தலையங்கம்

அவசரமும் சட்டமும்!

ஜனநாயகம் என்னும் சூரியனை அவசரநிலைச் சட்டம் என்கிற கார்மேகம் மூடிமறைத்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் நாள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது,

ஆசிரியர்

ஜனநாயகம் என்னும் சூரியனை அவசரநிலைச் சட்டம் என்கிற கார்மேகம் மூடிமறைத்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் நாள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டபோது, பத்திரிகைகள் அரசுக்கு எதிரான செய்திகளைப் பிரசுரிப்பது தடை செய்யப்பட்டபோது, மக்கள் கொதித்தெழவில்லை. இந்தியா அதை எதிர்த்து வெகுண்டெழவும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 வெள்ளையர்களின் காலனிய ஆட்சிக்கு எதிராக அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, இந்தியாவின் மக்கள்தொகை வெறும் 30 கோடி மட்டுமே. அப்போதும்கூட, சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடத் தலைப்பட்டவர்கள், அந்த மக்கள்தொகையில் ஒரு சதவீதம் பேர்கூட இல்லை. அதிகபட்சம் போனால், இந்தியா முழுமையையும் கணக்கிட்டாலும்கூட மூன்று லட்சம் பேருக்கு மேல் சுதந்திரத் தாகத்துடன் களமிறங்கவில்லை. ஆனால், அந்த மூன்று லட்சத்திற்கும் குறைவான, 0.1 சதவீதம் தியாகிகளால், 30 கோடிப் பேருக்கும் சுதந்திரம் வாங்கித்தர முடிந்தது.
 உலகில் சுதந்திரத்திற்காகப் போராடிய ஏனைய நாடுகள் அனைத்திலுமே, குடும்பத்துக்கு ஒருவராவது சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களாகவும், அடிமைத்தளையிலிருந்து தங்கள் தேசம் விடுதலை பெற உயிர்ப் பலி கொடுத்தவர்களாகவும் இருப்பார்கள். அதிகமாக ரத்தம் சிந்தாமல், உயிர்ப்பலி கொடுக்காமல் சுதந்திரம் பெற்றதாலோ என்னவோ நம்மில் பலருக்கு சுதந்திரத்தின் அருமையும் தெரியவில்லை, சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, குடி மகன் ஒவ்வொருவருக்கும் கடமைகள் சில உண்டு என்கிற பொறுப்புணர்வும் இல்லை.
 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற காலனி நாடுகள் ஏறத்தாழ 82. அவற்றில் 81 நாடுகளில், ஆட்சிமுறை மாற்றமோ, ராணுவ சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியோ, உள்நாட்டுப் போரால் நிலையற்ற தன்மையோ ஏற்பட்டிருக்கின்றன. அப்படி எதுவுமே நடக்காமல், நமக்கென்று உருவாக்கிக் கொண்ட அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய சாதனைதான். தொடர்ந்து 16 மக்களவைத் தேர்தல்கள், பல்வேறு பிரதமர்கள் என்று துடிப்பான ஜனநாயகம் இந்தியாவில் நிலவுகிறது என்கிற கருத்தையும் மறுப்பதற்கில்லை.
 இந்தப் பின்னணியில்தான், 1975-இல் இந்திரா காந்தியால் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலைச் சட்டத்தையும், அடுத்த 19 மாதங்கள் இந்தியாவில் நிலவிய அடக்குமுறை ஆட்சியையும் நாம் ஆராயக் கடமைப்பட்டிருக்கிறோம். பத்திரிகையாளர்களை இந்திரா அரசு குனியச் சொன்னபோது, அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தனர் என்று எல்.கே. அத்வானி கூறியதையும், ஹெச்.ஆர். கன்னாவைத் தவிர, ஏனைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்க்கத் துணியாததையும் இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
 அதுமட்டுமல்ல, மக்களாட்சி முறை வெற்றிகரமாக நடைபோடுகிறது என்றாலும்கூட, ஜனநாயகம் பணநாயகமாக மாறி இருப்பதையும், வல்லான் வகுத்ததுதான் சட்டம் என்கிற போக்கு எல்லாத் தளங்களிலும் பரவி இருப்பதையும் நாம் வேதனையுடன் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு உருவாகியிருக்கும் "திடீர்' பணக்காரர்களையும், அரசியல் என்கிற போர்வையில் தேர்தலுக்குத் தேர்தல் தங்களை பணப்படுத்திக் கொண்டுவரும் அரசியல்வாதிகளையும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும், எதிர்க்க முடியாமல், கேள்வி கேட்க முடியாமல் வாய்மூடி வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
 சமூக வலைத்தளங்களின் வரவும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் தவறுகளைத் தட்டிக்கேட்கும் புதிய பல தளங்களை உருவாக்கி இருக்கின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஓரளவுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை வெளிச்சம்போட உதவி இருக்கிறது. பரபரப்பை மட்டுமே நம்பி இயங்கும் காட்சி ஊடகங்களும்கூட ஒரு வகையில் தவறுகளை வெளிச்சம்போட உதவுகின்றன. ஆனாலும்கூட, தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஜகேந்திர சிங் போன்ற சமூக ஆர்வலர்கள் எரித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறதே... அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை தொடர்கிறதே...
 உள்கட்சி ஜனநாயகம் அறவே இல்லாத சர்வாதிகாரத் தலைமையின் கீழ், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர்த்து காங்கிரஸ், பா.ஜ.க., மாநிலக் கட்சிகள் அனைத்துமே செயல்படும் நிலையில், இந்திய ஜனநாயகம் மட்டும் சர்வாதிகாரப் போக்கில்லாமல் செயல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதேகூடத் தவறல்லவா?
 அரசியல் சட்டத்தில் 1978-இல் கொண்டு வரப்பட்டிருக்கும் கடுமையான திருத்தங்கள் இனிமேல் சட்டரீதியாக அவசர நிலைச் சட்டத்தைப் பிறப்பிக்கவோ, கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டுப் போடவோ வாய்ப்பில்லாமல் செய்து விட்டிருக்கின்றன. ஆனால், கும்பிடு போடச் சொன்னால் குனியவும், குட்டச் சொன்னால் குப்புற விழவும் சமுதாயம் தயாராகவே இருக்கிறதே, இதை எப்படி, எப்போது மாற்றப் போகிறோம்? உரிமைக்குக் குரலெழுப்பிக் கடமைக்கு முன்னுரிமை அளிக்கும் இந்திய சமுதாயம் உருவாவது எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT