தலையங்கம்

புருவம் உயர்த்தும் பதவி விலகல்!

ஆசிரியர்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் பதவி விலகியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய அரசில் பங்களிக்க முன்வந்து பதவி விலகியிருக்கும் சர்வதேச அளவிலான மூன்றாவது பொருளாதார நிபுணர் இவர். 
இதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் தனது பதவிக் காலம் முடிந்ததும் நீட்டிப்பு கோராமல் அமெரிக்காவில் தனது பல்கலைக்கழகப் பணியைத் தொடரத் திரும்பிச் சென்றுவிட்டார். அதேபோல நீதி ஆயோக்கின் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா தனிப்பட்டக் காரணங்களுக்காக விலகுவதாகக் கூறிவிட்டு அகன்றுவிட்டார். இப்போது அந்த வரிசையில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தவந்த அரவிந்த் சுப்பிரமணியமும் தனது குடும்பச் சூழல் காரணமாக பதவி விலகி அமெரிக்காவுக்கு திரும்பச் செல்வதாகக் கூறிவிட்டிருக்கிறார்.
அதுவரை அமெரிக்காவில் பணியாற்றி வந்த அரவிந்த் சுப்பிரமணியம் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தேர்தல் வரப்போகும் நேரத்தில் இவர் பதவி விலகியிருப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. 
கடந்த நான்கு ஆண்டு பதவிக் காலத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசராக அரவிந்த் சுப்பிரமணியம் பல முக்கியமான பிரச்னைகளில் மிகவும் சுதந்திரமாகத் தன்னுடைய கருத்தை முன்வைத்தவர். தனக்குத் தரப்பட்ட பொறுப்புக்கு ஏற்றார்போல, அரசு எடுக்க முற்பட்ட சில பொருளாதார முடிவுகளில் தனக்கு இருக்கும் கருத்து மாறுபாட்டைத் துணிந்து முன் வைத்தவர். 
கடந்த ஆண்டு அரசின் நிதிக்கொள்கைக் குழு முன்வைத்த விலைவாசி குறித்த மதிப்பீட்டை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மிகைப்படுத்தப்பட்ட விலைவாசி ஏற்றம் தரப்படுகிறது என்றும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்த கருத்துகள் நிதியமைச்சகத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேபோல கண்மூடித்தனமாக அரசு நிதிப்பற்றாக்குறை இலக்கை நிர்ணயிப்பதை அவர் துணிந்து விமர்சிக்க முற்பட்டார். அரசின் பட்ஜெட் நிர்வாகச் சட்டம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அவருடைய கருத்து மட்டும்தான் மற்றவர்கள் கருத்துக்கு மாறுபட்டதாக அமைந்திருந்தது. 
பற்றாக்குறை குறித்த அரவிந்த் சுப்பிரமணியத்தின் பார்வை வித்தியாசமானது. அடிப்படை பற்றாக்குறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர் கருத்து. அது கடந்த நான்கு நிதிநிலை அறிக்கைகளில் பிரதிபலித்தது. வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, அதிகரித்த அரசுச் செலவீனம் வேண்டும் என்பது அரவிந்த் சுப்பிரமணியத்தின் எண்ணம். அதேபோல, தனியார் முதலீட்டை வங்கிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கையாளும் இரட்டைக் கணக்கு முறை (ட்வின் பேலன்ஸ் ஷீட்) செயலிழக்கச் செய்து விடுகிறது என்பதும் அவருடைய கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அதேபோல, வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையில் அரவிந்த் சுப்பிரமணியத்தின் கணிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லி முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அரசின் நிதிக்கொள்கையைப் பொருத்தவரை ஜிஎஸ்டி குழுவின் வரி விதிப்பு அமைப்பில் அரவிந்த் சுப்பிரமணியத்தின் தாக்கம் நிறையவே இருக்கிறது. 18 சதவீதம் பொது வரி என்கிற அளவில் இலக்கு நிர்ணயித்து பயணிக்க வேண்டும் என்பது அரவிந்த் சுப்பிரமணியத்தின் ஜிஎஸ்டி கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அதேபோல, ஜன்தன் வங்கிக் கணக்குகளை உருவாக்கி அதனுடன் ஆதாரையும் செல்லிடப்பேசி எண்ணையும் இணைக்கும் திட்டமும் அரவிந்த் சுப்பிரமணியத்தின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகப் பெரிய அளவில் மானியக் கசிவு தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அரவிந்த் சுப்பிரமணியம் பரிந்துரைத்த பல நிதி நிர்வாக, பொருளாதார ஆலோசனைகள் அவருடைய பங்களிப்பாக வருங்காலத்திலும் போற்றப்படும்.
உயர் மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவு இந்திய பொருளாதார வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது என்று துணிந்து 2016-17-க்கான பொருளாதார அறிக்கையில் ஏற்றுக்கொண்டவர் அரவிந்த் சுப்பிரமணியம். செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஆட்சியாளர்கள் வாதிட்டபோது, அந்த விவாதத்தில் இருந்து அகன்று நின்றுவிட்டார் அவர் என்பதும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்பதும் ஒரு பொருளாதார நிபுணராக அரவிந்த் சுப்பிரமணியத்தின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு. 
அதேபோல, கடந்த நான்கு ஆண்டுகள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தபோது அவர் முடுக்கிவிட்ட ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. அதன் மூலம் ஆண்டுதோறும் நிதியமைச்சகம் வெளியிடும் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவரால் தனி முத்திரை பதிக்க முடிந்தது. 
ரகுராம் ராஜன், அரவிந்த் பனகாரியா, அரவிந்த் சுப்பிரமணியம் போன்ற சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் போற்றப்படும் பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காவைத் தாயகமாகக் கொள்வது ஏன் என்கிற கேள்விக்கு, இவர்களால் இந்திய அரசின் முக்கியப் பதவிகளில் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான காரணங்கள் விடையளிக்கின்றன. பொருளாதார நிபுணர்கள், இந்திய அரசியல்வாதிகளுடன் இணைந்து போக முடியாதது காரணமாக இருக்கக் கூடும். 
ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணரை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போயிவிட்டது என்பதை வருங்காலம் உணர்த்தும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT