தலையங்கம்

பெருகிவரும் பேராபத்து!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதிலும் தெரிவுசெய்யப்பட்ட 121 நதிகளில், அதன் நீரோட்டத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்த நதிகளின் நீர், குடிக்கும் தரம் இல்லாத மாசுபட்ட நீராக இருக்கிறது. இவற்றை சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது.

ஆசிரியர்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதிலும் தெரிவுசெய்யப்பட்ட 121 நதிகளில், அதன் நீரோட்டத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்த நதிகளின் நீர், குடிக்கும் தரம் இல்லாத மாசுபட்ட நீராக இருக்கிறது. இவற்றை சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது. அப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு. நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தகவல் இது.

இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளுமே புனிதமானவைதான். அது கங்கையாக இருந்தாலும், குக்கிராமத்தில் பாயும் சிற்றாறாக இருந்தாலும் ஒவ்வொரு நதிக்கும் ஒரு புராணம் உண்டு. அந்த ஆறுகளில் பளிங்குபோல் நீரோடிய காலம்போய் இப்போது சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. இல்லையென்றால், மணல் அள்ளப்பட்டு வறண்டுபோய் இருக்கிறது. காலம்காலமாக நகரங்களின் சாக்கடை நீர் நதியில் கலந்தாலும், நதி ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால், இப்போது எந்த நதியும் ஓடுவதில்லை. ஆங்காங்கே அணை போட்டு தடுத்து நிறுத்தப்படுகிறது. அதனால், நதியில் வரும் நீரின் அளவைவிட அதில் கலக்கப்படும் நகரக் கழிவின் அளவுதான் அதிகமாக இருக்கிறது.

இந்திய நதிகள் அனைத்திலும் சாக்கடை நீர் கலந்து, கோலிஃபார்ம் கிருமிகள் எண்ணிக்கை, ஒரு நதிநீரில் இருக்க வேண்டிய அளவைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. நீரில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஒன்றின்படி, 122 நாடுகளில் தண்ணீரின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 120ஆவது இடத்தில் இருக்கிறது.

கழிவுநீர் உற்பத்தி அளவுக்கதிகமாக இருப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். முதன்மைக் காரணம், மக்கள் தொகைப் பெருக்கமும், அதிக அளவிலான நகர்ப்புறக் குடியேற்றமும். முறையற்ற நகர்ப்புற வளர்ச்சியும், எத்தகைய கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் கழிவுநீரைப் பொது கழிவுநீர் வடிகால் குழாய்களிலும், வாய்க்கால்களிலும் கலப்பதும் இதர காரணங்கள். அளவுக்கதிகமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலப்பதால், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படுகிறது.

நதிநீர் மாசுபடுவதற்கு தொழிற்துறை காரணம் என்பது ஒரு பக்க உண்மை. இன்னொரு கசப்பான உண்மை, நதிகளில் கலக்கும் மனித கழிவுகளின் அளவு மிக மிக அதிகம் என்பது. இந்தக் கழிவுநீரை சுத்திகரித்து ஆறுகளில் விடவேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் அதற்கான கட்டமைப்பு வசதிகளை நாம் இன்னும் உருவாக்காமல் இருக்கிறோம்.

இந்தியா முழுவதிலும் உள்ள 445 நதிகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1275 இடங்களில் கண்காணிக்கிறது. வாரியம் தரும் தகவலின்படி, இந்த நதிகளில் நாளொன்றுக்கு 3826 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுகிறது. நிலை-1, நிலை-2 நகரங்களில்தான் இந்தக் கழிவுகள் நதியில் கலக்கின்றன. கிராமங்களில் அல்ல. ஆனால் இந்தக் கழிவுகளின் அனைத்து கெடுபயனையும் அனுபவிப்போர் விவசாயிகளும், கிராமத்து மக்களும்தான்!

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பதும்தான். அரசு மேற்பார்வையில் இயங்கும் கழிவுநீர் சுத்தி

கரிப்பு நிலையங்கள் அதிகமான திறனுடையவையாகவோ நவீனமானதாகவோ இல்லை. முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருப்பதும், தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் இருப்பதும் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படாமைக்குக் காரணங்கள்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2011இல் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள 8,000 பெரிய, சிறிய நகரங்களில் 160 நகரங்களில் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. அதிலும், 8 பெரு நகரங்களில் மட்டும்தான் நவீனமயமாக்கப்பட்ட முழுமையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. நாளென்றுக்கு 40,000 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகும் நிலையில், நாளென்றுக்கு 8,000 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பதற்கான வசதிதான் இருக்கிறது. விளைவு? பெரும்பகுதி கழிவுநீர் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் விடப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுநீரை நதிகளில் கலக்காமல் தடுத்திட நேர்மையான அதிகாரி ஒருவர் போதும். ஆனால் நகரங்களின் கழிவுகள் நதியில் கலக்காமல் இருக்க வேண்டும் என்றால் அது உள்ளாட்சி அமைப்புகளின் திறமையில்தான் இருக்கிறது. சாக்கடைநீர் சுத்தி

கரிப்பு நிலையங்களின் கொள்ளளவை உயர்த்தி, சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலக்காமல் தவிர்ப்பதை உள்ளாட்சிகள் முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் நதியின் மீது மலத்தை வீசிவிட்டு, ஒரே ஒருநாள் மட்டும் பூக்கள் தூவினால் அது வழிபாடு அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

மெட்ரோ கட்டுமானப் பணிகள்: இன்று முதல் தில்லி லுட்யன்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து மூடல்

SCROLL FOR NEXT