தலையங்கம்

இந்தியாவுக்காகத் தயாரிப்போம்!

இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்கும் "இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிட்டார் என்பதற்காக அதை வழிமொழியாமல், பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் துணிந்து கருத்துத் தெரிவித்திருக்கும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனைக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும்.

ஆசிரியர்

இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்கும் "இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிட்டார் என்பதற்காக அதை வழிமொழியாமல், பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் துணிந்து கருத்துத் தெரிவித்திருக்கும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனைக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற குறிக்கோள் "இந்தியாவுக்காகத் தயாரிப்போம்' என்று மாற்றியமைக்கப்படுவதுதான் பயனளிக்கும் என்று தில்லியில் நடந்த பரத்ராம் நினைவுச் சொற்பொழிவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே சர்வதேசத் தொழில் துறையில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பது, சீனா உள்ளிட்ட பல ஏற்றுமதியை முன்னிலைப்படுத்திய நாடுகள் தங்களது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது, உலகளாவிய அளவில் பல நாடுகள் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்திருப்பது போன்ற காரணங்களை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

"பிரதமர் கூறுவதுபோல, "இந்தியாவில் தயாரிப்போம்' என்று தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வளர்ச்சியை, சீனாவின் வழியில் நாமும் கடைப்பிடிக்க முயல்வோமானால் அது பயனளிக்காது. இன்னொரு ஏற்றுமதி நாடைப் பயன்படுத்தும் நிலையில் உலகப் பொருளாதாரம் இல்லை. சீனாவைப்போல ஏற்றுமதியை முன்னிலைப்படுத்த விரும்பிய ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவை நாமும் எதிர்கொள்ள நேரும்' என்கிற ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜனின் கருத்து தெளிந்த சிந்தனையின் வெளிப்பாடு.

உலகத் தயாரிப்புத் தளத்தில், 2012 புள்ளிவிவரப்படி இந்தியாவின் பங்கு வெறும் 2.5% மட்டுமே. இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஏறத்தாழ 3% தயாரிப்புடன் இந்தியாவைப் போலத்தான் இருக்கின்றன. அமெரிக்கா (21%), சீனா (18%), ஜப்பான் (11%), கொரியா (7%) ஆகியவைதான் தயாரிப்புக் கேந்திரங்களாக இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் நமது தயாரிப்புகள் உலகச் சந்தையில் போட்டி போடுவது என்பது எந்த அளவு சாத்தியம் என்பது இருக்கட்டும், எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியத் தொழில் துறை வளர்ச்சி 8%. இதுவே 12% என்று உயர்ந்தால் அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரியாவுடன் இந்தியாவும் உலகச் சந்தையில் போட்டி போடலாம்தான். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) 4% முதல் 5% என்று இருப்பது 10%-மாக உயர வேண்டும். அது எளிதில் சாத்தியமல்ல.

நாம் ஏற்கெனவே பலமாக இருக்கும் துறைகளில் ஏற்றுமதியை அதிகப்படுத்த வழியில்லை. அதிகமாக நகைத் தயாரிப்பு, மோட்டார் வாகனங்கள், மின்சாரம் தொடர்பான கருவிகள், உதிரிப் பாகங்கள், இரும்பு உருக்கு, மருந்துத் தயாரிப்பு, தோல் பொருள்கள் போன்றவை நமது ஏற்றுமதிகளில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், சர்வதேசச் சந்தையில் இவையெல்லாம் விலைக்குறைப்பு போட்டிக்கு ஆளாகும் தன்மையன என்பதால், எந்த அளவுக்கு நமக்கு உதவும் என்பது தெரியவில்லை.

இறக்குமதிகளைக் குறைத்து, அந்தத் தேவைகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் "இந்தியாவுக்காகத் தயாரிப்போம்' அணுகுமுறைதான் இன்றைய தேவை என்பது ரகுராம் ராஜனின் கருத்து.

அதுமட்டுமல்லாமல், தனி நபர் சேமிப்பை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும் என்கிற அவரது கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 2013-இல் இந்தியாவின் தனி நபர் சேமிப்பு ரூ.22,124.14 பில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கம்தான், சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கம், வீழ்ச்சி என்று ஏற்பட்ட நிலையிலும் இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து காப்பாற்றி வந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் அறிவுரைப்படி, "இந்தியாவில் தயாரிப்பு' என்பதைவிட, "இந்தியாவுக்காகத் தயாரிப்பு' என்பதை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படாமல், தேச நலனைக் கருதித் துணிந்து தன் கருத்துகளை முன்வைத்திருக்கும் ரகுராம் ராஜனுக்கு தேசப்பற்றுள்ள இந்தியர்கள் சார்பில் நன்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT