மோடிக்கு வெற்றி!
கடந்த பத்தாண்டுகளாக, குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி நுழைவிசைவு (Visa) தர மறுத்து வந்த அமெரிக்க அரசு, பிரதமர் நரேந்திர மோடியை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றது என்பது அவருக்குக் கிடைத்திருக்கும் தனிப்பட்ட வெற்றி.
கடந்த பத்தாண்டுகளாக, குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி நுழைவிசைவு (Visa) தர மறுத்து வந்த அமெரிக்க அரசு, பிரதமர் நரேந்திர மோடியை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றது என்பது அவருக்குக் கிடைத்திருக்கும் தனிப்பட்ட வெற்றி. இதற்கு முன்னால் அமெரிக்காவுக்குப் பயணம் செய்த எந்தவொரு இந்தியப் பிரதமரும், பிரதமர் நரேந்திர மோடி அளவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனதைக் கவர்ந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் துல்லியமாக அவரால் திட்டமிடப்பட்டிருந்தது.
தனது ஐந்து நாள் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ முப்பதுக்கும் அதிகமான நிகழ்ச்சிகளும், சந்திப்புகளும் அவருக்கு இருந்தன என்பது மட்டுமல்ல, அவர் வெறும் வெந்நீர் மட்டுமே அருந்தியபடி நவராத்திரி விரதத்திலும் இருந்தார் என்பதுதான் அனைவரையும் வியப்படைய வைத்தது. தனக்கு இருக்கும் மன உறுதி அளப்பரியது என்பதைப்
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி உலகுக்கு எடுத்துரைக்க இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நியூயார்க் நகரத்தின் மேடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையைப் பலரும் சிகாகோ உலக சமயங்கள் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையுடன் ஒப்பிடுவது தவறு என்றாலும், அதற்கு இணையான அதிர்
வலைகளை இந்த உரையும் ஏற்படுத்தியது என்பதை மறுக்க இயலாது. குறிப்பாக, அமெரிக்காவில் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்று வாழும் இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் மோடி நீட்டியிருக்கும் நேசக்கரம் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வழி கோலக்கூடும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் சீனர்கள் மிக முக்கியமான காரணமாக இருந்தனர். மாவோ ஆட்சியிலிருந்த தடைகள் அகற்றப்பட்டு, காலத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது சட்ட திட்டங்களை மாற்றி, வெளிநாடுவாழ் சீனர்களின் முதலீட்டையும், தொழில்நுட்பத் தேர்ச்சியையும் தாயகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதுதான், சீனாவின் அசுர வளர்ச்சியின் அடிப்படைக் காரணம். மேடிசன் சதுக்கத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதும், அவர்
களுக்கு "வாழ்நாள் நுழைவுரிமை' வழங்கும் திட்டத்தை அறிவித்ததும் அதைக் கருத்தில் கொண்டுதான், கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய - அமெரிக்க உறவு வெளித்தோற்றத்திற்கு நெருக்கமாக இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சுமுகமாக இருக்கவில்லை. குறிப்பாக, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டாலும் அதில் மிகப்பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதில்
அமெரிக்காவுக்கு வருத்தமுண்டு. அதேபோல, உணவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட மறுப்பதும் அமெரிக்கர்களுக்கு எரிச்சலூட்டி வருகிறது. தங்களது முதலீடுகளுக்குப் பாதுகாப்பளிக்கும் உத்தரவாதம் வேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் நினைக்கின்றன.
இந்தியாவும் சரி, இந்தியத் தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்க சட்ட திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று விழைகிறது. அதற்கு ஏற்றார்போல அமெரிக்கக் குடியேற்றச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பது இந்தியக் கோரிக்கை. அதேபோல, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை.
இவையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தில் தீர்க்கப்படாவிட்டாலும், அதில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நிஜம். உலகில் மிகப்பெரிய ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களாக இருக்கும் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய வெற்றி. தளவாடத் தயாரிப்புத் துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்ட நிலையில், பிரதமர் மோடி இந்தியாவை அந்த நிறுவனங்களின் தளவாட உற்பத்தி மையமாக்க வழிகோலியிருக்கிறார்.
அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இணைந்து எழுதிய கட்டுரையும், வெளியிட்ட 3,500 சொற்கள் கொண்ட கூட்டறிக்கையும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நட்புறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கம். இந்த நெருக்கம் இன்றைய உலகச் சூழலில் இந்தியாவுக்கு அவசியம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தைப் பற்றி இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம். தடை விதித்திருந்த நரேந்திர மோடியை அமெரிக்கா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. தயக்கத்திலிருந்த அமெரிக்க முதலீட்டாளர்களை மோடி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்!