டிரம்ப்பால் கிடைத்த வெற்றி! | அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பற்றிய தலையங்கம்
அமெரிக்காவின் 46-ஆவது அதிபருக்கான தேர்தல் முடிவு தெளிவான தீர்ப்பை வழங்கியிருப்பது மிகப் பெரிய ஆறுதல். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 77 வயது ஜோ பிடன் அதிபராகி வரலாறு படைத்திருக்கிறார். மிகக் குறைந்த வயதில் அமெரிக்காவின் மேலவை உறுப்பினரானவர், மிக அதிகமான வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற இரண்டு பெருமைகளுக்கும் உரியவராகிறார் அவர்.
தனது சிறு வயது முதலே அதிபராக வேண்டும் என்கிற கனவை சுமந்து கொண்டிருந்த டெலவேரைச் சேர்ந்த மூத்த தலைவரான ஜோ பிடன் இதற்கு முன்னால் 1988-லும், 2008-லும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து தவறினாலும், மூன்றாவது முறையாக இந்த முறை ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதிபர் தேர்தலில் வெற்றியும் பெற்றிருப்பது சரித்திர சாதனை. பராக் ஒபாமா தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்தபோது துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடனுக்கு, இப்போது அதிபராக வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பை அமெரிக்க மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
கடந்த சில தேர்தல்களில்தான் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் முனைப்பும் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை வாக்குப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரலாறு படைத்திருக்கிறது. 66.9% வாக்காளர்கள் பங்கேற்றிருக்கும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல், 120 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிகமான அளவில் மக்களை வாக்களிக்கத் தூண்டியிருக்கிறது. 1897 முதல், 1901-இல் படுகொலை செய்யப்படும் வரை அமெரிக்காவின் 25-வது அதிபராக இருந்த வில்லியம் மெக்கன்லி இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட அதிபர் தேர்தலிலும் இதேபோல அமெரிக்க மக்கள் திரண்டெழுந்து வாக்களித்தனர். ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால், மெக்கன்லி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் என்பதும்தான்.
நடந்து முடிந்த தேர்தல் பல வகையிலும் வித்தியாசப்பட்டது என்பது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் பல பலவீனங்களையும் வெளிப்படுத்தியது. மிக அதிகமாக பொய்ச் செய்திகள் சமூக ஊடகங்களின் மூலமும், காட்சி ஊடகங்கள் மூலமும் பரப்புரை செய்யப்பட்டன. அதிபர் வேட்பாளர்களுக்கிடையே இந்த முறை நடந்ததுபோல தரக்குறைவான விவாதம் முன்னெப்போதும் நடந்ததில்லை. இதற்கெல்லாம் அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் காரணம் என்றாலும்கூட, முன்னாள் துணை அதிபரும் இப்போது அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஜோ பிடனும் சற்று தரமிறங்கிப் பேசியதைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை வேறு எந்த அதிபரும் பெற்றிராத அளவில் மக்களின் நேரடி வாக்குகளைப் பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன். இதற்கு முன்னால் அல் கோரும், ஹிலாரி கிளிண்டனும் இதேபோல ஆதரவு வாக்குகள் பெற்றிருந்தும், போதுமான அளவு மக்கள் பிரதிநிதி வாக்குகள் பெறாததால் அதிபராகும் வாய்ப்பை இழந்தனர். அந்த வகையில் ஜோ பிடன் அதிருஷ்டசாலி. அதுமட்டுமல்ல, அவரது அறைகூவலை ஏற்று, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அவரது ஆதரவாளர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியது அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்தத் தேர்தலில் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்திருந்தாலும் மிக முக்கியமான ஜனநாயகக் கட்சியின் மேலவை (செனட்), மக்களவை (காங்கிரஸ்) உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். நேர்மாறாக, குடியரசுக் கட்சியின் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்கள் மேலவை, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றும்கூட அதிபர் டிரம்ப்பால் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒருவகையில், தனிப்பட்ட முறையில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராகவும், அதேநேரத்தில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகவும் மக்களின் மனநிலை காணப்படுவதன் பிரதிபலிப்பு என்று சில அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் சிறு நகரங்களிலும், ஊரகப் புறங்களிலும் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும் வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்படாததும், வெள்ளையர்கள் அல்லாதவர்களின் ஆதரவு பெரும்பாலும் ஜோ பிடனுக்கு காணப்படுவதும் அமெரிக்கா இன ரீதியாக பிளவு பட்டுக்கிடப்பதை உறுதிப்படுத்துகின்றன.
சாதாரணமாக அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றியடைந்தால் மேலவையில் அவரது கட்சி பெரும்பான்மை பலம் பெறுவதுதான் வழக்கம். பதவியில் இருப்பவர் தோல்வி அடைந்தால் வெற்றி பெறுபவரின் கட்சி மேலவையில் பெரும்பான்மை பெறும். ஆனால் இந்தமுறை வெற்றிபெற்றிருக்கும் ஜனநாயகக் கட்சி, மக்களவையில் சிறிய அளவிலான பெரும்பான்மையுடனும், மேலவையில் இரண்டு கட்சிகளும் சம பலத்துடனும் காணப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் ஜோ பிடனின் வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டால், இரண்டாவது முறை அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது சந்தேகம்தான். இருக்கும் நான்கு ஆண்டுகளில் முந்தைய ஆட்சியின் தவறுகளைத் திருத்துவதிலேயே அவரது பதவிக்காலம் முடிந்துவிடும் போலிருக்கிறதே!