தலையங்கம்

முத்தலாக்குக்கு முற்றுப்புள்ளி?

ஆசிரியர்

மக்களவையில் நீண்ட விவாதம் எதுவும் இல்லாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் (மண உரிமைப் பாதுகாப்பு) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. "முத்தலாக்' என்று பரவலாக அறியப்படும் "தலாக்-இ-பிதத்' என்பது உடனடி மண முறிவுக்கான வழிமுறை. முஸ்லிம் பெண்கள் (மண முறிவு உரிமை பாதுகாப்பு) சட்டம் 1986-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்த முத்தலாக் வழிமுறை கிரிமினல் குற்றமாக மாற்றப்படுகிறது என்பதுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
புதிய மசோதாவின்படி முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ய முஸ்லிம் ஆண்கள் முற்பட்டால் அவர்கள் மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாவார்கள். அதுமட்டுமல்ல, நீதிமன்றம் விதிக்கும் அபராதத்துக்கும் உள்ளாவார்கள். இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஒருவர்கூட முறையான வாக்கெடுப்பு வேண்டும் என்று வற்புறுத்தவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
திருமணம் என்பது ஒரு சிவில் ஒப்பந்தம் என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக அறிவிப்பதற்கு ஒரு காரணம் கூறினார். வரதட்சிணை தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமணச் சட்டம் உள்ளிட்ட தவறான பழக்கங்களை கிரிமினல் குற்றங்களாகக் கருதி அரசு தலையிடும்போது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் திருமண முறையில் காணப்படும் முத்தலாக் வழக்கத்தையும் கிரிமினல் குற்றமாக அறிவிப்பதில் தவறில்லை என்பது அவரது வாதம்.
தலாக் என்கிற அரபிச் சொல்லுக்கு "முடிச்சை அவிழ்த்தல்' என்று பொருள். முஸ்லிம்களுக்கு மூன்று விதமான மணமுறிவு வழிமுறைகள் இருக்கின்றன. அஸன், ஹசன் என்பவை இரண்டு வழிமுறைகள். அந்த வழிமுறைகளில் கோரப்படும் மண முறிவைத் திரும்ப பெற முடியும். ஆனால், மூன்றாவது வழிமுறையான "பிதத்' மூலம் செய்யப்படும் மண முறிவை, கணவனும் மனைவியும் தங்கள் தவறை உணர்ந்து மாற்ற நினைத்தாலும் மாற்றவே முடியாது. "தலாக்-இ-பிதத்'துக்கு நபிகள் நாயகத்தின் அனுமதியோ, திருக்குர்ஆனின் அங்கீகாரமோ கிடையாது என்பதுதான் உண்மை நிலைமை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 22 நாடுகளில் இந்த முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று அறிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தான், மொராக்கோ, ஈரான், வங்கதேசம், சூடான், ஜோர்டான், சிரியா, ஏமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த முறைக்கு எப்போதோ விடை கொடுத்துவிட்டன.
அகில இந்திய முஸ்லிம் தனியுரிமை சட்ட வாரியத்தின்படி, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களில் 90% பேர் சன்னி முஸ்லிம் பிரிவினர். இவர்கள் கடந்த 1400 ஆண்டுகளாக முத்தலாக் முறையைப் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு மத ரீதியான அங்கீகாரம் இல்லாவிட்டாலும், நம்பிக்கையின் அடிப்படையிலும், வழக்கத்தின் அடிப்படையிலும், முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21 பிரிவுகளை மீறுவதில்லை என்பதாலும், இந்த முறைக்கு தடை விதிப்பது தேவையில்லாத அரசின் தலையீடு என்று அது 
கருதுகிறது. 
திருமணம், மணமுறிவு, சொத்துரிமை ஆகியவை குடிமையியல் சட்டத்தின்கீழ் வருபவை. அவை தொடர்பான பிரச்னைகளில் கிரிமினல் குற்றம் சேர்க்கப்பட வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. பெண்களின் உரிமையை பாதுகாப்பது என்பது வேறு, அந்த பெண்களிடமிருந்து தவறான காரணத்துக்காகவோ, தவறான எண்ணத்துடனோ செய்யப்பட்டாலும் கூட, மணமுறிவு கோரும் ஒருவருக்கு சிறை தண்டனை தேவைதானா என்பது மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சட்டத் திருத்தம் எழுப்புகின்ற கேள்வி. 
சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கிரிமினல் குற்றங்களாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. குடிமகனின் தனியுரிமையிலும், தன்மறைப்பு நிலையிலும் அரசின் தலையீடு அதிகரிப்பது என்பது சுதந்திர சிந்தனைக்கும் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் எதிரானதாகத்தான் இருக்கும். இஸ்லாமிய திருமணம் என்பது ஒரு குடிமையியல் சட்டம், அந்த ஒப்பந்தத்தின் முடிவு குடிமையியல் அடிப்படையில்தான் இருக்கவேண்டுமே தவிர, குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இருப்பது என்பது பிரச்னைக்குரிதாகவும் ஆபத்தானதாகவும் மாறவிடக் கூடும்.
முஸ்லிம் பெண்களை முத்தலாக் என்கிற உடனடி மண முறிவு முறையிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டம், முஸ்லிம் ஆண்களை பழிவாங்க பயன்படுத்துவதாக அமைந்துவிடக்கூடும் என்பதுதான் அந்த அச்சத்திற்குக் காரணம். அரசு கொண்டுவர நினைக்கும் சட்டத்திருத்தத்தின்படி, முத்தலாக் முறையில் மண முறிவு கோரும் முஸ்லிம் கணவருக்கு எதிராக மனைவி மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்க முடியும். அந்த புகாரின் அடிப்படையில் பிடியாணை இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர் கைது செய்யப்படலாம் என்பது மட்டுமல்ல, குற்றம், கிரிமினல் வகையைச் சேர்ந்தது என்பதால் பிணையில் வரவும் முடியாது. அதனால்தான் இந்த சட்டப் பிரிவும், பசு பாதுகாப்புச் சட்டத்தைப் போலத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 
மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மசோதாவில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன. முத்தலாக் முறையில் மண முறிவு கோருபவருக்கு சிறை தண்டனைக்கு வழிவகுக்கிறது மசோதா. அதேநேரத்தில், அவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. சிறையில் இருக்கும் ஒருவர் எப்படி ஜீவனாம்சம் வழங்க முடியும் என்கிற கேள்விக்கு மசோதாவில் பதில் இல்லை. முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்பதால், அதன் மூலம் மண முறிவு கோரப்பட்டாலும் அந்தப் பெண் மனைவியாகவே தொடர்கிறார். மண முறிவு ஏற்படாத நிலையில், அந்த முஸ்லிம் பெண்ணுக்கு மனைவிக்கான எல்லா சட்ட ரீதியான உரிமைகளும் தொடரும் என்பதால் அவர் எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் பெற முடியும் என்பது குறித்து மசோதா தெளிவுபடுத்தவில்லை.
1400 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடுமையான சட்டப் பிரிவுகள் தேவை என்கிற வாதத்தை மறுத்துவிட முடியாது. உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் போன்றவை கடுமையான சட்டங்களின் மூலம் மட்டுமே அகற்றப்பட்டது என்றும் கூறிவிட முடியாது. ராஜாராம் மோகன்ராயிலிருந்து தொடங்கி பல சமூக சீர்திருத்தவாதிகளின் முனைப்பும், தொடர் வலியுறுத்தலும், பரப்புரையும்தான் பல மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கின்றன.
கடுமையான சட்டங்கள் இருந்துமேகூட வரதட்சிணை கொடுமையும், தீண்டாமையும் இன்னும் அகற்றப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதேபோன்றதுதான் இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் அகற்றப்பட வேண்டிய முத்தலாக் என்கிற மண முறிவும். சட்டத்தைவிட முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்கள், மத குருமார்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை கடுமைப்படுத்தி முற்றுப்புள்ளி வைப்பதுதான் அதற்குத் தீர்வாக அமையும்.
தினமணியில் பேராசிரியர் ஹாஜா கனி எழுதியிருந்த கட்டுரை, முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பொருத்தமான உதாரணத்தை முன் வைத்திருந்தது. "கோழி முட்டையை உள்ளேயிருந்து உடைத்துக்கொண்டு குஞ்சு வெளியே வருவதற்கும், வெளியேயிருந்து மனிதர்கள் உடைப்பதற்கும் இடையேயான வேறுபாடுதான், சட்டத்தின் மூலம் இதற்கு விடை காண முயற்சிப்பது.'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT