வங்கிக் கொள்ளை ரகசியம்!
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், நியாயமாக எதிர்க்கட்சி களும், சமூக ஆர்வலர்களும் எழுப்பி இருக்க வேண்டிய ஒரு பிரச்னைக்காக குரலெழுப்பி இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், நியாயமாக எதிர்க்கட்சி களும், சமூக ஆர்வலர்களும் எழுப்பி இருக்க வேண்டிய ஒரு பிரச்னைக்காக குரலெழுப்பி இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடனுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடனாளிகள், தேர்தலில் போட்டியிடுவதை தலைமைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்பதுதான் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கை.
சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான, வங்கிகளின் வாராக் கடனுக்குக் காரணமானவர்களின் பட்டியலில் சில மக்களவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் உள்ளிட்டவர்கள் இடம் பெறுகிறார்கள். இதுபோன்று தங்களது அரசியல் அதிகார பலத்தாலும், உயர்மட்டத் தொடர்புகளாலும் பெரிய தொகையைக் கடனாகப் பெற்று, வங்கி
களுக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வாராக் கடனாக்கியவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்டவர்களோ அல்லது அப்படிப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களோ தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டுமென்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்திருப்பத்துடன், அப்படி ஏமாற்றியவர்களின் பட்டியலையும் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி இருக்கிறது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்.
Advertisement
புத்திசாலித்தனமாக மத்திய ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்துடன் முக்கியமான சில கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய்களைக் கடனாகப் பெற்றுத் திருப்பித் தராமல் வாராக் கடனாக்கி, வங்கிகளை நஷ்டமடையச் செய்திருக்கின்றன.
2ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு போன்றவற்றிற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்படாச் சொத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தொகை திருப்பிப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டால் அது வாராக் கடன். வந்
தாலும் வரலாம் என்கிற நிலைமையில் இருந்தால் அது ஐயக் கடன். இந்த இரண்டையும் சேர்த்தால் அது செயல்படாத சொத்து (நான் பர்பார்மிங் அசட்). அதாவது, கணக்குப் புத்தகத்தில் வங்கிக்கு வர வேண்டிய கடன் கொடுத்த பணம் என்று பதிவு இருக்கும். ஆனால், வசூலாகாது என்பதால் செயல்படாத சொத்தாகி விடுகிறது. ஊர் உலகை ஏமாற்ற, வசூலிக்கவே முடியாத இந்த வாராக் கடனை, செயல்படாத சொத்து என்று வரவில் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்படாத சொத்து, அல்லது வாராக் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது அதுவே நான்கு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. 2011 மார்ச் மாதம் ரூ.71,800 கோடியாக இருந்த அரசுடைமை வங்கிகளின் வாராக் கடன் அடுத்த 2012 டிசம்பர் மாதத்தில் ரூ.1.55 லட்சம் கோடியாக இரட்டிப்பாகி, இப்போது ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றால் இதெல்லாம் வங்கித் தலைமைக்கும், ரிசர்வ் வங்கித் தலைமைக்கும் தெரியாமல் நடந்துவிடவில்லை.
இதுபற்றி வங்கி நிர்வாகங்கள் பல தடவை அலறிவிட்டன. தாங்கள் அரசியல் நிர்பந்தங்களால் இழப்புக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்று ஓலமிட்டுப் பார்த்தன. தடுக்க வேண்டி நிதியமைச்சரும், அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் துணை நின்றதால் வந்த விளைவுதான் மக்கள் வரிப்பணம், முதலீட்டாளர்களின் பணம் கார்ப்பரேட் நிறுவனங்களால் உறிஞ்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
நாம் வங்கிகளில் வீட்டுக் கடனோ, வியாபாரத்திற்காகக் கடனோ பெற்றுத் திருப்பித் தராவிட்டால், நமது பெயரையும் புகைப்படத்தையும் பத்திரிகைகளில் போட்டு அவமானப்படுத்துவார்கள். ஆனால், வாராக் கடனுக்குக் காரணமான அந்த ஐம்பது முக்கிய கார்ப்பரேட் கடனாளிகள் யார் எவர், அவர்தம் பின்னணி என்ன என்று விளம்பரப்படுத்த வங்கிகள் ஏன் தயங்குகின்றன? பத்து லட்சமும், இருபது லட்சமும் கடன் வாங்கினால் வீட்டை ஏலம் விடுகிறார்கள். புகைப்படம் போட்டு அவமானப்படுத்துகிறார்கள். ஆனால்,
பல கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டவர்களின் பெயரை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதன் சிதம்பர ரகசியம்தான் என்ன? கடந்த இரண்டு வருடங்களில் இவ்வளவு வாராக்கடனா? இது திட்டமிட்ட வங்கி மோசடியாக அல்லவா இருக்கிறது.
இத்துடன் நின்றுவிடவில்லை வங்கியில் நடந்திருக்கும் புத்திசாலித்தனமான கொள்ளை. பல வாராக் கடன்களைத் தள்ளுபடியே செய்துவிட்டிருக்கிறார்கள். அரசுடைமை வங்கிகளை அட்டையாய் உறிஞ்சி விட்டிருக்கிறார்களே பாவிகள்..!