தலையங்கம்

பிரச்னையும் தீர்வும்!

அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனையிலேயே வேலை தரப்பட வேண்டும்' என்று கோரி தமிழக அரசு மருத்துவமனை செவிலியர் மாணவியர் போராடி வருகிறார்கள்.

ஆசிரியர்

அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனையிலேயே வேலை தரப்பட வேண்டும்' என்று கோரி தமிழக அரசு மருத்துவமனை செவிலியர் மாணவியர் போராடி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனங்களில் செவிலியர் பட்டம் பெற்ற எவரையும் (தனியார் கல்லூரியில் படித்திருந்தாலும்) நியமிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும், இந்த அரசாணையில் தவறு இல்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆகவே, அரசாணையைத் திருத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசினர் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழாதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் அதில் பயிற்சி பெறும் செவிலியர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர்களாக எப்படி கருத முடியும் என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இடம் பெறுபவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மட்டுமே மருத்துவம் பெறச் செல்கிறார்கள் என்பதும் அதிக அளவில் நோயாளிகள் அரசு மருத்துமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதும் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெறுபவர்களின் தரத்தை நிச்சயம் உயர்த்தும் என்று நம்பலாம். சிகிச்சைக்கு வரும் ஏழை பாழைகளை அனுதாபத்துடன் கவனித்துக் கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு ஏற்பட அரசு மருத்துவமனைகள் வாய்ப்பளிக்கின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகளை பொருத்தவரை அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகள் கல்வி தரத்திலும் கட்டமைப்பு வசதிகளிலும் மிகவும் மேம்பாடு உடையவையாக காணப்படுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, தொழில்நுட்ப கல்லூரிகளைப் பொருத்தவரை தனியார் கல்லூரிகளைவிட அரசு கல்லூரிகள் எல்லாவிதத்திலும் மேம்பட்டவையாக இருப்பதை மறுக்க முடியாது. அதனால், நன்கொடை கொடுத்து தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெறுபவர்கள் எந்த அளவுக்கு தரமானவர்களாக இருப்பார்கள் என்று எழுப்பப்படும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ்நாட்டில் செவிலியர் பட்டயம் வழங்கும் கல்லூரிகள் 212 உள்ளன. பட்டம் வழங்கும் கல்லூரிகள் 171 உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 15,000 செவிலியர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இருந்தும்கூட, தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செவிலியர் தேவையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற நிலைமை இல்லை. போதுமான செவிலியர் இல்லை என்ற நிலைமைதான் இன்றும் இருக்கிறது. ÷

உலகளாவிய அளவில் செவிலியர் தட்டுப்பாடு காணப்படுவதால்தான் தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து இந்த அளவுக்கு மாணவியர் இடம்பிடிக்கிறார்கள். இந்த நிலையில் தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெறுபவர்கள் அரசு வேலைவாய்ப்பில் இடம்பெற துடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

இதே கேள்வியை அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் தேர்ச்சி பெறுபவர்களிடமும் கேட்க முடியும்தான். ஆனால், அரசு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி முறையான பயிற்சி அளித்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பான செயல்முறை பயிற்சிக்கும் இடமளித்து உருவாக்கும் செவிலியர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களாக ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு காணமுடியும்?

அரசியல்வாதிகள் பலர் தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் நடத்துவதால், அவர்களது சுயலாபத்துக்காகத்தான் அரசு இப்படியொரு ஆணை பிறப்பித்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதும், தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்குவதும்தான் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

மெட்ரோ கட்டுமானப் பணிகள்: இன்று முதல் தில்லி லுட்யன்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து மூடல்

SCROLL FOR NEXT