விழுமியங்களின் வீழ்ச்சி!
அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது
அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். உலகின் முதல் சுதந்திர, ஜனநாயகக் குடியரசு, தனது 228 ஆண்டுக்கான வரலாற்றில் இந்த முறைபோன்ற ஒரு மோசமான அதிபர் தேர்தலைச் சந்தித்ததில்லை.
உலகுக்குத் தனிமனித உரிமையையும், ஜனநாயகப் பண்புகளையும் கற்றுக் கொடுத்த தேசம் என்கிற பெருமை அமெரிக்காவுக்கு எப்போதுமே உண்டு. இதுவரை அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களும் சரி, அதிபர் பதவிக்குப் போட்டியிட்டவர்களும் சரி, தங்களது பிரசாரத்திலோ, மாற்று வேட்பாளருடனான விவாதங்களிலோ, கண்ணியமாகவும், நாகரிகத்துடனும்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் புரட்டிப்போட்டு, மிகவும் தரக்குறைவான பிரசாரத்தில், அதிபர் பதவி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்பும், ஹிலாரி கிளிண்டனும் இறங்கியதைப் பார்த்து உலகமே அருவருப்பில் முகம் சுளிக்கிறது.
32.4 கோடி மக்கள் வாழும் அமெரிக்கா உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இங்கே குடியேறி இருப்பதால், வேறு எந்த நாட்டைவிடவும் அதிகமான அளவு பல்வேறு இனத்தவர்கள் வாழும் தேசமும் அமெரிக்காவாகத்தான் இருக்கிறது. 72.4% வெள்ளையர்கள், 12.6% கறுப்பர் இனத்தவர்கள், 2.9% கலப்பு இனத்தவர்கள், 4.8% ஆசியர்கள், 0.9% பூர்வ குடியினர் என்று பரவலாக இருக்கும் சமூகம் அமெரிக்க சமூகம்.
இந்த அதிபர் தேர்தலைப் பொருத்தவரை, அமெரிக்க வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம் யாருக்கு வாக்களிப்பது என்பதல்ல. யாருக்கு வாக்களிக்காமல் இருப்பது என்பதுதான். காரணம், தேர்தல் களத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் சரி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் சரி, அமெரிக்க அதிபரிடம் எதிர்பார்க்கப்படும் அடிப்படைத் தகுதிகள்கூட இல்லாதவர்களாக மக்கள் முன் காட்சி அளிக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை டொனால்ட் டிரம்ப் பெயரைக்கூட அமெரிக்க மக்கள் கேட்டதில்லை. அவர் எப்படி திடீரென தோன்றி, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகவும் உயர முடிந்தது என்பது குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சியே நடத்துகிறார்கள். அவர் வரி ஏய்ப்பு செய்தவர் என்கிற குற்றச்சாட்டு எழுந்தபோது, தான் எப்படியெல்லாம் வரி கட்டாமல் தவிர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்ததாக டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியதை அமெரிக்கர்கள் வியந்து பார்க்கிறார்கள்.
அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர் வரி ஏய்ப்பு செய்தவர் என்பது மட்டுமல்ல, பல பெண்களிடம் தரக்குறைவாக நடந்திருப்பவர் என்பதும், வாய்க்கு வந்ததையெல்லாம் வரைமுறையே இல்லாமல் உளறிக் கொட்டுபவர் என்பதும் அமெரிக்க வாக்காளர்களைத் திடுக்கிட வைக்கிறது. அத்தனை முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஐ.எஸ்.தீவிரவாதிகளைக் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள் அமெரிக்காவில் ஒருசாரார்.
அதேநேரத்தில், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் வசதியாக வாழ்வது, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா சந்தையாக மாறியிருப்பது, பொருளாதாரத் தேக்கத்தாலும், விலைவாசியாலும் நடுத்தட்டு, அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது என்பவை எல்லாம், டொனால்ட் டிரம்ப்போல ஒரு தடாலடி மனிதரால்தான் மாற்றம் காணும் என்று நம்புகிற ஒரு கூட்டமும் அமெரிக்காவில் இருக்கிறது.
ஹிலாரி கிளிண்டனைப் பொருத்தவரை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் அமெரிக்கப் பெண் அதிபர் என்கிற பெருமைக்குரியவராவார். அதனால், பெண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. அதேநேரத்தில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி என்பதைத் தவிர, அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவிதப் பின்னணியோ, சாதனைகளோ கிடையாது. அமெரிக்க வெளியுறவுச் செயலராக அவரது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை.
அவரது உதவியாளரான ஹுமா அபெதினின் முன்னாள் கணவருடைய மின்னஞ்சல்களில் ஹிலாரி கிளிண்டன் குறித்த தகவல்கள் புலனாய்வுத் துறையின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. வெளியுறவுச் செயலராக இருக்கும்போது, தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கி அதில் அவர் ரகசியமாக சில தகவல் பரிமாற்றங்களை நடத்தியிருப்பதும் வெளியாகி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தனது அறக்கட்டளைக்குப் பல கோடி டாலர்கள் நன்கொடையாக அவர் வசூலித்திருப்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.
டொனால்ட் டிரம்ப், ஒரு பண முதலை, நாகரிகம் இல்லாதவர், அமெரிக்க அதிபராக இருப்பதற்கான கண்ணியம் அவருக்குக் கிடையாது என்று கருதுபவர்கள், ஹிலாரி கிளிண்டனை அவருக்கு மாற்றாகக் கருதுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெளிப்புறத் தோற்றத்திற்கு கண்ணியமானவராக இருந்தாலும், ஹிலாரி கிளிண்டன் நேர்மையாளர் அல்ல என்கிற கருத்து பரவலாகவே காணப்படுகிறது. சட்டமீறல்களில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை, சட்டத்தைப் பாதுகாக்கும் அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க மக்கள் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், தங்களது தலைவர்கள் ஒழுக்கமும் நேர்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். கடந்த 2008-இல் "நம்மால் முடியும்' என்கிற கோஷத்துடன் அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார் பராக் ஒபாமா. அவர் ஏற்படுத்திய அந்த நம்பிக்கை பொய்த்து விட்டிருக்கிறது. அதனால் பரவலான விரக்தி காணப்படுகிறது. இந்த விரக்தியை தனது மூலதனமாக்க நினைக்கிறார் டொனால்ட் டிரம்ப் என்கிற வியாபாரி.
கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, பின் தங்கியிருந்த டொனால்ட் டிரம்ப் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான், அதிபர் பராக் ஒபாமா தனது நிலையிலிருந்து கீழிறங்கி கறுப்பர் இன மக்கள் தவறாமல் வாக்களித்து ஹிலாரி கிளிண்டனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வடக்கு கரோலினாவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இங்கே ஜாதி ரீதியாக, மத ரீதியாக அரசியல் நடத்துவதுபோல, அமெரிக்காவில் இன ரீதியாக அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தை இந்தத் தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது.
உலகுக்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுத்த நாடு அமெரிக்கா. உலகின் மூத்த ஜனநாயகக் குடியரசு. டொனால்டோ, ஹிலாரியோ யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் அதிபர் பதவியைப் பெறுவார்கள். ஆனால், ஜார்ஜ் வாஷிங்டனும், தாமஸ் ஜெபர்சனும், ஆபிரஹாம் லிங்கனும் கண்ட அமெரிக்கா என்கிற கனவு தேசத்தைத் தொலைத்திருப்பார்கள். அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டிருக்கிறது அமெரிக்க அரசியல் என்பதுதான் அதிபர் தேர்தல் பிரசாரம் உணர்த்தும் உண்மை.
அமெரிக்க அதிபராக வெற்றி பெறுவது யாராக இருந்தாலும், தோல்வி அடைவது ஜனநாயகப் பண்புகளாகத்தான் இருக்கும். உலகின் மூத்த மக்களாட்சிக்கே இதுதான் கதி என்று சொன்னால், மனித சமுதாயத்தின் அடுத்தகட்ட நகர்வுதான் என்ன?