முகப்பு
தலையங்கம்

நீதிதேவன் மயங்கவில்லை!|பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்தது குறித்த தலையங்கம்

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:35 PM
பகிர்:


தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வக்கார் அகமது சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்ற அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜனநாயகம் அடிக்கடி தடம்புரளும் பாகிஸ்தானில், அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிரான 
ஒரு தீர்ப்பை வழங்கி தனது சுதந்திரத்தை  நீதித் துறை நிலைநாட்டியிருப்பது வரவேற்புக்குரியது. 

பாகிஸ்தானின் 72 ஆண்டுக்கால வரலாற்றில் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுதான் முதல் முறை. பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது பிரிவின்படி, அரசியல் சாசனத்தை முடக்கினாலோ அல்லது முடக்க முயற்சித்தாலோ அல்லது முடக்குவதற்கான சதித் திட்டம் தீட்டினாலோ அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியும். 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்ததுதான் இந்தத் தண்டனைக்குக் காரணம். 

1999-இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீஃப் ஆட்சியை, ராணுவப் புரட்சியின் மூலம் அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்றினார் அன்றைய ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரஃப். 2006-இல் அவருக்கு எதிராக எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அவசர நிலையைப் பிரகடனம் செய்து அரசியல் சாசனத்தை முடக்கிய அன்றைய அதிபர் முஷாரஃப், தன்னுடைய அரசியல் எதிரிகள் அனைவரையும் வீட்டுச் சிறையில் அடைத்தார். பலர் காணாமல் போனார்கள்.

அன்றைய பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இப்திகார் முகமது செளத்ரி, அடக்குமுறையால் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியபோது பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவத்துக்கும், முஷாரஃபுக்கும் மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இப்திகார் முகமது செளத்ரியின் பதவி நீக்கத்திலிருந்து பர்வேஸ் முஷாரஃபின் அரசியல் வீழ்ச்சி தொடங்கியது. பாகிஸ்தானின் அரசியல் சாசனம் குப்பைத் தொட்டியில் எறியப்பட வேண்டிய காகிதம் என்று விமர்சித்த பர்வேஸ் முஷாரஃப், அதே அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இப்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார். 

சிறப்பு நீதிமன்றத்தால் தேசத் துரோக குற்றத்துக்காக மரண தண்டனை  விதிக்கப்பட்டாலும்கூட, பர்வேஸ் முஷாரஃபின் ஆட்சிக் காலத்தில் அந்த நாட்டின் பொருளாதாரம் அமெரிக்காவின் உதவியுடன் வலுவடைந்தது என்பதை மறுக்க முடியாது. மிகக் குறைந்த வட்டி விகிதம், மனை வணிகத் துறையையும், பணப் புழக்கத்தையும் அதிகரித்து அவரது ஆட்சிக்கு வலு சேர்த்தது. ராணுவத்தின் அடக்குமுறையும், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைத்ததும்தான் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மீறி பர்வேஸ் முஷாரஃப் ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரள வைத்தது. 2008 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 2013-இல் பர்வேஸ் முஷாரஃப் மீது தொடுத்த தேசத் துரோக வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானைப் பொருத்தவரை நீதித் துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ராணுவம் இவை மூன்றுக்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போட்டியில் ராணுவத்தின் கைதான் ஓங்கியிருப்பது வழக்கம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இருந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ராணுவப் புரட்சியின் மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு, ராணுவத் தளபதிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அத்தகைய சூழலில் ராணுவமும், அரசும் எதிர்த்தும்கூட நீதித் துறை துணிந்து தீர்ப்புகளை வழங்குவது ஆச்சரியமான செயல்பாடு. 

கடந்த மாதம் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவுக்கு பிரதமர் இம்ரான் கான் அரசு வழங்கிய மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பை, ஆறு மாதங்களாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் குறைத்தது அரசு - ராணுவக் கூட்டணிக்கு நேரடியான சவாலாக அமைந்தது. இப்போது முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது.

பர்வேஸ் முஷாரஃப் மீது நீதிமன்றத்தில் 2014 மார்ச் மாதம் விசாரணை தொடங்கியபோது, வழக்கை முறியடிக்க ராணுவத் தலைமை முயற்சித்தது. அது இயலாமல் போனபோது, பாகிஸ்தானிலிருந்து பர்வேஸ் முஷாரஃப் வெளியேற முன்னாள் தலைமைத் தளபதி ரஷீல் ஷெரீஃப் உதவி செய்தார். 2016 மார்ச் 18-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து வெளியேறி துபையில் அடைக்கலம் புகுந்த முஷாரஃப், அங்கே மருத்துவ சிகிச்சை பெறுகிறார்.

மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், அதிபரின் பொது மன்னிப்பு கோரவும் பர்வேஸ் முஷாரஃபுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. 

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பாகிஸ்தான் நீதித் துறை அமைப்பு ரீதியாக வலுப் பெற்றிருக்கிறது. ஜனநாயக நடைமுறைகளில் ராணுவத்தின் தேவையில்லாத தலையீடுகளுக்கு எதிராக இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைகிறது. பாகிஸ்தானின் முத்தரப்பு அதிகார அமைப்பில் சமநிலை ஏற்படுத்தும் வாய்ப்பை இந்தத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மேலதிகாரத்தையும், ராணுவம் தனது செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. 

ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த வாய்ப்பை பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்திக் கொண்டால், அவர் புத்திசாலி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.