ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்தது ஏன்?
ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்தது ஏன்? என்பதைப் பற்றி...
பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ்) கெüரவத் தலைவராகவும், தற்போதைய பென்னாகரம் எம்எல்ஏவாகவும் இருப்பவர் ஜி.கே. மணி. இவர், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் கடந்த 1996, 2001, 2006, 2011, 2021 ஆகிய ஐந்து முறையும், மேட்டூர் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டிலும் போட்டியிட்டார். இதில், மூன்று முறை வெற்றி பெற்றார்.
ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கடந்த 2010}இல் பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு 41,285 வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 24.17 சதவீதம் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல, அப்போது, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரனுக்கு கடுமையான போட்டியை அளித்தார்.
பாமக (ராமதாஸ்) இளைஞரணித் தலைவராக இருந்துவந்த தமிழ்க்குமரன், அண்மையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 28}ஆம் தேதி தில்லி சென்ற அவர், காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. தனது தந்தை ஜி.கே.மணி ஐந்து முறை போட்டியிட்ட தொகுதியும், தனக்கு மிகவும் நெருக்கமான தொடர்புடையதுமான பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பை பெற்று போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு கூறுகையில், பென்னாகரம் தொகுதிக்கு 8 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களில் சிலரின் பெயர் பரிந்துரை பட்டியலில் கட்சித் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதியதாக கட்சியில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்பதை நாங்கள் கூற முடியாது. அதேவேளை, கட்சியின் தலைமை யாரையும் வேட்பாளராக அறிவிக்கலாம். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் உடன்பட்டவர்களே. மற்றபடி யாருக்கு தொகுதி கிடைக்கும் என்பதை நாங்கள் சொல்ல முடியாது என்றார்.
- ஆர்.ராதாகிருஷ்ணன்