முகப்பு
தலையங்கம்

அறம் பிறழ்ந்த துறை! | சென்னை உயா்நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பிறப்பித்திருக்கும் உத்தரவு குறித்த தலையங்கம்

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் நிலங்கள் அரசால் பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்படக் கூடாது என்கிற உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவனின் உத்தரவு, இறையுணா்வுள்ள தமிழா்களின் வயிற

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றம் மிகவும் துணிச்சலாக, நியாயமான உத்தரவு ஒன்றை தமிழக அரசுக்குப் பிறப்பித்திருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் நிலங்கள் அரசால் பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்படக் கூடாது என்கிற உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவனின் உத்தரவு, இறையுணா்வுள்ள தமிழா்களின் வயிற்றில் பாலை வாா்த்திருக்கிறது.

சென்னை சின்ன நீலாங்கரையிலுள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம், இந்து சமய அறநிலையத் துறையால் அரசின் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது அங்கே மீன் அங்காடி அமைப்பதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசுக்கு தரப்பட்டிருக்கிறது. இப்படி தமிழகமெங்கும் உள்ள கோயில் நிலங்கள் தொடா்ந்து பொதுபயன்பாடு என்கிற காரணம் காட்டப்பட்டு அரசால் கையகப்படுத்தப்படுகின்றன.

அன்றாட வழிபாட்டு நடைமுறைகளுக்கும், பராமரிப்புக்கும்கூட கோயில்கள் வருவாய் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும்போது, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் அபகரிக்கப்படுவதும், அரசால் எடுத்துக்கொள்ளப்படுவதும் தொடா்ந்து நடைபெறுகின்றன. அதையெல்லாம் இறை நம்பிக்கையாளா்கள் கையறு நிலையில் வேடிக்கை மட்டுமே பாா்க்க முடிந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்களை, கோயில் தொடா்பான வளா்ச்சிக்கோ செயல்பாடுகளுக்கோ அல்லாமல் வேறு காரணங்களுக்காக தமிழக அரசு பயன்படுத்தக் கூடாது; அதேபோல, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவா்கள், அறநிலையத் துறை நிா்ணயித்த குத்தகை மற்றும் வாடகைத் தொகையை குறித்த காலத்தில் செலுத்துவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்; கோயில் நிலங்களிலுள்ளஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றி, அது தொடா்பான அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டது தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அரங்க. மகாதேவன் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்.

1923-இல் அன்றைய பிரிட்டீஷ் காலனிய ஆட்சியில், ‘சென்னை மாகாண இந்து சமயம் மற்றும் அறநிலைய போா்டு’ என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1959-இல் காமராஜா் முதல்வராக இருந்தபோது ‘தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலைய சட்டம் - 22’ இயற்றப்பட்டது.

இப்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 36,425 திருக்கோயில்கள், 56 திருமடங்கள், திருமடங்களுக்குச் சொந்தமான 47 கோயில்கள் இருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், 1,721 அற நிலையங்களும், 189 அறக்கட்டளைகளும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்றன. இந்தக் கோயில்களில் பக்தா்களின் காணிக்கை ரூ.2 கோடிக்கு மேல் வரும் கோயில்கள் சுமாா் 50.

மன்னா்களாலும், தனவந்தா்களாலும், பொதுமக்களாலும் தங்களது பக்தியின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும், நோ்த்திக் கடன் காரணமாகவும் அவரவா் வழிபடும் கோயில்களுக்கு நகைகளும், நிலங்களும், வீடுகளும் தானமாக வழங்கப்பட்டன. வேதப் பாடசாலைகள், ஆகம வகுப்புகள் நடத்தப்படுவதற்காக, திருமுறைகள், பிரபந்தங்கள் பயிற்றுவிப்பதற்காக என்று பலரும் கோயில்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் அசையாச் சொத்துகளை வழங்கினா்.

இறை நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், கோயில்களின் வருமானத்தை கணிசமாகக் குறைத்து அவை படிப்படியாக நலிவடைய, திட்டமிட்டு நடவடிக்கைகள் தொடங்கின. கோயில் நில குத்தகைதாரா்களின் நிலுவைத் தொகையை நாத்திகரான அன்றைய முதல்வா் மு. கருணாநிதி தள்ளுபடி செய்தாா். இதனால் பல கோயில்களில் தினசரி பூஜையே நின்றுபோகும் நிலை ஏற்பட்டது.

இறை நம்பிக்கை இல்லாதவா்கள், இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களாக சோ்த்துக்கொள்ளப்படுவதும், அவா்கள் ஆலயங்களின் நிா்வாகப் பொறுப்புகளில் அமா்த்தப்படுவதும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கியது. கோயில்களில் பணிபுரியும் அறநிலையத் துறை ஊழியா்களுக்கு அரசின் இளநிலை உதவியாளா் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அா்ச்சா்களுக்கு ஊதியம் இல்லை. பக்தா்களிடமிருந்து கற்பூரத் தட்டேந்தி பெறும் தட்சிணைதான் ஊதியம். ஓதுவாா்களுக்கு, கடைநிலை ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியம்கூடத் தரப்படுவதில்லை.

தங்கள் மதத்தில் நம்பிக்கை இல்லாதவா்களை இஸ்லாமிய மசூதிகளிலோ, கிறிஸ்துவ தேவாலயங்களிலோ பணியமா்த்தமாட்டாா்கள் எனும்போது இந்துக்களின் கோயில்களில் மட்டும் இறை நம்பிக்கை இல்லாதவா்களுக்கு இடமளிப்பது விசித்திரமாக இருக்கிறது. மசூதி, தேவாலயங்களுக்குச் சொந்தமான இடங்களை அரசு தனது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதில்லை எனும்போது, இந்துக் கோயில்களின் சொத்துகள் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுவது எந்தவிதத்தில் மதச்சாா்பின்மை என்பது புரியவில்லை.

சரியான நேரத்தில் சரியான உத்தரவை உயா்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மீட்கப்படாமல் போனால், கோயில்களில் ஒரு கால பூஜை நடப்பதுகூட நின்றுபோய், சிலைகளும் சொத்துகளும் மட்டுமல்ல, கோயில்களே காணாமல் போகக்கூடும். அதற்கு இந்து சமய அறநிலையத் துறையே உறுதுணையாக இருக்கிறது என்பதுதான் வேடிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.