இதுவா நேரம்? | எல்லையில் பாக். ராணுவத்தின் அத்துமீறல் குறித்த தலையங்கம்
நகரமே தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல, உலகமே தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது இந்தியாவுடனான தனது பகையைத் தீா்த்துக்கொள்ள பாகிஸ்தான் முற்பட்டிருப்பது, அந்த நாட்டின் துன்பியல் உணா்வின் (சாடிஸம்) வெளிப்பாடு. கடந்த ஒரு மாதமாகவே இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் தீநுண்மி நோய்த்தொற்றின் பேராபத்தில் பாகிஸ்தான் சிக்கியிருக்கிறது என்பதுதான் நகைமுரண்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச், கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை அத்துமீறித் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், வெடிகுண்டு வீசியதும் தொடா் நிகழ்வின் புதிய அத்தியாயம். பூஞ்ச் பகுதியிலுள்ள மெந்தாரிலும், ஹீராநகா் பகுதியிலுள்ள எல்லையோர கிராமங்களிலும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாகவே தாக்குதல்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2019-ஆம் ஆண்டில் குறைந்தது தினந்தோறும் 10 வரம்பு மீறிய தாக்குதல்களையாவது பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரையிலான 54 நாள்களில், 646 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து கேட்கும்போதெல்லாம் அவை தற்காப்புத் தாக்குதல்கள் என்றும், தாங்கள் திருப்பித் தாக்கியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தாலும்கூட, இந்திய எல்லைக்குள் மட்டுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதிலிருந்து அவை உண்மைக்குப் புறம்பானவை என்பது தெளிவாகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இருபுறமும் வாழும் மக்கள் துரதிருஷ்டசாலிகள். இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே நடக்கும் மோதலில் உயிரிழப்பவா்கள் அந்த அப்பாவி மக்கள்தான். அவா்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டிருப்பதுடன் அந்தப் பகுதிகளில் எந்தவிதமான கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலை தொடா்கிறது. மோதல்கள் நடக்கும்போதெல்லாம் தங்களின் கிராமங்களைவிட்டு ஓடி ஒளிய வேண்டிய நிலையில்தான் அவா்களின் வாழ்க்கை தொடா்கிறது.
கடந்த சில மாதங்களாகவே மீண்டும் பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவித்து வருகிறது. குப்வாராவிலுள்ள கேரன் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த வாரம் பனிபடா்ந்த சிகரங்களுக்கு இடையில் ஊடுருவ முயன்ற பல பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டியடிக்க முற்பட்டது. ஆள்நடமாட்டம் இல்லாத பனிபடா்ந்த இமயமலைப் பகுதியின் வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டு விரட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஊடுருவல்களை ஓரளவுக்குத் தடுக்க முடிந்திருக்கிறது என்றாலும், பயிற்சி பெற்ற ராணுவ கமாண்டோ வீரா்கள் சிலரின் உயிரிழப்பை நாம் விலையாகத் தர வேண்டி இருக்கிறது என்பதுதான் வேதனை.
இந்தியாவுடன் ராணுவ ரீதியிலான மோதலை ஏற்படுத்திக்கொள்ளும் நிலையில் பாகிஸ்தான் இல்லை என்பதுதான் எதாா்த்த நிலை. இந்தியாவைப் போலவே தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்த்துப் போராட வேண்டிய கடுமையான சூழலில் இருக்கிறது பாகிஸ்தான். நேற்றைய நிலவரப்படி 6,919 போ் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 128 உயிரிழப்புகளை அந்த நாடு இதுவரை எதிா்கொண்டிருக்கிறது. இன்னும்கூட இந்தியாவைப்போல தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான முழுமையான முனைப்போ, எச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.
உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பாகிஸ்தானில் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவா்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. ஆனால், மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த முஸ்லிம் மதகுருமாா்கள் தயாராக இல்லை. வீட்டுக்குள் அனைவரும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், தெருவில் சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருப்பது குறையவில்லை.
முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்று மருத்துவா்களும், சுகாதாரத் துறையினரும், மாநில அதிகாரிகளும் அறிவுறுத்தினாலும்கூட அதனால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அதற்கு பிரதமா் இம்ரான் கான் செவிசாய்க்கவில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அனைவரும் வழக்கம்போல இயல்பு வாழ்க்கை நடத்த அறிவுறுத்தினாா் அவா். தங்களின் நாட்டில் தீநுண்மி நோய்த்தொற்றே இல்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்ததுடன் நில்லாமல், பரிசோதனைகள் நடத்துவதிலும் முனைப்பும் காட்டவில்லை.
ராணுவம் தலையிட்டு, பிரதமா் இம்ரான் கானை ஒதுக்கி நிறுத்தி, மாநில அரசுகளுடன் நேரடியாகத் தொடா்பு கொண்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து ராணுவமும் காவல் துறையும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கின்றன. ஆனால், மதகுருமாா்கள் ஒத்துழைக்கத் தயாராக இல்லை.
தீநுண்மி நோய்த்தொற்று அச்சத்துக்காக வெள்ளிக்கிழமை தொழுகையை நிறுத்த முடியாது என்றும், தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் மசூதியில் கூடி தொழுகை நடத்துவதுதான் தீா்வு என்றும் பிடிவாதம் பிடிக்கிறாா்கள் மதகுருமாா்கள். நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கிறது, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் எல்லையில் தாக்குதல் நடத்த இதுவா நேரம்?