தலையங்கம்

அனைவரும் சமம் அல்ல!

பதவி நாற்காலியில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பொருத்து அந்தப் பதவி பெருமையோ, சிறுமையோ அடைகிறது. இது தற்போது ஊழல் புகாரில் சிக்கித் திணறும் லோக் ஆயுக்தவுக்கும் பொருந்தும்.

ஆசிரியர்

பதவி நாற்காலியில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பொருத்து அந்தப் பதவி பெருமையோ, சிறுமையோ அடைகிறது. இது தற்போது ஊழல் புகாரில் சிக்கித் திணறும் லோக் ஆயுக்தவுக்கும் பொருந்தும்.
 கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதி ஒய். பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ் சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களது துறை சார்ந்த ஊழல் புகார் நடவடிக்கையிலிருந்து விலக்குப் பெறப் பணம் கேட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முதல் கட்ட விசாரணையில், இவ்வாறு தங்களை மிரட்டிப் பணம் வாங்கியதாகப் பல அதிகாரிகள் வாய்மொழியாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
 இத்தகைய வாய்மொழிப் புகார் குறித்து லோக் ஆயுக்த காவல் கண்காணிப்பாளர் சோனியா நரங் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனிடையே, லோக் ஆயுக்த துணை நீதிபதிகளில் ஒருவரான சுபாஷ் பி. ஆதி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவும் தந்துவிட, விவகாரம் தீயாய்ப் பற்றி எரிகிறது. கர்நாடக லோக் ஆயுக்த அலுவலக வாசலில் அன்றாடம் மறியல். நீதிபதி பாஸ்கர் ராவ் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
 ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது, கர்நாடக மாநிலத்தில் 1984-ஆம் ஆண்டு லோக் ஆயுக்த உருவாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பதவி வகித்த காலத்தில், கனிமச் சுரங்க முறைகேட்டை வெளிப்படுத்தவும், ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்குகள் பதியவும் லோக் ஆயுக்த காரணமாக இருந்தது. அதற்கடுத்து, பெங்களூரு நகர்ப் பகுதியில் அமைச்சரின் விருப்புரிமையில் பெற்ற நிலத்தை எடியூரப்பாவின் மகன் வேறு நபருக்கு அதிக விலைக்கு விற்றார் என்ற புகாரை லோக் ஆயுக்த எடுத்துக் கொண்டது. எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அப்படிப்பட்ட லோக் ஆயுக்த மீதே தற்போது ஊழல் புகார் எழுந்துள்ளது.
 கர்நாடக லோக் ஆயுக்த சட்டத்தின்படி, அந்த அமைப்பைக் கலைத்துவிட அரசு முடிவு எடுக்கலாமே தவிர, அதன் மீதான விசாரணையை நடத்த முடியாது. ஏனென்றால், அது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அவ்வாறு விசாரணை நடத்துவதற்கான விதிமுறைகள் லோக் ஆயுக்த சட்டத்திலும் இடம் பெறவில்லை. ஊழலை அம்பலப்படுத்தும் அமைப்பே இப்படி ஊழலுக்கு இலக்காகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
 இருப்பினும்கூட, லோக் ஆயுக்த மீதான புகாரை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்துள்ளது. லோக் ஆயுக்த மீதான லஞ்சப் புகார் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், லோக் ஆயுக்தவிடம் லஞ்சம் கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியல் தனக்கு வந்து சேரவில்லை என்றும், இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியிருக்கிறார்.
 கர்நாடக லோக் ஆயுக்த மட்டுமல்ல, தற்போதைய சூழ்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே, லஞ்சம் வாங்கிப் பிடிபட்டவரை விடுவிக்க லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் வருகின்றன. ஊழலை விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ. இயக்குநர், ஊழல் வழக்கில் பட்டியலிடப்பட்டுள்ள நபர்களை வீட்டுக்கு அழைத்து, சந்தித்துப் பேசிய விவகாரம் அண்மையில் பரபரப்பானது. இது தொடர்பான வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை.
 ஊழல் குறித்து விசாரிக்கும் அமைப்பின் தலைவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாக வேண்டும் என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதற்கு ஜனநாயக நடைமுறையில் உள்ள ஒரே வழி: இப்பொறுப்புகளை ஏற்போர், அவரது ரத்த உறவுகளின் சொத்து, வர்த்தகம், பணப் பரிமாற்ற விவகாரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்படுவதுதான்.
 இத்தகைய வெளிப்படைத்தன்மை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கடப்பாடாக விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதித் துறை இந்த வெளிப்படைத்தன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிபதிகளின் சொத்து விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்க முடியாது என்று சொல்கிறது உச்சநீதிமன்றம். அதை தேசப் பாதுகாப்பு ரகசியம் என்று மட்டும்தான் சொல்லவில்லை.
 நீதிபதிகளுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் அரசு ஏற்கும் மருத்துவச் செலவுகள் குறித்த விவரத்தைக்கூடத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு இது தொடர்பாக அளித்துள்ள உத்தரவில், "இது நீதிபதியின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். நீதிபதிகளின் மருத்துவச் செலவு மக்கள் வரிப் பணத்திலிருந்து தரப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், தற்போது மருத்துவச் செலவு விவரங்களைக் கேட்பவர்கள், பிறகு என்ன மருந்துகள், அவருக்கு என்ன நோய் என்று கேட்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு முறை வேட்பு மனு தாக்கல் செய்யும்போதும் ஓர் அரசியல்வாதி தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிறது தேர்தல் விதி. ஆனால், அரசு வழங்கும் மருத்துவச் செலவு விவரங்களைக்கூடத் தர முடியாது என்கிறது நீதித் துறை. லோக் ஆயுக்தவும் நீதித் துறையின் ஓர் அங்கம்தானே, அதனால் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
 சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்ல!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT