தலையங்கம்

தேர்தல் மட்டுமே தீர்வு!

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியும் சிறப்பும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் உயர்ந்து நிற்கும் அதே வேளையில், பிகாரில் இந்திய அரசியலின் பலவீனம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆசிரியர்

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியும் சிறப்பும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் உயர்ந்து நிற்கும் அதே வேளையில், பிகாரில் இந்திய அரசியலின் பலவீனம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எண்ணிக்கைப் பெரும்பான்மைதானே தவிர, அதற்கு தார்மிக நெறிமுறை எதுவும் கிடையாது என்பதை பாட்னாவில் நடக்கும் அரசியல் நாடகங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தன்னை உருவாக்கிய தலைவனை மீறித் தொண்டர்கள் வளர்வது என்பது அரசியலில் தவிர்க்க முடியாதது. அந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பெயர் ஜிதன் ராம் மாஞ்சி. தன்னைப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்த முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருப்பது மட்டுமல்லாமல், அவரது ஆணைக்குப் பணிந்து பதவி விலகவும் மறுக்கிறார் பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 2005-ஆம் ஆண்டில் வெற்றி பெற்று பிகார் முதல்வரான நிதீஷ் குமார், அதுவரை பிகார் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 15 ஆண்டு கால செல்வாக்கை உடைத்தெறிந்தார். முதல்வர் நிதீஷ் குமாரும், பா.ஜ.க.வைச் சேர்ந்த துணை முதல்வர் சுஷில்குமார் மோடியும் முதல் ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திய நிர்வாகச் சீர்திருத்தமும் வளர்ச்சிப் பணிகளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணியின் செல்வாக்கை அதிகரித்தன.

2010-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள - பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டாவது முறையும் வெற்றி பெற்று முதல்வரான நிதீஷ் குமார், தன்னை அடுத்த பிரதமர் வேட்பாளராக கருதத் தொடங்கியபோதுதான் சிக்கல் உருவானது. பா.ஜ.க. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, பா.ஜ.க.வுடனான தனது 17 ஆண்டு காலக் கூட்டணியை நிதீஷ் குமார் முறித்துக் கொண்டார்.

அதுவரை நிதீஷ் குமாரின் அரசியல் எதிரியாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர முற்பட்டதால் நிதீஷ் குமார் பெரும்பான்மை இழக்காமல் ஆட்சியில் தொடர முடிந்தது. ஆனால், பா.ஜ.க.வுடனான கூட்டணி இல்லாமல் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட நேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைத் தழுவியது. அப்போதே, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, பதவி விலகி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நிதீஷ் குமார் வழிகோலியிருக்க வேண்டும்.

நிதீஷ் குமாரின் ராஜதந்திரம் சந்தித்த முதல் சறுக்கல், தான் பதவி விலகி ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கியதுதான். பதவியில் அமர்ந்த ஜிதன் ராம் மாஞ்சி, நிதீஷ் குமாரால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியின் மூலம் தனக்கென செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டார். அதுதான் இன்றைய பிகார் அரசியல் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம்.

முதல்வராகப் பதவி ஏற்றது முதல், தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி முனைப்புக் காட்டியது நிதீஷ் குமாரை எரிச்சலூட்டியது. போதாக்குறைக்கு, பிற்படுத்தப்பட்ட, தலித் சமுதாயங்களின் மேம்பாட்டுக்குத் தனது அரசு, முந்தைய நிதீஷ் குமார் அரசைவிட அதிக முனைப்புக் காட்டுவதாக முதல்வர் மாஞ்சி கூற முற்பட்டபோது, அவரை இனியும் பதவியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானித்தார் நிதீஷ் குமார்.

பிகார் ஐக்கிய ஜனதா தளச் சட்டப்பேரவைக் கட்சியின் கூட்டத்தைக் கூட்டித் தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் நிதீஷ் குமார். பிகார் சட்டப்பேரவையின் தற்போதைய பலமான 243 உறுப்பினர்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கான 122 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றும் பிகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாடியிடம் கோரியிருக்கிறார் நிதீஷ் குமார்.

ஒருபுறம், நிதீஷ் குமார் தனது ஆதரவு உறுப்பினர்களுடன் ஆளுநரையும், தில்லிக்குப் போய் குடியரசுத் தலைவரையும் சந்தித்து, முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி அரசைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை முதல்வராக்கும்படி வலியுறுத்தி வருகிறார். இன்னொருபுறம், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியோ, தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அதை சட்டப்பேரவை கூடும்போது நிரூபிப்பதாகவும் கூறுகிறார்.

ஜிதன் ராம் மாஞ்சியின் அமைச்சரவையிலிருந்து 20 அமைச்சர்கள் நிதீஷ் குமாருக்கு ஆதரவாகப் பதவி விலகிவிட்டனர். 9 அமைச்சர்கள் மட்டுமே அவரது அமைச்சரவையில் தொடர்கிறார்கள். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராததால், முதல்வர் மட்டுமே 18 துறைகளைக் கவனித்துக் கொள்ளும் கேலிக்கூத்து பிகாரில் அரங்கேறி இருக்கிறது. ஏறத்தாழ நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்ட நிலைமை.

நிதீஷ் குமாரா, ஜிதன் ராம் மாஞ்சியா என்பதல்ல பிரச்னை. பிகாரின் வளர்ச்சிக்கும், அன்றாட நிர்வாகத்திற்கும் எந்தவிதத் தடையும் இல்லாமல் இருப்பதுதான் முக்கியம். அதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. பிகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தலுக்கு வழிகோலுவது மட்டுமே, ஆளுநர் எடுக்க வேண்டிய உடனடி முடிவு. இந்த ஆண்டு கடைசியில் நடக்க வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தலை இப்போதே நடத்துவதில் தவறொன்றும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT