முகப்பு
தலையங்கம்

மருந்துக்கு மருந்து!

கடந்த சில ஆண்டுகளில் இணைய வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டிற்குள் 69 பில்லியன் டாலரை (சுமார் ரூ.4.73 லட்சம் கோடி) எட்டுமளவுக்கு இணைய வர்த்தகம் அதிகரிக்கும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

கடந்த சில ஆண்டுகளில் இணைய வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டிற்குள் 69 பில்லியன் டாலரை (சுமார் ரூ.4.73 லட்சம் கோடி) எட்டுமளவுக்கு இணைய வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்நாப் டீல், அலிபாபா, பேடிஎம், பிக் பாஸ்கெட், மேக் மை ட்ரிப், க்ளியர் ட்ரிப் உள்ளிட்ட இணைய வர்த்தக நிறுவனங்கள் இளைய தலைமுறையினரில் 40 விழுக்காட்டினரை சென்றடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இணைய வர்த்தக வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இணைய மருந்தகங்கள் உருவாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி, மருந்தகங்களின் சில்லறை விற்பனையைப் பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும், காலப்போக்கில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். சமீபத்தில், இணையம் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே சில விதிமுறைகளையம், கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டிருக்கின்றன. இணைய மருந்தகங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்த விதிமுறைகளை, இணையத்தில் மருந்துகள் விற்பனை செய்யும் எல்லா நிறுவனங்களும் பின்பற்றியாக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறது.
இணைய மருந்தகங்கள், பதிவு செய்த மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பட்டியல் மருந்துகளை(Scheduled Drugs) வழங்கக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை. மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதத்தின் நகல் பெற்றால் மட்டுமே இந்த மருந்துகளை அவர்கள் அனுப்பித் தர முடியும். அது மட்டுமில்லாமல், பட்டியல் பத்தில் உட்படுத்தப்பட்ட மருந்துகளையும், தொடர்ந்து பயன்படுத்தினால் அடிமையாகிவிடக் கூடிய மருந்துகளையும் இணைய மருந்தகங்கள் கையாள்வதும், விற்பனை செய்வதும் கூடாது என்றும் இணைய மருந்தகங்களின் கூட்டமைப்பு தடை விதித்திருக்கிறது.
சமீப காலமாக, இணைய மருந்தகங்களின் செயல்பாடுகள் பற்றியும், பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், கூட்டமைப்பு விதிமுறைகளை ஏற்படுத்த முன்வந்திருப்பதது பாராட்டுக்குரியது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோயாளிகள் தாங்களே மருந்து வாங்கி உட்கொள்வதும், இணைய மருந்தகங்களும், மருந்துக் கடைகளும் அவர்களுக்கு மருந்து விற்பனை செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. இணைய மருந்தகங்கள் மட்டுமில்லாமல், நேரடி சில்லறை மருந்தகங்களின் செயல்பாடுகளிலும்கூட, போதிய கவனிப்பும், கண்காணிப்பும் இல்லை என்பதுதான் உண்மை.
மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டம், 1940-இன்படி, மருந்தாளுநரின் (பார்மசிஸ்ட்) முன்னிலையில், உரிமம் பெற்ற பதிவு செய்த மருத்துவரின் பரிந்துரையை உறுதி செய்த பிறகுதான் மருந்துக் கடைகளில் மருந்து விற்பனை செய்யப்பட வேண்டும். நூற்றுக்கு 90 சதவீத மருந்தகங்களில் இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சொல்லப் போனால், உரிமம் பெற்ற மருந்தாளுநர் பெயருக்குக் கையொப்பமிட வருவாரே தவிர, அவர் முழுநேர ஊழியராகப் பணியாற்றும் மருந்தகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
பழைய பரிந்துரைகளை வைத்துக் கொண்டு மருந்து வாங்குவது, இன்னொருவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைச் சீட்டை பயன்படுத்தி மருந்து வாங்குவது போன்றவை பரவலாக வழக்கத்தில் உள்ளன. இவற்றில் பட்டியல் பத்தில் உள்ள, மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய மருந்துகளும் அடக்கம்.
இதுகுறித்து சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால், பிரச்னை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று குறிப்பிட முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்னால் இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மருந்து மற்றும் போதைப் பொருள்கள் எந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் எந்தவிதப் புள்ளிவிவரமும் தரப்படவில்லை. தற்போது புள்ளிவிவரங்களுடன் விரிவான ஓர் ஆய்வு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மருந்தகங்களுக்காவது கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இணைய மருந்தகங்களுக்கு அப்படி எதுவுமே இல்லை. இன்றைய நிலையில் பதினைந்துக்கும் குறைவான இணைய மருந்தகங்கள்தான் இந்தியாவில் இயங்குகின்றன. ஆனால் விரைவிலேயே இந்த வணிகம் கணிசமான வளர்ச்சியை அடைய இருக்கிறது. இப்போது 18 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.1.23 லட்சம் கோடி) இருக்கும் இணைய மருந்தக வணிகம், 2020-இல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இணைய மருந்தகங்களின் கூட்டமைப்பு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், வெறும் முதல் அடி மட்டுமே. அரசு கடுமையான விதிகளை விதித்துவிடாமல் தங்களைக் காத்துக் கொள்ள தாங்களே விதித்துக் கொண்டிருக்கும் சுய கட்டுப்பாட்டு முயற்சி இது, அவ்வளவே.
இணையத்தின் மூலமான மருந்து விற்பனையின் அளவு எவ்வளவு, இணைய மருந்தாளர்களின் தகுதிச் சான்றுகள், பரிந்துரைகளின் உண்மைத் தன்மை, இணையத்தில் மருந்து வாங்கும் நோயாளிகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்து கண்காணிக்க ஏதாவது ஒரு வழிமுறையை உருவாக்கியே தீர வேண்டும். அதே நேரத்தில் நோயாளி குறித்த விவரங்களின் ரகசியமும் காப்பாற்றப்பட வேண்டும்.
இணைய மருந்தகங்கள், நாடு தழுவிய அளவில் மருந்துகள் கிடைப்பதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இணைய மருந்தகங்களின் மூலம் தடை செய்யப்பட்ட மருந்துகளும், போதை மாத்திரைகளும் தங்கு தடையில்லாமல் விற்கப்பட்டு விடவும் வாய்ப்புண்டு. அதனால், இணைய மருந்தக விற்பனையைக் கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் அரசின் உடனடிக் கடமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.