இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார். அண்மையில், இம்பாக்ட் வீரர் விதி தனிப்பட்ட முறையில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்குப் பிடிக்கவில்லை என அக்ஷர் படேலும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இம்பாக்ட் வீரர் விதி நல்ல புதுமையான விஷயம் என நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் விதி இடம்பெற்றிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. இம்பாக்ட் வீரர் விதியில் எது சரி, எது தவறு என பலரும் விவாதம் செய்கின்றனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் விதியை போட்டியை சுவாரசியமாக்கும் புதுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன் என்றார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை நாளை (மார்ச் 28) சின்னசாமி திடலில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.