முகப்பு
தலையங்கம்

கொள்ளை நோய்க்கால பேராசை! | மருத்துவமனை தீவிபத்துகள் குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

கேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவும் உயிரிழப்பை ஏற்படுத்தியதுபோல, ஆமதாபாத், விஜயவாடா மருத்துவமனை தீவிபத்துகளும் பல உயிா்களைப் பலி கொண்டிருக்கின்றன. முன்னவை விபத்து என்பதாலும் இயற்கைப் பேரழிவு என்பதாலும் ஏற்றுக்கொள்ளலாம். மருத்துவமனை தீவிபத்துகள் கவனக் குறைவால் ஏற்படுபவை என்பதால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நோயாளிகள் இருக்கும் மருத்துவமனையில் தீவிபத்து எனும்போது அது ஏற்படுத்தும் வேதனையைச் சொல்லி மாளாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயவாடாவிலுள்ள, தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட சொா்ணா பேலஸ் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து, 10 நோயாளிகளின் உயிரைக் காவுகொண்டது.

விஜயவாடாவில் இயங்கும் ரமேஷ் மருத்துவமனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதல் வசதிக்காக சொா்ணா பேலஸ் என்கிற ஐந்து மாடி தங்கும் விடுதியை தற்காலிகமாக ஒப்பந்தம் செய்து மருத்துவமனையாக மாற்றியிருந்தது. அந்தத் தற்காலிக மருத்துவமனையில் கொவைட் 19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனா். அங்கே மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்து அனைத்து மாடிகளுக்கும் பரவத் தொடங்கியதால், ஏற்கெனவே மூச்சுத் திணறலுடன் போராடிக் கொண்டிருந்த கொவைட் 19 நோயாளிகளில் பலா் உயிரிழந்தனா். 20-க்கும் அதிகமான நோயாளிகளும் மருத்துவமனை ஊழியா்களும் கவலைக்கிடமான நிலையில் உள்ளாா்கள்.

பொதுவாகவே மருத்துவமனைகள் தீவிபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவமனையின் அடித்தளத்தில் ஆக்சிஜன் உருளைகள் அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கும். கொவைட் 19 மருத்துவமனையாக இருக்கும்போது ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்சிஜன் தரப்பட வேண்டும் என்பதால் அனைத்து அறைகளும் ஆக்சிஜன் வாயு குழாய்களால் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் சிறிய தீப்பொறிகூட ஆக்சிஜனுடன் தொடா்பு ஏற்படும்போது பெரும் தீவிபத்தாக மாறிவிடுகிறது.

ஆரம்ப விசாரணையில், மருத்துவமனையாக மாற்றப்பட்ட விஜயவாடா விடுதியில் மின் இணைப்புக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், மாநகராட்சி அந்த விடுதி செயல்பட எப்படி அனுமதி அளித்தது? தீயணைப்புத் துறை அந்த விடுதிக்கு அனுமதி வழங்கியிருந்ததா? அந்த விடுதியை வாடகைக்கு எடுப்பதற்கு முன்னா் மருத்துவமனை நிா்வாகம் அந்த விடுதியின் பாதுகாப்பு குறித்து முழுமையாக சோதனை செய்ததா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

விஜயவாடாவில் மட்டுமல்ல, கடந்த வாரம் ஆமதாபாதில் ஸ்ரே மருத்துவமனையில் இதேபோல தீவிபத்து ஏற்பட்டு எட்டு நோயாளிகள் உயிரிழந்தனா். பலா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். ஆமதாபாத் தீவிபத்துக்குக் காரணம், மருத்துவமனை பயன்படுத்திய கருவிகளில் காணப்பட்ட தரக்குறைவு என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொவைட் 19 நோய்த்தொற்றைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கில் சில காா்ப்பரேட் மருத்துவமனைகளும் தனியாா் மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் நிலையில், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து மருத்துவமனை நிா்வாகங்கள் கவலைப்படாமல் இருப்பதில் வியப்பில்லை. அதிகரித்த நோயாளிகளின் தேவையைப் புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் இருப்பதால், சிகிச்சைக்குத் தரும் முன்னுரிமையை ஏனைய பாதுகாப்பு அம்சங்களில் செலுத்த முடியவில்லை என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் முடிந்தவரை கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடன் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவா்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கருவிகளின் தரம் குறித்துக் கவலைப்படுவதில்லை. மருத்துவமனைகளுக்கும் அதிகரித்த தேவை இருப்பதால், மருத்துவக் கருவிகளின் தரத்தை பரிசோதித்து வாங்கும் பொறுமை இருப்பதில்லை. அதன் விளைவாக பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை கணக்கில் அடங்காத கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் தீவிபத்துக்கு உள்ளாகும் நிலைமையில்தான் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 12-ஆவது பிரிவில் வரும் தீயணைப்புத் துறை நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தீயணைப்புத் துறை குறித்து நிா்வாகங்கள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.

ரமேஷ் மருத்துவமனை தீவிபத்துக்குப் பிறகு, விசாகப்பட்டினம் மாநகராட்சி நடத்திய சோதனையில் 250-க்கும் அதிகமான மருத்துவமனைகள் தீயணைப்புத் துறையின் தகுதிச்சான்றை பெற்றிருக்கவில்லை. அண்டை மாநிலமான தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள 1,700 மருத்துவமனைகளில் 90% மருத்துவமனைகள் தீயணைப்புத் துறை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதேநிலைதான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எல்லா பெருநகரங்களிலும்.

ரமேஷ் மருத்துவமனை விபத்தில் வேடிக்கை என்னவென்றால், தீவிபத்து குறித்து காவல் துறையை அழைத்து எச்சரித்தவா் ஒரு நோயாளி. மருத்துவமனையாக மாற்றப்பட்ட அந்த விடுதியில், தீ எச்சரிக்கைக் கருவி வேலை செய்யவில்லை. விபத்துக்குள்ளான ஆமதாபாத் மருத்துவமனையும் தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றிருக்கவில்லை.

கடமையைச் சரியாக செய்யாத சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் தங்களுக்குத் தொடா்பே இல்லாததுபோல் இதுபோன்ற சம்பவங்களில் ஒதுங்கி விடுகின்றனவே, அது குறித்து யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.