முகப்பு
தலையங்கம்

பீதியிலாழ்த்தும் பேராபத்து!

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் காச நோயிலிருந்து நாம்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் காச நோயிலிருந்து நாம் முற்றிலுமாக விடுதலை பெற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது வெறும் மாயை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1962-இல் நாடு தழுவிய அளவில் காச நோய்க்கு எதிராக அரசு முனைப்புடன் செயல்பட திட்டம் வகுத்தது. இந்தியா முழுவதும், கிராமம் கிராமமாக, வீடு வீடாக சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரில் சென்று காச நோய் பாதிப்பு இருப்பவர்களை அடையாளம் கண்டு, சிகிச்சை அளிக்க முற்பட்டனர். அதன் விளைவாக காச நோய் அறவே அழிந்துவிட்டது என்கிற இறுமாப்பில் இதுவரை இருந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், காச நோய் முற்றிலுமாக அழிந்துவிடாமல் நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்திருக்கிறது. புற்று நோய் பரவுவதுபோல, வெளியில் தெரியாமல் காச நோய் பரவிக் கொண்டிருக்கிறது என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இதேநிலை தொடருமானால், இது மிகப்பெரிய அழிவுக்கு இந்தியாவை இட்டுச் செல்லக் கூடும்.
உலகில் அதிவேகமாகப் பரவி வரும் காச நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரம் கருதி, உலக சுகாதார நிறுவனம் சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்ட இருக்கிறது என்றால், எந்த அளவுக்குக் காச நோயின் பாதிப்பு கடுமையாக மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உலகளாவிய அளவில் சிகிச்சை பெறும் காச நோயாளிகளில் 24% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதால், நாம் அதிகமாகவே கவலைப்பட்டாக வேண்டும்.
சர்வதேச காச நோய் அறிக்கை வெளியாகி இருக்கிறது. புதிதாகக் கண்டறியப்பட்டிருக்கும் காச நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 60% பேர், ஆசிய - ஆப்பிரிக்கக் கண்டங்களிலுள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆண்டுக்கு ஆண்டு காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, கடந்த 2014-15ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, காச நோயால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 50% அதிகரித்திருக்கிறது.
உலகளாவிய அளவில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இந்தியா ஒரு முக்கியமான காரணம். 2014-இல் 22 லட்சமாக இருந்த சிகிச்சை பெறும் காச நோயாளிகளின் எண்ணிக்கை, 2015-இல் 28 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரம் தோராயமானதுதான். உண்மை நிலை என்ன என்பது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேசிய காச நோய் கணக்கெடுப்பிற்குப் பிறகுதான் தெரிய வரும். காச நோயால் ஏற்பட்ட மரணங்கள் 2014-இல் 2 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தது 2015-இல் 4 லட்சத்து 83 ஆயிரமாக இரட்டிப்பாகி இருக்கின்றன. இதுவும் கூடத் தோராயமான கணக்குத்தானே தவிர, சரியான புள்ளிவிவரமல்ல.
2015-இல் சிகிச்சை பெறும் காச நோயாளிகளின் எண்ணிக்கை 28 லட்சம் என்று கூறப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும். காரணம், இந்தப் புள்ளிவிவரம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கியதல்ல. காச நோயாளிகள் குறித்து மருத்துவர்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தும்கூட, எல்லா மருத்துவர்களும் இதைப் பின்பற்றுவதில்லை.
காச நோய்க்கு எதிரான முனைப்பில், ஒவ்வொரு காச நோயாளி குறித்த தகவலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையும், குணமான விவரமும் பதிவு செய்யப்பட்டாக வேண்டும். கண்டறியப்படும் அனைத்துக் காச நோயாளிகளுக்கும் முறையான, முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டாக வேண்டும். இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. மொத்த நோயாளிகளில் 50% பேர் தனியாரிடம் மருத்துவம் செய்து கொண்டு குணமடைபவர்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 65% மட்டுமே முழுமையாக சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.
அதிகரித்து வரும் காச நோய் தொற்றுக்கும், மரணங்களுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் நோய் குறித்த போதுமான விழிப்புணர்வோ புரிதலோ இல்லாமல் இருப்பது. அப்படியே நோய் கண்டறியப்பட்டாலும், போதுமான கவனமும் தொடர் மருத்துவ சிகிச்சையும் இல்லாததால் நோய் முற்றி மரணமடைதல் பரவலாகவே காணப்படுகிறது. காச நோயாளிகளுக்குத் தொடர்ந்து மருத்துவமும் கவனிப்பும் தேவை. பாதி சிகிச்சையில், சிகிச்சையைத் தொடராமல் விடுபவர்கள் ஏராளம்.
ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறாமலேயே இருந்து வருகிறார்கள். வெறும் இருமல்தான், காய்ச்சல்தான் என்று நினைத்துக் கொண்டு, சுய சிகிச்சை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். காச நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கி 55 ஆண்டுகள் கடந்தும்கூட, இன்னும் இதுகுறித்த முழுமையான புரிதல் ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியாது.
காச நோய்க்கான சில மருந்துகள் செயலிழந்து விட்டிருப்பது மிகவும் முக்கியமான இன்னொரு காரணம். காச நோய்க் கிருமிகள் மருந்துக்குக் கட்டுப்படாத நிலைக்கு மாறிவருகின்றன. இதுதான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கப் போகிறது. இந்தியாவில் மட்டும் 79 ஆயிரம் நோயாளிகளின் காச நோய் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.
இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும் பகுதியினர் அடித்தட்டு மக்கள். அரசு மருத்துவமனைகள் வலுப்படுத்தப்பட்டு, சுகாதார அமைச்சகம் விரைந்து செயல்படாவிட்டால், விரைவிலேயே இந்தியாவையும், காலப்போக்கில் உலகையும் பீதியில் ஆழ்த்த இருக்கும் பேராபத்து காசமாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.