கடந்த நான்கு நாள்களாக நடந்து வரும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது உண்மைதான். என்றாலும், அவர்களுடைய சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
÷இந்தியா முழுவதும் உள்ள 373 சுங்கச் சாவடிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகப்படியானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கட்டு - பராமரி - ஒப்படை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில், இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணமே சாலை அமைப்பதற்கான மொத்தச் செலவையும் ஈடுகட்டியிருக்கும் என்கிற நிலையில், இந்த சுங்கச் சாவடிகள் இனியும் தொடர்ந்து நடத்தப்படுவதன் அவசியம்தான் என்ன? சாலைப் பராமரிப்புக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் முதலில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட இப்போது கட்டணம் குறைக்கப்படுவதுதானே நியாயம்? அதிகரிக்கப்படுகிறதே ஏன்? போட்ட முதலுக்கு லாபத்தையும் எடுத்துவிட்டு பராமரிப்பு என்கிற பெயரில் சுங்கச்சாவடிகள் தொடர்ந்து பொதுமக்களிடம் கொள்ளை அடிப்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற விநோதம் இந்தியாவில் மட்டுமே நிகழும்.
÷வெளிநாடுகளில் சுங்கச் சாவடிகளில் உள்ளதைப் போல, ஒவ்வொரு வாகனஓட்டியும் பணம் செலுத்தியவுடன், திட்டச் செலவில் எவ்வளவு குறைந்து வருகிறது என்பதை விளக்கும் கணினிப்பலகை வைக்கப்பட வேண்டும். இந்த வெளிப்படைத் தன்மையை, அனைத்து சங்கச் சாவடிகளையும் கணினிமயமாக்குதல், இணையத்தின்வழி சுங்கக் கட்டணம் வசூலித்தல் ஆகியவற்றால் மட்டுமே ஏற்படுத்தி விட முடியாது.
மொத்தச் செலவும் சுங்கக் கட்டணத்தின் மூலம் வசூலானதும், அந்த சுங்கச் சாவடியை எடுத்துவிட வேண்டும். அப்படியே பராமரிப்புக்காக சுங்கம் வசூலிப்பது என்றால் வருடாந்திர பராமரிப்புத் தொகை எவ்வளவு, சுங்கத்தின் மூலம் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உரிமை உள்ளவர்கள். இத்தகைய நடைமுறை எதுவும் இல்லாமல், சுங்கக் கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே போவது, அரசியல்வாதிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே இருக்கும் ரகசிய கூட்டுறவைத்தான் வெளிச்சம் போடுகிறது.
÷சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் அல்லது கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வாகனப் போக்குவரத்து சம்மேளனம் கடந்த சில நாள்களாக லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்களது அடிப்படையான கோபம், சுங்கக் கட்டணம் அல்ல, வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) தொடர்பானது.
÷சுங்கக் கட்டணத்தை எதிர்க்கும் லாரி உரிமையாளர்கள், இதை ஆண்டுக்கு ஒரு முறை கட்டணமாக வசூலிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு இதை ஏற்கவில்லை. சரக்கு இல்லாதபோது, சரக்கு ஏற்றப்பட்டிருக்கும்போது என்று இரு வகையாகக் கட்டணங்களை நிர்ணயிப்பதே சரியானதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இதற்கு லாரி உரிமையாளர்கள் உடன்படவில்லை.
÷சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ஒரு பேருந்து, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்துகிறது என்பதற்காக, பயணிகளிடம் அந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை. ஆனால், லாரிகள் அப்படியல்ல. சுங்கக் கட்டணத்தை தனியாகக் கணக்குப் போட்டு, வாடகையுடன் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கின்றன. ஆகவே, சுங்கக் கட்டணத்தால் லாரிகளுக்கு நட்டம் என்பதை ஏற்பதற்கில்லை.
÷பிறகு ஏன் இந்த வலுவான போராட்டம் என்றால், இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள வரிப்பிடித்தம்தான். இந்தச் சட்டத்தின்படி, பத்து சரக்கு வாகனங்களுக்குக் குறைவாக உள்ள சரக்கு நிறுவனங்கள் மட்டுமே வரிப் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. 10-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வைத்துள்ள நிறுவனங்களின் ஒவ்வொரு வாடகையிலும் 2% வரிப் பிடித்தம் செய்ய வேண்டியது கட்டாயம்.
÷பாதிக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சொந்தமாக சில சரக்கு லாரிகள், மணல் ஜல்லி லாரிகள், சிறு சுமை வண்டிகள், டேங்கர் லாரிகள், சில டாக்ஸிகள் என பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வைத்திருக்கின்றனர். லாரி வாடகையில் இத்தகைய வரிப் பிடித்தம் செய்வதை இவர்கள் விரும்பவில்லை. ஆகவே, லாரி வாடகையில் 2% வரிப் பிடித்தம் செய்யும் நடைமுறையை எதிர்க்கிறார்கள். சுங்கக் கட்டணக் கொள்ளையை, சரக்கை ஏற்றிச்செல்வோரிடம் வசூலித்துவிட முடியும் என்றாலும், வரிப் பிடித்தம் செய்த பணத்தை வாங்குவது, அரசுக்கு கட்டுவது என்றால் வருமானக் கணக்கைக் காட்டும் நடைமுறைக்கு உள்பட்டாக வேண்டும். இதுதான் அவர்களது கோபம்.
÷நரேந்திர மோடி அரசு மக்களின் பேராதரவைப் பெற வேண்டுமானால் தனியார் வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில் முழுமையான விதிவிலக்கு அளிப்பது, பராமரிப்புக்காக மட்டுமே வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை நியாயமாக நிர்ணயித்து குறைத்து வசூலிப்பது, முறையாக சாலைகள் பராமரிக்கப்படாவிட்டால் சுங்கத்துக்கான உரிமத்தை ரத்துச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கோலத்தின் அடையாளம் சுங்கச்சாவடிகள். இத்தகைய சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூருவாராக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.