ஒளி காட்சிகளைப் பாதுகாத்து வருகின்றனர். சிலர் "யூ-டியூப்'பில் மின்னேற்றம் செய்துள்ளனர். அவற்றின் பிரதிகளை வழங்கும்படி அரசு வேண்டுகோள் விடுத்து, பிரதிகளைப் பெற முடியும்.

ஒலிநாடாக்களிலும், செய்திச்சுருள்களிலும் முடங்கிக் கிடக்கும் இவற்றை மீட்டெடுத்து, அவற்றின் இன்றியமையாத் தன்மைக்கேற்ப வரிசைப்படுத்தி அனைத்தையும் மின்னாக்கம் (டிஜிட்டல்மயம்) செய்து வைக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. தமிழக சட்டப்பேரவை வைரவிழாவின்போது, காணொலிப் பிரிவும் உருவாக வேண்டும். தமிழக முதல்வர் உருவாக்குவார் என்று நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT