தலையங்கம்

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

இந்தியாவில் பணம் இருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி, கழுத்துமேல் உட்கார்ந்து காரியம் சாதிக்க முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம், தனியார் கல்லூரிகள் கூட்டாகச் சேர்ந்து பொறியியல் மாணவர் கலந்தாய்வை தள்ளி வைக்கும்படி செய்திருப்பது!

ஆசிரியர்

இந்தியாவில் பணம் இருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி, கழுத்துமேல் உட்கார்ந்து காரியம் சாதிக்க முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம், தனியார் கல்லூரிகள் கூட்டாகச் சேர்ந்து பொறியியல் மாணவர் கலந்தாய்வை தள்ளி வைக்கும்படி செய்திருப்பது!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) நிகழாண்டில் 7,280 மனுக்களைப் பெற்று, 6,751 மனுக்கள் மீது முடிவு எடுத்துள்ளது. மீதமுள்ள 529 மனுக்கள் மீது முடிவு காணவில்லை. அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். முடிவெடுக்காததற்கு காலஅவகாசம் இல்லாததே காரணம் என்று நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ கூறியதால், ஒரு வாரத்துக்குள் முடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுகள், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வு சுமார் 15 நாள்களுக்குத் தள்ளிப்போகிறது.

இந்த மனுக்கள் அனைத்தும் புதிய கல்லூரிகளுக்கானவை அல்ல. தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கல்லூரிகள் புதிய பாடத்திட்டம் தொடங்க ஏஐசிடிஇ-யின் அனுமதி கோரி அளித்திருக்கும் மனுக்கள். சில மனுக்கள், நடப்பில் உள்ள பாடத்திட்டத்துக்கு அங்கீகாரம் (அக்கிரெடிட்டட் கோர்சஸ்) பெறுவதற்கானவை. அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு என்றால் அதற்கு கூடுதல் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.12,500 வரை வசூலிக்கலாம்.

இந்தக் கல்லூரிகள் இந்த ஆண்டே இந்த புதிய பாடத்திட்டத்தில் வகுப்புகளை தொடங்காவிட்டால் நட்டமடையா. இப்போதே தொடங்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் படியேறக் காரணம், கலந்தாய்வு செய்ய வரும் மாணவர்களின் நலன் கருதியும் அல்ல. இந்த புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வது தடைப்பட்டுப்போகுமே என்கிற ஆதங்கத்தால் இந்த வழக்கு தொடுக்கவில்லை என்பது நிச்சயம். நடப்பு ஆண்டில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் தேர்வு செய்வோர் அதிகம் என்றால் அந்தப் பாடப்பிரிவை உடனே தொடங்கி மாணவர்களை இழுக்க வேண்டும் என்பதான நோக்கம்தான் மனுக்களுக்கும் நீதிமன்ற வழக்குக்கும் காரணம். மாணவர்கள் விரும்பும் பாடத்திட்டத்தை உடனே தொடங்கி, நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் சம்பாதிக்க வேண்டும்.

முடிவு செய்யப்படாத 529 மனுக்களிலும்கூட ஒரே கல்லூரிகளின் இரண்டு மூன்று மனுக்களும் இருக்கக்கூடும். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளின் மனுக்கள் 20 முதல் 25 மனுக்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஒரு சில கல்லூரிகளின் நலனுக்காக தற்போது தமிழகத்தில் கலந்தாய்வு குறைந்தது 15 தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய இடைவெளி மாணவர்களைத் தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் இழுப்பதற்கும் உதவக்கூடும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் இந்த விஷயத்தில் ஏன் உறுதியாக இல்லை என்பது புரியவில்லை. அவர்களும் தனியார் கல்லூரிகளுடன் சேர்ந்துகொண்டு இதற்குத் துணை போகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ""இந்த புதிய பாடப்பிரிவுகள் இந்த ஆண்டே தொடங்கப்பட்டாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தகைய பாடப்பிரிவுகள் போதுமான எண்ணிக்கையில் இத்தனைக் கல்லூரிகளில் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலை உருவாகாது'' என்பதை ஏஐசிடிஇ தனது வாதத்தில் நீதிமன்றத்துக்கு விளக்கமாகச் சொல்லியிருந்தால் இத்தகைய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்காது.

இந்தப் புதிய பாடப்பிரிவுகளை கலந்தாய்வுக்குப் பிறகு அனுமதிக்க நேர்ந்தால், இந்த தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் மட்டும் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்றும்கூட ஏஐசிடிஇ தனது வாதத்தில் தெரிவித்திருக்கலாம். இந்த ஏற்பாட்டால் தனியார் கல்லூரிகள் பெரும் லாபம் ஈட்டுவது பாதிக்காது என்பதால், அவர்களும் அதற்கு உடன்பட்டிருப்பார்கள். நீதிமன்றம் ஒரு வார காலஅவகாசத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்காது. ஆனால் ஏஐசிடிஇ இதை சொல்லவில்லை.

இந்த நடைமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏஐசிடிஇ உருவாக்கிக்கொள்ளாதது ஏன்? புரியவில்லை.

பள்ளி அளவிலானாலும், உயர்கல்வி அளவிலானாலும் தனியார் செயல்பட வேண்டாம் என்றோ, செயல்படகூடாது என்றோ யாரும் சொல்லவில்லை. அரசுத் தரப்பில் அடிப்படைக் கல்வி என்பதைக் கூடச் செயல்படுத்த நமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லாத நிலையில், கல்வியில் தனியார்மயம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. அப்படித் தனியார்மயமாகும் சூழலில் கண்காணிப்பு இயந்திரம் முறையாகச் செயல்பட்டால்தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்பது கூடவா அரசுக்குத் தெரியாது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT