முகப்பு
தலையங்கம்

ஜோக்கோவிக்கு வாழ்த்துகள்!

உலகிலேயே அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் தேசம் இந்தோனேஷியா. உலகின் 16-வது பெரிய பொருளாதாரமும்கூட.

Updated On : 11 ஆகஸ்ட், 2014 at 1:29 AM
பகிர்:

உலகிலேயே அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் தேசம் இந்தோனேஷியா. உலகின் 16-வது பெரிய பொருளாதாரமும்கூட. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம்முடன் சரித்திர, கலாசார ரீதியாகத் தொடர்புடைய நாடு இந்தோனேஷியா. நம்மைப் போலவே அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையுடன் போராடும் தேசம். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத, அதிகமான பெட்ரோலிய எண்ணெய் மானியச் சுமையுடைய தேசம்.

53 விழுக்காடு வாக்குகளுடன் இந்தோனேஷியா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ஜோக்கோவி' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஜோக்கோ விடோடோவின் வளர்ச்சி அசாதாரணமானது. மரத் தச்சராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய, இந்தோனேஷியாவின் ஜாவா மாநிலத்திலுள்ள சோலோ என்கிற நகரத்தின் குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஜோக்கோவி மெல்ல மெல்ல மேஜை, நாற்காலி போன்ற மரச் சாதனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துபவராக வளர்ந்தார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேஷியாவில் யாருமே கேட்டிராத பெயர் ஜோக்கோவி என்கிற ஜோகோ விடோடோ. அவர் சோலோ நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட, அந்தப் பெயர் பிரபலமாகவில்லை. ஆனால், அவர் மேயராக இருந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகமான, குற்றங்களுக்குப் பெயர்போன சோலோ நகரம் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது. ஜாவாத் தீவின் கலை, கலாசார மையமாக சோலோ மாறிவிட்டதற்கு ஜோக்கோவி நகரத் தந்தையாக இருந்ததுதான் காரணம். இப்போது இந்தோனேஷியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் சோலோ மாறிவிட்டிருக்கிறது.

Advertisement

2012-இல் இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு நடந்த தேர்தலில், அந்த நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியாக இருந்த சுகார்தோவின் "கோல்கர்' கட்சியின் பொருளாளரான பழுத்த அரசியல்வாதியைத் தோற்கடித்து ஜகார்த்தாவின் ஆளுநரானார் ஜோக்கோவி. சோலோவின் மேயராக இருந்தவர், ஜகார்த்தாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இவரால் செயல்பட முடியாது என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், ஜோக்கோவியின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

தான் ஆளுநராகப் பதவி ஏற்றிருக்கும் இரண்டு ஆண்டுகளில் ஜகார்த்தா நகரத்திலும் அவரால் பல மாற்றங்களைச் செய்துக் காட்ட முடிந்தது. மக்கள் மத்தியில் சரளமாகப் பழகி, அவர்களது பிரச்னைகளை நேரில் பார்த்து உடனடியாகத் தீர்த்து வைக்கும் அவரது அணுகுமுறை, ஜோக்கோவிக்கு இந்தோனேஷிய மக்களின் பேராதரவைப் பெற்றுத் தந்தது.

ஜகார்த்தா ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜோக்கோவியை ஆதரித்த மேகவதி சுகர்னோபுத்ரியின் இந்தோனேஷிய ஜனநாயகக் கட்சி (போராட்டம்), அதிபர் தேர்தலிலும் அவரை ஆதரிக்குமா என்பதில் முதலில் சந்தேகம் இருந்தது. பெருந்தன்மையுடன் மேகவதி அதிபர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு ஜோக்கோவிக்கு ஆதரவு தர முற்பட்டது, தேர்தலில் அவரது பலத்தை அதிகரித்தது.

ஜோக்கோவியும், அவரது துணை அதிபருக்கான வேட்பாளரும், பதிவான மொத்த வாக்குகளான 13 கோடியில் 53.14 % பெற்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் சுகர்தோவின் ஆதரவு பெற்ற பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி பிரபோவோ சுபியான்டோ 46.8% வாக்குகள்தான் பெற்றார். தான் தோல்வியைத் தழுவுவதை அறிந்த சுபியான்டோ போட்டியிலிருந்து விலகித் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார் என்றாலும், இதுவரை எந்தவித ஆதாரங்களையும் அவரால் முன்வைக்க முடியவில்லை.

ஜோக்கோவி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, 1998-இல் அகற்றப்பட்ட ஜெனரல் சுகர்தோ தலைமையிலான ராணுவ சர்வாதிகாரத்தின் எஞ்சியிருக்கும் தாக்கத்தை முற்றிலுமாகத் தகர்த்து விட்டிருக்கிறது. அதேநேரத்தில், அதிபர் ஜோக்கோவியை அதிபர் தேர்தலில்ஆதரித்த இந்தோனேஷிய ஜனநாயகக் கட்சிக் கூட்டணிக்கு 560 இடங்களைக் கொண்ட இந்தோனேஷிய மக்களவையில் 207 இடங்கள்தான் இருக்கின்றன. எதிர்க்கட்சியினர் 353 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். இதை எப்படி சமாளிக்கப் போகிறார் அக்டோபரில் பதவி ஏற்க இருக்கும் ஜோக்கோவி என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சோலோவிலும், ஜகார்த்தாவிலும் நிகழ்த்திய மாற்றங்களை இந்தோனேஷிய அதிபராகவும் ஜோக்கோவி நிகழ்த்த வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனையும். ஜோக்கோவிக்கு வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.