தலையங்கம்

காஷ்மீர் கவலை!

காஷ்மீரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

ஆசிரியர்

காஷ்மீரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டுமானால் பேச்சுவார்த்தைக்கு வன்முறையாளர்கள் தயாராக வேண்டும். ஆனால், வன்முறைக்கு முடிவு கட்டவோ, போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவோ காஷ்மீரத்திலுள்ள பிரிவினைவாதத் தலைவர்கள் தயாராக இல்லை. பாகிஸ்தானும் அதை அனுமதிப்பதாக இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் 27 உறுப்பினர்கள் கொண்ட குழு ஸ்ரீநகர் சென்று பிரிவினைவாத தலைவர்களை

பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அந்தக் குழுவினரை சந்திக்க அவர்கள் மறுத்து விட்டிருக்கிறார்கள். சந்திக்க மறுத்ததற்கு அவர்கள் கூறிய விசித்திரமான காரணம், இந்த அனைத்துக் கட்சிக் குழு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வந்திருக்கிறது என்பதுதான். மத்திய அமைச்சரின் தலைமையில் வராமல், வேறு யார் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு வர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

மத்திய அமைச்சரின் தலைமையில் பேச்சுவார்த்தைக்கான குழு வரக்கூடாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால், முன்னாள் காஷ்மீர் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாதின்

தலைமையில்கூட இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கலாம். அவர்களது எண்ணம் இந்தக் குழுவை சந்திப்பதோ, சமாதானம் பேசுவதோ அல்ல என்பதுதான் உண்மை.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க மறுத்ததுடன், வெறும் புகைப்படம் எடுக்கும் இந்த முயற்சிக்குத் தான்

துணைபோக விரும்பவில்லை என்று காரணம் கூறியிருக்கிறார். அப்படிச் சொன்ன அதே வாயால், "பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்' என்றும் கூறியிருக்கிறார். ஏன் இந்த முரண் என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

கடந்த இரண்டு மாதங்களாகக் காஷ்மீர் பள்ளத்தாக்குத் தெருக்களில் சிந்தும் ரத்தத்தைப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் மக்கள், சமாதானத்துக்கான மனநிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கடந்த ஜூலை மாதம் 8-ஆம் தேதி நடந்த பயங்கரவாதி பர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 8,000 பொதுமக்களும், 2,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலை இப்படியே தொடர்வதை யார்தான் விரும்புவார்கள்?

காஷ்மீர் பொருளாதாரம் இந்த இரண்டுமாதப் போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடைகள் திறக்கப்படுவதே கிடையாது. அப்படியே திறந்தாலும் போதிய பொருள்கள் கிடையாது. ஜூலை முதல் வாரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக நின்று விட்டிருப்பதால், யாருக்கும் வருவாய் இல்லை. சரக்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைமை திரும்பினால் போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

1990-க்குப் பிறகு இப்படியொரு பதற்றமான சூழல் காஷ்மீரத்தில் ஏற்பட்டதில்லை. இதற்கு முந்தைய சில கலவரங்களுக்குப் பின்னால் இஸ்லாமிய ஜிஹாதி இயக்கங்களுக்குத் தொடர்பு இருந்தது. இந்த

முறை நிலைமை அதுவல்ல. கடந்த கால் நூற்றாண்டு காலமாக துப்பாக்கிச் சப்தத்தைக் கேட்டு வளர்ந்த, படித்த புதிய இளைய தலைமுறையினர், சமூக ஊடகங்களின் உதவியோடு போராட்டத்தில்

களமிறங்கி இருக்கிறார்கள். முறையான படிப்பு இல்லாத, படித்தாலும் வேலை இல்லாத இந்த இளைஞர்களின் கோபத்திற்குப் பின்னால் மத உணர்வோ, காஷ்மீர் சுதந்திரம் என்கிற தாகமோ இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இளைஞர்கள், ஹுரியத் தலைவர்களால் மட்டுமல்லாமல், பிரிவினைவாத, மதவாத சக்திகளாலும் தூண்டிவிடப் படுகிறார்கள் என்றாலும், இந்த இளைஞர்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் இல்லை. பேச்சுவார்த்தையில் ஹுரியத் தலைவர்கள் சமாதானத்துக்கு உடன்பட்டாலும், இந்த இளைஞர்கள் அதை ஏற்பார்களா என்று அந்தத் தலைவர்களுக்கே தெரியாது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க மறுக்கிறார்கள் என்றவுடன், அந்தக் குழுவில் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்

களான சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) ஆகிய நால்வரும் தனிப்பட்ட முறையில் பிரிவினைவாதத் தலைவர்களை சந்திக்க முயன்றனர். சையத் அலி ஷா கிலானி வீட்டுக்குச் சென்ற இந்த நான்கு உறுப்பினர்களையும் தெருவிலேயே நிற்க வைத்துத் திருப்பிஅனுப்பி விட்டனர்.

"காஷ்மீரைப் பற்றி சிந்திக்கும் மத்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்' என்று முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறியிருப்பது

உண்மையிலும் உண்மை. ஆனால், அவர் முதல்வராக இருக்கும்போது நிலைமையை சரியாகக் கையாண்டு, உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தி இருந்தால் இந்த நிலைமையே ஏற்பட்டிருக்காது என்பதை அவர் உணர வேண்டும்.பிரிவினைவாதிகளும் போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில், சகஜ நிலைமை பாதிக்கப்பட்டிருப்பதால், அன்றாட உணவு, மருந்துக்குக்கூட சாமானிய காஷ்மீர் மக்கள் அல்லல்படுகிறார்கள். அவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

கேரள மக்களுக்கு பூா்விக அட்டை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!

வடக்கு தில்லியில் ஓடும் லாரியிலிருந்து 200 கிலோ ஏலக்காய் திருட்டு: 3 போ் கைது!

SCROLL FOR NEXT