"டிரம்ப்' (துருப்பு) சீட்டு! | அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த தலையங்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்கள் பிரதிநிதி வாக்குகளில் பெரும்பான்மையை நெருங்கினாலும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லக்கூடும் என்பதால், தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு சில நாள்கள் அல்லது சில வாரங்கள்கூட ஆகலாம் என்பதுதான் பரவலான கருத்து.
முடிவு எதுவாக இருந்தாலும்கூட, இப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கு ஊடகங்களையும், தேர்தல் கணிப்பாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுவதாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனுக்கு ஆதரவான அலை அமெரிக்கா முழுவதும் காணப்படுவதாகவும் வெளியான கருத்துக் கணிப்புகள் பொய்யாகி இருக்கின்றன. தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்புகளாலும், கட்செவி அஞ்சல் குழுக்களாலும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும், பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை என்பதையும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
எதிர்பார்த்ததைபோல் அல்லாமல் குடியரசுக் கட்சி வாக்காளர்கள், அதிபர் டிரம்ப்பின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்ய முன் வந்தனர். இந்த முறையும் ஃபுளோரிடா, டெக்சாஸ் போன்ற மாகாணங்கள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
பல மாநிலங்களில் கடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த அளவுகூட, இந்த முறை லத்தீன் அமெரிக்க வாக்காளர்களின் ஆதரவு ஜோ பிடனுக்குக் கிடைக்கவில்லை. அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்தால் அது குடியரசுக் கட்சிக்கு எதிராக இருக்கும் என்பதும், எல்லா தரப்பு மக்களும் வாக்களித்தால் அது ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதும் பொய்யாகி இருக்கின்றன.
கடைசி நிலவரப்படி, ஃபுளோரிடா, ஒஹையோ, அயோவா மாகாணங்களில் அதிபர் டிரம்ப்பின் வெற்றி உறுதியாகத் தெரிகிறது. முக்கியமான மாகாணங்களான ஜார்ஜியா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படாத நிலையில், அதிபர் டிரம்ப் முன்னணி வகிக்கிறார். அதேபோல, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனும், மின்னிசோட்டா, விர்ஜினியா, நியூ ஹாம்ப்ஷையர் மாகாணங்களில் வெற்றி முகத்திலும், அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் முன்னணியிலும் இருப்பது வெற்றிக்குத் தேவைப்படும் 270 மக்கள் பிரதிநிதி வாக்குகளைப் பெறுவதற்கு வழிகோலக்கூடும்.
ஜோ பிடனுக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திவிட முடியாது. கடந்த 2016-ஐ போலவே குடியரசுக் கட்சி செல்வாக்கு கேந்திரங்களில் அதிபர் டிரம்ப் வலுவாகவே இருக்கிறார் என்பது எல்லோரையுமே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
ஆரம்பம் முதலே அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்களை நேரில் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் தயங்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தது எதனால் என்று இப்போதுதான் புரிகிறது. ஏறத்தாழ 2.30 லட்சம் அமெரிக்கர்கள் கொவைட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்திருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியும், அதன் வேட்பாளர்களான ஜோ பிடன் - கமலா ஹாரிஸýம் தங்களது ஆதரவாளர்களை தபால் மூலம் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர். அப்போதே அதிபர் டிரம்ப், தபால் வாக்குகள் குறித்து சந்தேகம் எழுப்பியது மட்டுமல்லாமல், அது தேர்தல் முறைகேடுகளுக்கு வழிகோலும் என்றும் பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டார்.
தேர்தல் பரப்புரையின்போதே, 2020 தேர்தலில் வாக்குப்பதிவில் பெரிய மோசடி நடக்க இருப்பதாகவும், பிரச்னையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்தது போலவே, இப்போது சம்பவங்கள் நடக்கின்றன. வாக்குப்பதிவு நாளுக்குப் பிறகு எண்ணப்படும் தபால் வாக்குகளை நிராகரிக்க வேண்டும் என்பது அதிபர் டிரம்ப்பின் வாதம். பென்சில்வேனியா உள்ளிட்ட சில மாகாணங்கள் தேர்தல் நாள் வரை தபாலில் சேர்க்கப்பட்ட வாக்குகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
அதிபர் தேர்தல் ஒருபுறம் விவாதமாகியிருந்தாலும், இன்னொருபுறம் வாக்குப்பதிவின்போது எந்தவித வன்முறை இல்லாமல் இருந்ததும், வாக்குப்பதிவு பிரச்னை இல்லாமல் நடைபெற்றதும் மிகப் பெரிய ஆச்சரியம்தான். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் காணப்படும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களும், அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவான குரல்களும் உலகின் மிகப் பழமையான ஜனநாயகத்தின் தேர்தல் அமைதியாக நடக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்பியிருந்தது. நல்லவேளையாக வாக்குப்பதிவின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
2000-இல் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், அல்கோருக்கும் இடையேயான தேர்தல் இழுபறி, உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டதுபோல, இந்த முறையும் அதிபரை நீதிமன்றம் முடிவு செய்யுமா அல்லது வாக்குகள் நிர்ணயிக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள அமெரிக்காவும் உலகமும் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறதே...