தலையங்கம்

அரசாணை அல்ல தீர்வு!

மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றத் தடை செய்யும் சட்டம் தமிழகத்தில் மார்ச் 15 தேதி முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர்

மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றத் தடை செய்யும் சட்டம் தமிழகத்தில் மார்ச் 15 தேதி முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இத்தகைய அறிவிப்பை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு செய்திருக்கிறது. இது மிகவும் பாராட்டத் தக்க நடவடிக்கை.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கழிவுநீர் சாக்கடை, தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுத்தக்கூடாது. இது தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் எடுப்புக் கழிவறை அல்லது உலர் கழிவறைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2003-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறை அரசாணை வெளியிட்டு, மனிதர் கழிவை மனிதர் அகற்றக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால், அப்போதும் இந்த ஆணை நடைமுறைக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அப்போது போதுமான கருவிகள் இல்லாததுதான்.

நகர்ப்புற பாதாள சாக்கடைகள் அடைத்துக் கொண்டால் அதற்குள் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு இத்தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். வீடுகளில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாவதும், சாக்கடைக்குள் மூழ்கிய தொழிலாளி இறப்பதும், இவர்கள் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாவதும் மனித உரிமை அமைப்புகளால் எடுத்துரைக்கப்பட்டு, வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல விழிப்புணர்வுப் போராட்டங்களுக்குப் பிறகுதான் இதில் ஓரளவு வெற்றி காண முடிந்தது.

பின்னர், 2013-ஆம் ஆண்டு இது தொடர்பாக தீவிரமான கணக்கெடுப்பில் தமிழக அரசு இறங்கியது. தற்போது இந்தத் தடை அமலுக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இதனால், சுமார் 35,000 தொழிலாளர்கள் மறுவாழ்வு பெறுவார்கள். இத்தகைய பணிகளில் ஆள்களை ஈடுபடுத்தாமல் இயந்திரத்தை ஈடுபடுத்த வகை செய்வதற்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு ரூ.6.3 கோடியை இயந்திரங்கள் வாங்கவும், ரூ.22 கோடியை வேலையிழக்கும் இந்தப் பணியாளர்களின் மறுவாழ்வுக்காக செலவிடவும் ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்தத் தடை மிகவும் அவசியமானது என்றாலும் நடைமுறைப்படுத்தும் செயற்கைக் கருவிகள் எல்லா இடங்களிலும் இல்லாத நிலையில் இதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநகராட்சியில் இதற்கான கருவிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பல நகராட்சிகளில் இத்தகைய கருவிகளே இல்லை.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 1.5 லட்சம் வீடுகளின் கழிவறைகள் நேரடியாக தெருச் சாக்கடையில் விடப்படும் வகையில் கட்டப்பட்டவை. 90 சதவீத வீடுகளில் கழிவுநீர்த் தொட்டி உள்ளது. இவை நிரம்பி வழிந்தால், மாநகராட்சி, நகராட்சிகளைப் பொருத்தவரை தனியார் கழிவுநீர் சேகரிப்பு லாரிகளில் மோட்டார் வைத்து ஏற்றி அப்புறப்படுத்துகிறார்கள். ஆனால், பல நகராட்சிகளில் இதற்கான டேங்கர் லாரிகள் தனியாரிடமோ அல்லது உள்ளாட்சியிடமோ இல்லை. இந்த நிலையில், இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகும் வீடுகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அரசு வெளியிட வேண்டும்.

தனியார் லாரிகளை பயன்படுத்துவதில் மற்றொரு சிக்கல், இவர்கள் இந்தக் கழிவுநீரை எடுத்துச் சென்று, ஆறுகளில் ஏரிகளில் இரவோடு இரவாக விட்டுவிடுகிறார்கள். இவ்வாறான கழிவுநீர் சேகரிப்பு லாரிகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும், இவர்கள் வீடுகளில் சேகரிக்கும் கழிவுநீரை எங்கே கொண்டுபோய் கொட்ட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு அறிவிக்க வேண்டும். இந்த அறிக்கைகளின் படி உள்ளாட்சி அமைப்புகள் கடும் நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, உள்ளூர் நீர்நிலைகள் இத்தகைய கழிவுகளால் மாசுபடாத நிலை உருவாகும்.

இந்தச் சிறப்பான திட்டத்தை படிநிலைகளில் ஒவ்வொன்றாக அமல்படுத்தியிருக்கலாம். முதலில் மாநகராட்சி, பிறகு நகராட்சி, பிறகு பேரூராட்சிகள் என்று படிப்படியாக அமல்படுத்திக்கொண்டே வந்திருந்தால், ஒவ்வொரு பகுதியிலும் முழுமையாக இதைச் செயல்படுத்தவும், இதற்கான கருவிகள் வாங்குதல், மறுவாழ்வுப்பணி ஆகியவற்றுக்கு நிதியை அந்தந்தப் பகுதிக்கு குறிப்பிட்டு ஒதுக்கவும் முடியும். மேலும், இதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அனுபவத்தில் கண்டு, அதற்கான தீர்வுகளுடன் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்க முடியும்.

உயர்நீதிமன்ற உத்தரவு முறையான திட்டமிடலுக்குத் தடையாகி விட்டிருக்கிறது. அரசு நீதிமன்றத்திடம் உத்தரவாதம் அளிக்கக் கால அவகாசம் கோரலாம் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் நடைமுறை சாத்தியம் மிகவும் கடினம்.

வீடுகளுக்கு இந்த நிலைமை என்றால், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்டணக் கழிப்பறைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், சில அவசரகால நேர்வுகளில் எவ்வாறு தூய்மைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

உரிய கருவிகள், போதுமான டேங்கர் லாரிகள், சில அவசர நேர்வுகளில் விதித்தளர்வுகள் இல்லாவிட்டால் இந்தச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளின் லஞ்சத்துக்கு மட்டுமே வழிவகுப்பதாக அமையக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அலை ஓய்ந்த பின்னர் கடலில்

இறங்கலாம் எனக் காத்திருக்க முடியாதுதான். அதே நேரத்தில் நடைமுறை சாத்தியத்தைக் கருத்தில் கொள்ளாமல் சட்டம் இயற்றுவதால் பயன் இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT