தலையங்கம்

பேசுவதுதான் புத்திசாலித்தனம்!

ஆசிரியர்

கடந்த செவ்வாய்க்கிழமை நக்ரோடா ராணுவத் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அதிகாரிகளும் ஐந்து சிப்பாய்களும் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜம்முவுக்கு அருகிலுள்ள நக்ரோடாவில் அமைக்கப்பட்டிருக்கும் பலியான் புல் ராணுவத் தளத்தின்மீது இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. "16 கார்ப்ஸ்' என்று அறியப்படும் முக்கியமான ராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது பலியான் புல் ராணுவத் தளம். தீவிரவாதிகள் காவல்துறையினரின் சீருடையுடன் நுழைந்திருக்கிறார்கள்.
சுவரேறிக் குதித்து பலியான் புல் ராணுவத் தளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அதிகாரிகளின் உணவகத்திற்குள், ஒரு அதிகாரியையும் மூன்று வீரர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு நுழைந்திருக்கிறார்கள். அந்த உணவகத்தைத் தாண்டி அதிகாரிகளின் குடியிருப்பு இருக்கிறது. அந்தக் குடியிருப்பிற்குள் நுழைந்து அதிகாரிகளின் குடும்பத்தினரைப் பிணைக்கைதிகளாக்குவதுதான் தீவிரவாதிகளின் திட்டம். தாக்குதல் நடந்தபோது அந்தக் குடியிருப்பில் 14 பேர் தங்கள் வீட்டிற்குள் இருந்திருக்கிறார்கள்.
அதிகாரிகளின் மனைவியர், வீட்டிற்குள் நுழைய முற்பட்ட தீவிரவாதிகளைத் துணிவுடன் எதிர்கொண்டனர் என்பது மட்டுமல்ல, வீட்டிலிருக்கும் பொருள்களைக் கதவிற்குப் பின்னால் வைத்து அடுக்கி, தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்கவும் முற்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் தீவிரவாதிகள் சரமாரியாக குண்டுகளால் துளைத்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
உள்ளே நிராயுதபாணியாக இருந்த இரண்டு அதிகாரிகளையும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களையும் பாதுகாக்கும் பணியில் மேலும் ஒரு அதிகாரியும், இரண்டு வீரர்களும் உயிர்த்தியாகம் செய்தனர். மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, அவர்களது முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களையும் சேர்த்து, ஜம்மு காஷ்மீரில் மட்டும் இந்த ஆண்டில் 89 ராணுவத்தினர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் இதுதான் அதிகமான எண்ணிக்கை. உரி தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு 27 ராணுவத்தினரை நாம் பலி கொடுத்திருக்கிறோம்.
முன்பு பதான்கோட்டிலும், பிறகு உரியிலும் எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ அதேபோலத்தான் இந்தத் தாக்குதலும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், கடுமையான பாதுகாப்புள்ள ராணுவத்தளங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அது நமது பலவீனத்தையும், பொறுப்பின்மையையும் காட்டுகிறது. ஒவ்வொரு தாக்குதலைத் தொடர்ந்தும் விசாரணை, புதிய பாதுகாப்பு உத்தரவுகள் என்று தொடர்கிறதே தவிர, முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதைத்தான் இது தெளிவுபடுத்துகிறது.
பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசனைகூற, முப்படைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. எங்கெங்கே தவறுகள் நடந்தன, நமது பலவீனங்கள் என்னென்ன போன்றவற்றை ஆய்வு செய்து முப்படைக் குழு பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத்தான் நக்ரோடா தாக்குதல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துவதும், அப்படித் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போது ராணுவத்தின் கவனம் திரும்பி இருப்பதைப் பயன்படுத்தி தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்வதும் பாகிஸ்தானின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்து வருகிறது. இத்தனை தாக்குதல்களுக்குப் பிறகும், இதைப் புரிந்து கொண்டு நமது ராணுவம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குத் தயாராக இல்லாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. அரசு அலுவலக ஊழியர்கள் செயல்படுவதுபோல, ராணுவமும் செயல்பட்டால் எப்படி?
இங்கே நக்ரோடா ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது, அங்கே இஸ்லாமாபாதில் ஜெனரல் ரஹீல் ஷெரீப் பதவி ஓய்வுபெற்று, புதிய ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஓய்வுபெறுவதற்கு முன்னால் அதற்கு அடையாளமாக தாக்குதல் நடத்த வேண்டுமென ரஹீல் ஷெரீப் நினைத்தாரா இல்லை தலைமை மாறினாலும் எங்கள் அணுகுமுறை மாறாது என்று ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. தீவிரவாதிகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் கொடுப்பது தொடரும் என்பதை பாகிஸ்தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறது.
எல்லைப்புறத்தில் பதற்றம் தொடர்வதும், அடிக்கடி நமது ராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்படுவதும் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டுக்குமே நல்லதல்ல. இதனால் இரண்டு நாடுகளும் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டும் அண்டை நாடுகளாகத்தான் இருந்தாக வேண்டும். விலகிப்போய்விட முடியாது. அதனால், இந்தப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை நடத்த முற்படுவதுதான் ஒரே தீர்வு.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளிவிவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமிர்தசரஸுக்கு வந்திருக்கிறார். அவரது விஜயத்தைப் பயன்படுத்தி, இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம். பேச்சுவார்த்தை பலவீனமுமல்ல; ராணுவ நடவடிக்கை தீர்வுமல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT