தலையங்கம்

காட்டுமிராண்டித்தனம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மே 25-ஆம் தேதி, பிரசார ஊர்தியில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மாவோயிஸ்டுகளால் வழிமறிக்கப்பட்டு, 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானதும்கூட.

ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மே 25-ஆம் தேதி, பிரசார ஊர்தியில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மாவோயிஸ்டுகளால் வழிமறிக்கப்பட்டு, 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானதும்கூட.

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளதால், பாஜக ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் எல்லையோர தண்டேவாடா வனப்பகுதிக்கு இந்தப் பிரசாரக் குழு வந்தபோது மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் கடத்திச் செல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பாட்டீல் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டுள்ளது மே 26-ஆம் தேதி தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களைத் தாக்குவதற்குக் காரணம், அவர்கள் பழங்குடியினர் மீது நடத்தும் அத்துமீறலுக்குப் பதிலடி என்று கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகள் அப்பகுதிவாழ் பழங்குடியினரைத் தாக்கி அழிக்கும்போது, அந்த எளிய மக்கள் இனத்துரோகிகளாகவும் காட்டிக் கொடுப்பவர்களாகவும் சித்திரிக்கப்பட்டனர்.

இப்போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்காரர்களை மாவோயிஸ்டுகள் தாக்குவதன் காரணம்தான் என்ன?

இதே தண்டேவாடா பகுதியில் 2010-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் அவதேஷ் கௌதம் என்பவரது வீட்டைத் தாக்கிய மாவோயிஸ்டுகள் அவரது மைத்துனரைக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. பாரதிய ஜனதா எம்.பி., பலாகட் பலராம் காஷ்யப்பின் மகன் 2009-ஆம் ஆண்டு கொல்லப்பட்டுள்ளார். ஆனால், இப்போது நடந்திருப்பதைப்போல, ஒரு கட்சியின் பிரசாரக் குழு மீது தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே இப்பகுதியில் முதல்முறை.

சுரங்கப் பணிகள் தொடங்கப்படவில்லை என்ற காரணம் காட்டி உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க வயல்கள் பலவும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவை. பெரும் ""பணம் செலவழித்து'' பெற்ற உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இதற்கு இடைத்தரகர்களாக இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தேர்தல் பிரசாரக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தண்டேவாடா காட்டுப்பகுதியில் செல்கிறார்கள் என்று மாநில அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். மாநில அரசு இவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தால், நிச்சயமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. அப்படியே நடந்திருந்தாலும், மாவோயிஸ்ட் தரப்பிலும் சிலர் இறந்திருக்கவும், சிலர் பிடிபட்டிருக்கவும் கூடும். இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதையும் அதன் நோக்கத்தையும் கண்டறிந்திருக்க முடியும். இப்போது மாவோயிஸ்டுகள் மிக எளிதாக, எதிர்த்தாக்குதல் இல்லாமல், ஆடு, மாடுகளைச் சுடுவதைப்போல சுட்டுத் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மாவோயிஸ்டுகள் உருவாகக் காரணம் என்று ஒருபுறம் வாதிடப்படுகிறது. இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. நிலக்கரிச் சுரங்கம், கனிமச் சுரங்கம் என்ற பெயரில் பழங்குடியினர் வெளியேற்றப்படுகின்றனர். வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இதை எதிர்க்கும் பழங்குடியினர் பலவந்தமாக அப்புறப்படுத்தப்படுவதும், இந்த எதிர்ப்பில் காவல்துறையுடனான மோதல்களும், இரு தரப்பு உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

இது தீர்வு காணப்பட வேண்டிய விவகாரம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தப் பிரச்னையில், பழங்குடியினருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் தோன்றும் மாவோயிஸ்டுகள், பழங்குடியினருக்கு ஆதரவு என்று சொல்லித்தான் துப்பாக்கியைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் பழங்குடியினருக்கு அப்படி என்ன நன்மை செய்துவிட்டார்கள் என்கிற கேள்வி எழும்போது, அவர்களும் மலைவாழ் மக்களின் நன்மை கருதி செயல்படவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

காடுகளுக்குள் சாலை போட வேண்டும் என்றால் எதிர்ப்பு; கான்டிராக்டர்கள் கொல்லப்படுகிறார்கள், ரயில்பாதை போட எதிர்ப்பு. காட்டுக்குள் தொலைத்தொடர்பு வசதிக்காக நுண்ணலை கோபுரங்கள் நிறுவினால் அதைச் சிதைக்கிறார்கள். அப்படியானால், பழங்குடியினர் எந்நாளும் அறியாமை இருட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகள் நோக்கமா?

மத்தியப் பாதுகாப்புப் படை மீது தாக்குதல் நடத்தி விரட்டுகிறார்கள். ஆனால், கள்ளத்தனமாக நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டப்பட்டு, நிலக்கரி எடுத்துச்செல்லப்படுவது நிற்கவில்லை. உரிமம் பெறாத திருட்டு நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களை மாவோயிஸ்டுகள் மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். அல்லது இந்த உரிமையாளர்கள் மாதம்தோறும் "திறை' செலுத்துகின்றனர். அப்படியானால் மாவோயிஸ்டுகள் யாருக்கு ஆதரவாக நிற்கிறார்கள்?

பழங்குடியினருக்கு மத்திய அரசாலும் நன்மை கிடைக்கவில்லை. மாவோயிஸ்டுகளாலும் நன்மை கிடைக்கவில்லை. அதிகாரத்தின் நகங்கள் - அது மத்திய அரசு என்றாலும் மாவோயிஸ்டு என்றாலும் - அப்பாவி மக்களைத்தான் கிழிக்கின்றன.

எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தை ஏற்காத தீவிரவாத அமைப்பை ஏற்றுக்கொள்ளாது. தங்க ஊசி என்பதற்காக கண்ணையா குத்திக்கொள்ள முடியும்? தீவிரவாதம் தடுக்கப்படவும் வேண்டும்; மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் தனியார் கனிமவளக் கொள்ளையும் நிறுத்தப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT