தலையங்கம்

எதிர்பாராதது அல்ல!

ஆசிரியர்

ஜம்மு - காஷ்மீரில் பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்த கூட்டணி அரசு கவிழ்ந்திருக்கிறது. முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். ஏனைய எதிர்க்கட்சிகளான ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதைத் தொடர்ந்து விரைவிலேயே ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படலாம் என்பதுதான் இப்போதைய நிலைமை. அப்படி அறிவிக்கப்பட்டால் கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஜம்மு காஷ்மீரம் ஆளுநர் ஆட்சியின் கீழ் செயல்படக் கூடும்.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வராக கடந்த ஏப்ரல் 2016-இல் மெஹபூபா முஃப்தி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டபோதே, பாஜகவுடனான மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டணி நீண்டநாள் தொடராது என்று ஆருடம் கூறியவர்கள்தான் அதிகம். மெஹபூபா முஃப்திக்கு ஆதரவு அளிப்பதில் பாஜகவும் மிகுந்த தயக்கம் காட்டியது. முதல்வராக இருந்த மெஹபூபாவின் தந்தை முஃப்தி முகமது சயீத் இறந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஆட்சி அமையுமா அமையாதா என்கிற முடிவு தெரியாத நிலைதான் தொடர்ந்தது. கடைசியில் ஜம்மு - காஷ்மீரின் முதல் பெண் பிரதமராக (அந்த மாநிலத்தில் முதல்வர்கள் பிரதமர் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்) மெஹபூபா முஃப்தி பாஜகவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார். இப்போது இரண்டாண்டுகளுக்குப் பிறகு 59 வயது நிறைந்த மெஹபூபா முஃப்தி பதவி விலகியிருப்பது இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கசப்பான கூட்டணி உறவின் உச்சக்கட்டத் திருப்பம்.
கடந்த சில மாதங்களாகவே மக்கள் ஜனநாயகக் கட்சியில் பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாகவே இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் மெஹபூபா முஃப்தி கூட்டணியை முறித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக நேற்று பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்று கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு உடனடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று பதவி விலகி விட்டிருக்கிறார் மெஹபூபா.
87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மைக்கு 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 இடங்களுடன் தனிப்பெருங் கட்சியாக வெற்றி பெற்றிருந்தும்கூட மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அந்த நிலையில்தான் ஜம்மு பகுதியில் 25 இடங்களை வென்று இரண்டாவது பெரிய கட்சியாகத் திகழும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்டது மக்கள் ஜனநாயகக் கட்சி. கொள்கை ரீதியாக இருவேறு துருவங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தது முதலே பல்வேறு பிரச்னைகளில் கருத்து மோதல்கள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. 
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவை அகற்றுவது குறித்து பாஜக உறுப்பினர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தது கூட்டணியில் விரிசலை அதிகப்படுத்தியது. எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து அரசியல் சாசனப் பிரிவு 370-க்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மெஹபூபா முஃப்தி முழங்கியது பாஜக தலைமைக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. இந்த ஆண்டு ஜனவரியில் கதுவாவில் எட்டு வயது நாடோடிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கொஞ்சநஞ்சக் கருத்து ஒற்றுமையும் கலைந்துவிட்டது. 
ராணுவப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகக் கல்வீச்சில் ஈடுபட்ட 10,000-க்கும் அதிகமான இளைஞர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றது மட்டுமல்ல, அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்க மெஹபூபா முஃப்தி எடுத்த முடிவு மத்திய அரசையும் பாஜக தலைமையையும் ஆத்திரப்படுத்தியதில் வியப்பில்லை. இதெல்லாம் போதாதென்று பாகிஸ்தானுடனும் தீவிரவாதிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சியின் முதல்வரான மெஹபூபா முஃப்தி கூறிய கருத்துகளை பாஜகவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 
கடந்த சில மாதங்களாகவே ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜகவினர் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வந்தார்கள். அதேபோல மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர்களும் பாஜகவுடனான கூட்டணி தொடரக் கூடாது என்று முதல்வரை வலியுறுத்தி வந்தார்கள். இந்தக் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் முற்றிலுமாகக் குறைந்துவிடும் என்கிற அவர்களது கருத்து உண்மையும்கூட.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஜம்மு - காஷ்மீரத்தில் அமைத்த சந்தர்ப்பவாதக் கூட்டணி முடிவுக்கு வந்திருப்பதில் 
எந்தவித வியப்பும் இல்லை. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும் என்பதும் தெரிந்ததுதான். அதனால், காஷ்மீரத்தில் அமைதி ஏற்பட்டுவிடுமா என்று கேட்டால் சந்தேகம்தான். 
அரசியல் ரீதியாக பாஜகவுக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இந்தக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததில் லாபம் உண்டு.
 காஷ்மீர மக்களுக்கு..?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT