தலையங்கம்

விபத்தல்ல, கொலை!

அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்றவர்களில் 21 பேர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வெறும் விபத்து என்பதாக முடிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. தவறுகள் தெரிந்தே நடக்கும்போது அதனை விபத்தாகக் கருத முடிவதில்லை.

ஆசிரியர்

அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்றவர்களில் 21 பேர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வெறும் விபத்து என்பதாக முடிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. தவறுகள் தெரிந்தே நடக்கும்போது அதனை விபத்தாகக் கருத முடிவதில்லை.

ஆற்றில் சென்றிருந்தால், திடீரென வெள்ளம் வந்ததால் படகு தடுமாறியது என்று சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், கடல் மற்றும் ஏரியில் இதற்கான வாய்ப்பு இல்லை. அந்தமான் துயரச் சம்பவத்துக்குக் காரணம், அந்தப் படகின் கொள்ளவுத்திறனுக்கும் மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், அவர்களுக்கு மிதவைஅங்கி தராமல் படகில் ஏற்றியதும்தான். இந்த பெருந்தவறுதான் 21 பேரின் உயிரிழப்புக் காரணமாக அமைந்தது. கடற்கரைக்கு மிக அருகில், கரையில் நிற்பவர்கள் பார்க்கும் தொலைவில் விபத்து நடந்துள்ளது. மிதவைஅங்கி அணிந்திருந்தால் இவர்களில் ஒருவர்கூட இறந்திருக்கமாட்டார் என்பது நிச்சயம்.

நடந்த சம்பவத்துக்காக, படகு உரிமையாளர் மற்றும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட வேண்டியவர்கள் அந்தமான் சுற்றுலாத் துறை அதிகாரிகளும்தான். மிதவைஅங்கி அணியாத சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றக்கூடாது என்கிற விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யத் தவறியவர்கள் இந்த அதிகாரிகள்தான். முதல் குற்றவாளிகள் இவர்களே.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்கடி ஏரியில் நடைபெற்ற, இதே தன்மையிலான விபத்திலும் மிதவைஅங்கி அணியாததுதான் மரணத்துக்குக் காரணம் என்பதோடு, படகின் தரம், கட்டுமானம் குறித்த புகார்களும் எழுந்தன. படகுகளை, அத்துறை சார்ந்த பொறியியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்வதும், ஒவ்வொரு படகிலும் அந்தப் படகில் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படும் பயணிகள் அனைவருக்கும் தேவையான மிதவைஅங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதும் முக்கிய விதிகளாக தெரிவிக்கப்பட்டன. அது கடைப்பிடிக்கப்படுவதான நம்பிக்கையில்தான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அது அன்றோடு முடிந்துபோன விவகாரம் என்பதை அந்தமான் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், நேரில் பார்த்தவர்களும் அளித்துள்ள பேட்டிகளைப் பார்க்கும்போது, இந்தப் படகை இயக்கியவர்கள் உரிய பயிற்சி இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் என்பதை உணர முடியும். இத்தகைய உள்ஒப்பந்த பணியாளர்களின் முதன்மைக் கவனம், பணம் சம்பாதிப்பதில்தான் இருக்கும். விபத்து நடக்கக்கூடும், உயிர்களுக்கு நாம்தான் பொறுப்பு என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இன்னும் சில நேர்வுகளில், ஒப்பந்த உரிமையாளரின் கணக்கில் வராத பணமாக இருக்கட்டுமே என்பதற்காக கூடுதல் ஆள்களை ஏற்றி, கூடுதல் பணம் சம்பாதிக்கும் நடைமுறைகளும் இருக்கும். இத்தகைய நடைமுறைகள் என்றோ ஒருநாள் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு தெரிந்திருக்காது. ஆனால் அங்குள்ள சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு இது தெரியாது என்று சொல்வது பொய்யாகத்தான் இருக்கும்.

சுற்றுலாத் துறை அதிகாரிகள், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் எடுத்துக்கொள்ளும் அக்கறையை, சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதிலும் எடுத்துக் கொண்டால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது.

நாம் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஒவ்வொரு சுற்றுலாப் பயண இடத்திலும், படகு சவாரி செய்வோர் எத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், கூடுதல் ஆள்களை ஏற்றினாலோ அல்லது மிதவைஅங்கி தராவிட்டாலோ படகை செலுத்த அனுமதிக்கக்கூடாது என்பதையும், அது குறித்து உடனடியாக எந்த செல்போனுக்கு தகவல் அல்லது குறுந்தகவல் அளிக்கலாம் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்ப்பது கடினமான செயலும் அல்ல.

இறந்தவர்களுக்காக ஒவ்வொரு அரசும் சில லட்சம் அள்ளி வழங்குவது, இன்னும் கூடுதல் நிதி அளிக்கப்பட வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைப்பது போன்றவற்றைக் காட்டிலும் மிக அவசியமானது, சுற்றுலாப் பயணிகளுக்கு, ஒவ்வொரு இடத்திலும் எத்தகைய ஆபத்து உள்ளது; அதை எப்படி தவிர்க்கலாம்; முறைகேடுகளை யாரிடம் உடனே முறையிடலாம் என்ற விழிப்புணர்வுக்கு செலவிடுவது. அது எதிர்காலத்தில் பல நூறு உயிர்களுக்கு பாதுகாப்பாக அமையும்.

அரசும், சுற்றுலாத் துறையும் இனியும்கூட கண்மூடி செயல்படலாம். அதனால், நமக்கு நாமே பாதுகாப்பு என்பதை உணர

வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT