இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய தலைமுறையினர் பெருமைப்பட்ட விஷயம், அவர்கள் மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது. சுதந்திர இந்தியாவில் பிறந்து வாழ்கின்ற நாம் பெருமைப்படக் கூடியது ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது.
அண்ணல் காந்தி அடிகளுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தில் இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், பெரியவர் - சிறியவர், பணக்காரர் - ஏழை, படித்தவர் - பாமரர் என்கிற அத்தனை வேறுபாடுகளையும் மீறி, எந்தவொரு பிரிவினருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாமல் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்றால் அது ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு கோடியிலுள்ள ராமேசுவரத்தில், சாமானிய நடுத்தர இஸ்லாமியக் குடும்பம் ஒன்றில் 1931 அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயினுலாபுதீன், ஆஷியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்த ஒருவர் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர முடிந்தது என்றால், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதைப் பெற முடிந்தது என்றால் அது சுதந்திர இந்தியாவுக்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. இதற்குப் பின்னால் அவரது உழைப்பு இருந்தது என்பது மட்டுமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எதிர்மறைச் சிந்தனையே இல்லாத துணிவு ஆகியவையும் இருந்தன.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்கி உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர் என்பது மட்டுமல்ல அப்துல் கலாமின் சிறப்பு. இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் "வல்லரசான வலிமையான பாரதம்' என்கிற நம்பிக்கையை விதைத்து, நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் என்பதுதான் அவரது மிகப் பெரிய பங்களிப்பு.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட, கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வண்ணம் இருந்திருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் உரையாற்றாத பல்கலைக்கழகங்கள் இல்லை, செல்லாத நாடுகள் இல்லை என்று மாணவர்கள் மத்தியில் கனவுக் கதாநாயகனாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த அவர்தான் உண்மையான "உலகம் சுற்றும் வாலிபன்'!
ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றப் பொன்விழாவில் அப்துல் கலாம் உரையாற்ற அழைக்கப்பட்டார். தனது தலைமை உரையில் புறநானூற்றுக் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற சங்க இலக்கியப் பாடலை மேற்கோள் காட்டி, ஆங்கிலத்தில் அதன் பொருளை விளக்கித் தமிழினத்தின் தொன்மையையும், மேன்மையையும் உலகுக்கு எடுத்துரைக்க முற்பட்ட அப்துல் கலாம்தான் உண்மையான "தமிழினத் தலைவன்'!
தனக்கென்று வீடு வாசல் கிடையாது. சொத்து சுகம் கிடையாது. கேட்டால், "எதுக்கு சார், அதெல்லாம்? எதையும் கொண்டு போக முடியாது' என்று சிரித்துக் கொண்டே சொல்லும் அப்துல் கலாம் சர்வ வியாபியாக அத்தனை இந்தியர்களின் மனதிலும் குடிகொண்டு விட்டிருக்கிறார் என்கிற உண்மை நமக்கு இப்போதுதான் உரைக்கிறது. பதவியோ, அதிகாரமோ, புகழோ தன்னை எந்தவிதத்திலும் பாதித்து விடாமல் கடைசி நிமிடம் வரை அப்துல் கலாமால் இயல்பாக இருக்க முடிந்தது என்பதுதான், 120 கோடி இந்தியர்கள் தங்கள் இதய சிம்மாசனத்தில் அவரை ஏற்றி வைத்திருப்பதன் காரணம்.
எல்லாத் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் லஞ்ச ஊழலும் முறைகேடுகளும் மலிந்துவிட்ட நிலைமை. அரசியல்வாதிகள் பொது வாழ்க்கை என்கிற பெயரில் தனி வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்ட அவலம். இப்படிப்பட்ட சூழலில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஆட்சி அமைப்பின் மீதே நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டிருந்த நேரத்தில், விடிவெள்ளியாய், இப்படியும் வாழ முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது அப்துல் கலாம் என்கிற மாமனிதரின் வாழ்க்கை. பல இளைஞர்களுக்கு அதுதான் வழிகாட்டியாக அமைந்தது.
சரியாகப் பத்து நாள்களுக்கு முன்னால் அரியலூர் புத்தகக் கண்காட்சித் துவக்க விழாவுக்கு வந்தார் அப்துல் கலாம். மிகப் பெரிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கூட கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வரும் சூழலில், வழிநெடுக மக்கள் வெள்ளம் அப்துல் கலாமை வரவேற்க இருபுறமும் காத்திருந்த கண்கொள்ளாக் காட்சி அதிசயம் ஒன்றுமல்ல. இந்தியாவின் எந்த மூலைக்கு அவர் சென்றாலும் அங்கெல்லாம் இதுபோல மக்கள் வெள்ளம் அவரை வரவேற்றது. அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு அப்படியொரு மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த ஒரே மாமனிதன் அவர் மட்டுமே!
கடைசி வரை, இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதைத் தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்த அப்துல் கலாம் மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, தனது 83-ஆவது வயதில் திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானார். "அனாயாசேன மரணம்' என்பது அமானுஷ்யமான மனிதர்களுக்கு மட்டுமே வாய்க்கும். தக்கார் தகவிலர் என்பதை அதுதான் தீர்மானிக்கும். அப்துல் கலாமின் மேன்மைக்கு இதைவிட வேறு சான்றென்ன வேண்டும்?
அப்துல் கலாமை தில்லியில் அடக்கம் செய்திருக்கலாம். பல வெளிநாட்டுத் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருப்பார்கள். அவரை ராமேசுவரத்தில் அடக்கம் செய்வதன் மூலம் அவருக்கு உரிய வகையில் தலைநகரில் நினைவுச் சின்னம் கட்டப்பட்டு ஆண்டுதோறும் மரியாதை செய்யப்படாது. ராமேசுவரத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டாலும், அது தாலுகா தலைநகரம் என்பதால் போதிய கவனத்துடன் பராமரிக்கப்படாது. இப்படி எல்லாம் வேதனைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நினைவுச் சின்னங்களாலும், சிலைகளாலும், அஞ்சலிகளாலும் நினைவுகூரப்பட வேண்டிய தலைவர்களில் ஒருவர் அல்லர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் இதயக் கோயிலில் குடிகொண்டிருக்கும் கனவுக் கதாநாயகன். மரணத்தால் வெல்ல முடியாத பெரும் புகழுக்குச் சொந்தக்காரர். அவர் பிறந்த, அவருக்குப் பிடித்தமான ராமேசுவரம் மண்ணில் அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டாலும், அவரது நினைவு இந்தியக் கனவாகத் துணைக் கண்டம் முழுதும் வியாபித்திருக்கிறது.
"தினமணி' நாளிதழைப் பொருத்தவரை, எழுபது ஆண்டு வாசகர், வழிகாட்டி, மறைந்துவிட்டார். "தினமணி' நாளிதழைப் பள்ளிச் சிறுவனாக விநியோகம் செய்ததையும், "தினமணி' நாளிதழைப் படித்துத் தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டதையும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நமது "கலாம் சார்' மறைந்துவிட்டார் என்கிற உண்மையை ஜீரணிக்க முடியவில்லைதான். மனதைத் தேற்றிக் கொள்வோம். அவர் நிரந்தரமானவர், என்றும் அழிவதில்லை!
இந்தியாவில் நல்லரசு உருவாகும் வரை, இந்தியா உலக வல்லரசாகும்வரை, அப்துல் கலாம் உருவாக்கி இருக்கும் இந்தியக் கனவு கலையாது... கலையவும் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.