தலையங்கம்

பெருமிதத்துக்குரிய தருணம்!

ஆசிரியர்

வெற்றிகரமான "ஏசாட்' ஏவுகணை சோதனை வெற்றி, உலக வல்லரசு நாடுகளின் குழுவில் இடம் பெறும் வல்லமையை இந்தியாவுக்குத் தந்திருக்கிறது. விண்வெளியில் வலம்வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது "ஏசாட்' ஏவுகணை. அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளியில் வலம்வரும் செயற்கைக்கோள்களை அழிக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை உருவாக்கி வெற்றிகரமாக சோதனையும் நடத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைகிறது என்பது பெருமிதத்துக்குரிய தருணம்.

"ஏசாட்' ஏவுகணை சோதனையை கடந்த 27-ஆம் தேதி இந்தியா வெற்றிகரமாக நடத்தி விண்வெளியில் 300 கி.மீ. உயரத்தில் சுற்றி வலம்கொண்டிருந்த செயற்கைக்கோளைத் தாக்கி அழித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும்கூட, அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் மிகமிக தாமதமாகத்தான் இந்த முயற்சியில் ஈடுபடவும் வெற்றியடையவும் முடிந்திருக்கிறது என்பதையும் மறந்துவிடலாகாது. 

வாஷிங்டனும் மாஸ்கோவும் 1960-களிலேயே தங்களது முதல் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையை நடத்தி வெற்றி அடைந்துவிட்டன. 1983-இல் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது அவர் அறிவித்த "நட்சத்திர யுத்தங்கள்' திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணைகள் அடுத்தகட்ட மேம்பாட்டை எட்டின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2007-இல் சீனா தனது முதல் "ஏசாட்' முயற்சியில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த மூன்று நாடுகளுமே தங்களது விண்வெளி ஆயுத மேம்பாட்டை பல மடங்கு உயர்த்திக் கொண்டுவிட்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த நிலையை எட்டிப் பிடிக்க நமக்கு வெகுகாலம் ஆகும்.

"ஏசாட்' ஏவுகணை முயற்சி தேவைதானா என்று கேள்வி எழுப்புவது சரியல்ல. சர்வதேச அளவில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 1967 ஜனவரி 1-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதிகாரப்பூர்வ அணு ஆயுத நாடுகளாக அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வல்லரசுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. 1974-இல் இந்தியா தனது முதல் பொக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்தியபோது, அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத காரணத்தால் நாம் சர்வதேசக் கண்டனத்துக்கு ஆளானோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பொக்ரான் சோதனை நடத்தப்பட்டிருந்தால், இந்தியா சர்வதேச அணு வல்லரசாக 1967 ஒப்பந்தத்தின்போதே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இப்போது "ஏசாட்' ஏவுகணை சோதனையை நடத்தி வெற்றியடைந்திருப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் வல்லரசு நாடுகள் நமது விண்வெளி ஆராய்ச்சிக்கும் முயற்சிகளுக்கும் தடையே ஏற்படுத்திவிட முடியாது. 

இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை முயற்சிக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனமோ, எதிர்ப்போ ஏற்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். 1998-இல் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, சர்வதேச அளவில் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது, கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவின் "ஏசாட்' சோதனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். 

பாகிஸ்தான் மட்டும்தான் இதை விமர்சித்திருக்கிறது. சீனாவே கூட மிகவும் கவனமாகத் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியாவின் "ஏசாட்' சோதனை முயற்சியால் விண்வெளியில் நிலவும் சமாதானமும், சமநிலையும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று எதிர்பார்ப்பதாக சீனா கூறியிருப்பதிலிருந்து, வன்மையான கண்டனத்தை முன்வைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அமெரிக்காவேகூட இந்தியாவின் முயற்சிக்கு ஓரளவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. விண்வெளியில் செயற்கைக்கோள் அழிப்பால் ஏற்படும் உதிரிபாகச் சிதறல் பாதிப்புகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தாலும்கூட, இந்தியாவைக் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச அளவில் இந்தியாவின் "ஏசாட்' சோதனை குறித்து பெரிய விமர்சனங்கள் எழாமல் இருப்பதற்கு நமது சோதனை முயற்சியின் உயரம் முக்கியமான காரணம். 300 கி.மீ. உயரத்திலுள்ள செயற்கைக்கோள் மீதான தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் உதிரிபாகச் சிதறல்கள் ஒருசில மாதங்களுக்கு மட்டுமே விண்வெளியில் நிலைபெறும். சொல்லப்போனால் சில வாரங்களிலேயேகூட மக்கி சிறு சிறு துகள்களாக விண்வெளியில் கலந்துவிடலாம். 2007-இல் 800 கி.மீ. உயரத்தில் சீனா மேற்கொண்ட "ஏசாட்' சோதனையால் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோளின் உதிரிபாகங்கள் 10 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையாக மக்கிவிடவில்லை என்று தெரிகிறது. இருந்தும்கூட இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருப்பதற்கு, சர்வதேசச் சட்டங்களையும் அமைப்புகளையும் மதிக்கும் பொறுப்புள்ள தேசமாக இந்தியா கருதப்படுவது மிக முக்கியமான காரணம்.

இந்திய விஞ்ஞானிகளின் செயல்பாடு வியக்க வைக்கிறது. அவர்களை வணங்கத் தோன்றுகிறது. விண்வெளியில் சாதனைகள் நடத்தும் அதே நேரத்தில், இந்தியாவின் முப்படைகளையும் மேம்படுத்துவதிலும் நவீனப்படுத்துவதிலும் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்ற விண்வெளி சாதனைகளையும் ராணுவ வெற்றிகளையும் எந்தவோர் அரசும் தனது தனிப்பட்ட வெற்றியாகப் பறைசாற்றிக் கொள்வது தவறான அணுகுமுறை. ஆட்சியில் இருப்பவர்கள் தேசத்தைக் காக்கக் கடமைப்பட்டவர்கள். அதை மார் தட்டிப் பறைசாற்றுவது சரியல்ல. தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்துவது முறையுமல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT