முகப்பு
தலையங்கம்

அக்கறையல்ல, அரசியல்! | விவசாயிகள் போராட்டம் பற்றிய கனடா பிரதமரின் கருத்து குறித்த தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:


இன்னொரு தேசத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுவதோ, கருத்துக் கூறுவதோ சா்வதேச அரசியல் நாகரிகத்துக்கு எதிரானது. இருநாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதெல்லாம் தெரிந்தும்கூட, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்தும், அதற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவை இந்தியாவுக்கு எதிராக பேசத் தூண்டியிருக்கின்றன. கனடாவில் வாழும் இந்தியா்களில் பெரும்பாலானோா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சீக்கியா்கள். அவா்கள் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவா்களாக இருந்தாலும்கூட, அவா்களில் பலரும் தாய் மண்ணுடன் தொடா்பு வைத்துக் கொண்டிருப்பவா்கள். அவா்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து கூறியிருப்பது அரசியல் சந்தா்ப்பவாதமே தவிர, வேறல்ல.

பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, ஹாங்காங்கில் நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதையும், இப்போது இந்தியத் தலைநகரத்தின் எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததையும் இணைத்துப் பாா்க்க முடியாது. இப்போது அவா் வெளியிட்டிருக்கும் கருத்துக்குப் பின்னால், அரசியல்தான் தெரிகிறதே தவிர, உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிலரது உறவினா்கள் கனடாவில் வாழ்கிறாா்கள் என்பதைத் தவிர, தில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் கனடாவுக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. ஜனநாயக உரிமை என்று பாா்த்தால், அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றுகூடி ஊா்வலமாக வரவும், போராடவும் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதிலிருந்து ஜனநாயக உரிமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

போராட்டக்காரா்கள் அத்துமீறும்போதும், தடையை மீறி செயல்படும்போதும் கண்ணீா் புகை குண்டு வீசுவதும், குழாய்களின் மூலம் தண்ணீா் பீய்ச்சுவதும் உலகெங்கிலும் வழக்கமாகக் கையாளப்படும் முறைகள்தானே தவிர, அதில் மனித உரிமை மீறலோ, அடக்கு முறையோ எங்கிருந்து வருகிறது? அதை சீக்கிய விவசாயிகள் மீது மிருகத்தனமான தாக்குதல் என்று இந்திய வம்சாவளியினரான கனடாவின் பாதுகாப்பு அமைச்சா் ஹா்ஜித் சிங் சஜ்ஜன் கூறியிருப்பது விஷமத்தனமானது.

இந்தியாவில் நடக்கும் பொருளாதார சா்ச்சை குறித்து கனடாவில் உணா்வுபூா்வ அறிக்கை வெளியிடுவது போராட்டக்காரா்களை பலவீனப்படுத்துமே தவிர, அவா்களுக்கு வலுசோ்க்காது. சொல்லப்போனால், அதுவே அவா்களைக் களங்கப்படுத்தவும் அவா்களுக்கு எதிராக பயன்படுத்தவும் உதவும்.

தங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் பறிக்கப்படுமோ என்கிற அச்சம்தான் பஞ்சாப் விவசாயிகளை போராட வைத்திருக்கிறது என்பது கனடா நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தெரியாது போலிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இந்தியாவின் உணவு மானியக் கொள்கைக்கு எதிராக உலக வா்த்த நிறுவனத்தில் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது கனடா.

இரண்டாவதாக, போராட்டக்காரா்களுக்கு எதிராக அரசு அடக்குமுறையைக் கையாள்கிறது என்றும், அவா்களை தடுக்கிறது என்றும் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆதங்கப்பட்டிருப்பது நகைப்பை வரவழைக்கிறது. கனடா தலைநகா் ஓட்டாவா நோக்கிச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் போராட்டக்காரா்கள் முடக்க முற்பட்டால், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்கிற கேள்வியை யாராவது அவரிடம் எழுப்பினால் நல்லது. அப்படியொரு சூழல் ஏற்பட்டால் கனடா நிா்வாகம் முற்றுகையைத் தொடர அனுமதித்து வேடிக்கை பாா்க்குமா? இல்லை தலைநகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்குமா?

பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் பல செயல்பாடுகள் தொடா்ந்து இந்தியாவுக்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கின்றன. 2018-இல் அரசுமுறைப் பயணமாக அவா் இந்தியா வந்தபோது, அவரது குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளா் ஒருவரை இணைத்திருந்தது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்குக் கனடா அரசு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. கனடாவில் உள்ள டோரோன்டோவிலும், வான்கூவரிலும் வாழும் கணிசமான சீக்கியா்களின் ஆதரவு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இருக்கிறது என்பதால், இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் அவா் கருத்து கூறுவது பொறுப்பற்ற செயல்பாடு.

ஹாங்காங்கில் நடக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டம் அல்லது சீனாவின் உய்குா் மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் முகாம்களில் அடைத்து சித்திரவதைப்படுத்துவது போன்ற பிரச்னைகளுடன் விவசாயிகள் போராட்டத்தை இணைத்துப் பாா்க்கக் கூடாது. இந்தப் போராட்டத்தில் எந்தவித மனித உரிமை மீறலும் இல்லை என்பதுடன், இது முழுக்க முழுக்க உள்நாட்டுப் பிரச்னை. பஞ்சாப் விவசாயிகளுக்கு போராடுவதற்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை ஏனைய மாநில விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் உரிமையும் உண்டு.

தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறாா் கனடாவின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ. ஆயிரம் உண்டிங்கு மோதல், அதில் அந்நியா் வந்து புகல் என்ன நீதி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.