முகப்பு
தலையங்கம்

கொள்முதலும் ஊக்கத் தொகையும்!

நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சென்ற மாதம் உயர்த்தியது. இதன்படி, அக்டோபர் மாதம் நடைபெறும் கொள்முதலில், ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,400 கிடைக்கும்.

Updated On : 25 ஜூலை, 2014 at 1:46 AM
பகிர்:

நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சென்ற மாதம் உயர்த்தியது. இதன்படி, அக்டோபர் மாதம் நடைபெறும் கொள்முதலில், ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,400 கிடைக்கும்.

ஆனால், ஜூலை 7-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், மாநில அரசுகள், நெல் மற்றும் கோதுமைக்கு அறிவிக்கும் ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் அல்லது ஊக்கத் தொகையை அறிவிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு மாறாக மாநில அரசுகள் ஊக்கத் தொகை வழங்கினால், அந்த மாநிலத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக நெல் அல்லது கோதுமையை இந்திய உணவுக் கழகம், மத்திய தொகுப்பிற்கு கொள்முதல் செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாநில அரசுகள் போனஸ் அல்லது ஊக்கத் தொகை அறிவிப்பது அவர்களைப் பொருத்த விவகாரம். அவர்கள் கூட்டும் சுமையை மத்திய அரசின் தோளில் ஏற்றக்கூடாது என்பதுதான் இதன் வெளிப்படையான செய்தி. இந்த நடவடிக்கை மூலம் நெல், கோதுமை விலையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், மத்திய அரசின் மானியத் தொகை அளவு கட்டுக்குள் இருக்கும் என்றும் மத்திய அரசு நம்புகிறது.

Advertisement

மத்திய அரசின் இந்த முடிவுக்கான காரணம், தற்போது பயிர்களுக்காக அளிக்கப்படும் மானியத் தொகை சுமார் ரூபாய் ஒரு லட்சம் கோடியை, மேலும் மிகாமல் தடுக்க வேண்டிய கட்டாயமும், நெல், கோதுமையின் சந்தை நடமாட்டம் தடைபடாமல் இருந்தால் விலை குறையும் என்றும் அவர்கள் நம்புவதுதான்.

மாநில அரசுகள் ஊக்கத் தொகை அறிவிப்பதால், விவசாயிகள் மாற்றுப் பயிர்களைத் தேர்வு செய்யாமல் நெல் அல்லது கோதுமையை உற்பத்தி செய்வதால், அளவுக்கு அதிகமான நெல், கோதுமை சந்தைக்கு வருகிறது. இதில் பெரும் பகுதியை மாநில அரசே கொள்முதல் செய்யும் நிலை ஏற்படுவதால், சந்தையில் தாராளமான புழக்கம் இருப்பதில்லை. இதனால், சந்தையில் அரிசி விலை உயர்ந்து கொண்டே போகிறது. அதே வேளையில், நியாயவிலைக் கடையில் மிகக் குறைந்த விலையில் அல்லது இலவசமாக அரிசி கிடைக்கவும் செய்கிறது. இந்த நிலையைச் சமன்படுத்த வேண்டுமானால், உற்பத்தியாகும் நெல், கோதுமை ஆகியவை சந்தையில் தாராளமான புழக்கத்தில் இருக்க வேண்டும். இவற்றை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மட்டும் திருப்பிவிடும் நிலை கூடாது என்பதுதான் இந்த முடிவுக்கு அடிப்படைக் காரணம்.

மேலும், இந்திய உணவுக் கழகம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிர்ணயித்துள்ள அளவுக்கு மேல் கொள்முதல் செய்தால் அவற்றைப் பாதுகாக்கப் போதுமான இட சதியில்லை. பாழாகும் நெல், கோதுமை அளவும் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல் அளவைக் கட்டுப்படுத்துவதும் இந்த உத்தரவின் நோக்கம்.

எதுவாக இருப்பினும், வரும் ஆண்டில் பருவமழை 31% குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் சூழலில், "எல் நினோ' தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், இவ்வாறு இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதலைக் கட்டுப்படுத்துவது சரியா என்பதை மத்திய அரசு சிந்திப்பது நல்லது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பொது ரக நெல்லுக்கு ரூ.50-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.70-ம் தமிழக முதல்வர் ஊக்கத் தொகையாக அறிவித்து வழங்கி வருகிறார். கடந்த கொள்முதல் பருவங்களில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,345 மற்றும் தமிழக முதல்வர் அறிவித்த ஊக்கத் தொகை ரூ.70-ஆக மொத்தம் ரூ.1,415 கிடைத்தது. வரும் அக்டோபரில் கொள்முதல் பருவம் தொடங்குகிறது. தற்போது மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைப்படி தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,470 பெற வேண்டும்.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, தமிழக முதல்வர் தொடர்ந்து ஊக்கத் தொகை வழங்குவார். இதனால் ஏற்படும் இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிப்பார் என நம்பலாம். இந்த ஊக்கத் தொகை மூலம், தமிழக அரசுக்கு அதிகபட்சமாக ரூ.100 கோடி வரை கூடுதல் செலவாகும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை, ஊக்கத் தொகை போன்றவை மட்டுமே, விவசாயிகளின் பிரச்னைக்கும், உணவு தானிய உற்பத்தி மற்றும் தேவைக்கும் தீர்வாகிவிடாது. இந்திய அரசு அளவுக்கு அதிகமாக உற்பத்தியை அதிகரித்து, கொள்முதல் செய்து, முறையாக விநியோகிக்கப்படாமல் விரயமாவது முதலில் தடுக்கப்பட வேண்டும். சரியான புள்ளிவிவரங்கள், பாதுகாப்பான கிடங்குளில் சேமிப்பு, முறையான விநியோகம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பிரச்னையை நாம் சரியாக எதிர்கொள்வதாகக் கருத முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.