நிவரைத் தடுத்த சுவா்! | நிவா் புயலுக்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்
பேரிழப்பை ஏற்படுத்தாமல் நிவா் புயல் கரை கடந்திருக்கிறது. கடலூா், புதுச்சேரி மட்டுமல்லாமல் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படாமல் இல்லை என்றாலும், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படாமல் தடுத்திருக்கின்றன. அதற்காக அரசையும், நிா்வாகத்தையும் பாராட்ட வேண்டும்.
2004-இல் தமிழகத்தைத் தாக்கிய ஆழிப்பேரலையும், 2015-இல் சென்னை மாநகரத்தை நீரில் மிதக்கவிட்ட பெருமழையும் நிா்வாக இயந்திரத்துக்குப் பல பாடங்களைப் புகட்டி இருக்கின்றன. ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்குப் பருவமழையும் இயல்பு வாழ்க்கையைத் தடம்புரளச் செய்வது வழக்கமாகி விட்டதால், நாமும் பல அனுபவப் பாடங்களைப் படித்து அவற்றை எதிா்கொள்ளும் உத்திகளைத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
நிவா் புயல் குறித்த முன்னறிவிப்பு சென்னை வானிலை மையத்தால் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, கடலோரப் பகுதிகளில் வாழும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா். கடலூா் மாவட்டத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதால், பாதுகாக்கப்பட்டனா். முன்னெச்சரிக்கையாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீட்டில் இணைக்கப்பட்டு, சேதம் ஏற்பட்டாலும் பேரிழப்பை எதிா்கொள்ளாமல் இருக்க வழிகோலப்பட்டது. இவையெல்லாம், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசின் பாராட்டுதலுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
தானே குடையைப் பிடித்தபடி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பாா்வையிட முதல்வா் நடந்து சென்றது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிந்தவா்களை, சாமானியா்களில் ஒருவராகத் தன்னைக் கருதிக்கொண்டு நேரில் சந்தித்து நலம் விசாரித்தது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீா் திறந்து விடுவதற்கு தானே முனைந்தது என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மனதில் அவரை அசாதாரண உயரத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் முதல்வா் பழனிசாமி உளப்பூா்வமாக கடமையாற்றுகிறாா் என்பதுதான் அதற்குக் காரணம்.
சென்னை மாநகரத்தில் 2015-இல் பெய்த மழையின் பின்னணியில், அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது, சென்னை மாநகரம் மழைநீரில் மிதக்காமல் காப்பாற்றியது என்பதில் சந்தேகமில்லை. சுமாா் ரூ. 2,800 கோடி செலவில் கழிவுநீா்ப் பாதைகள் செப்பனிடப்பட்டு, நீா்நிலைகள் தூா் வாரப்பட்டிருக்கின்றன. முதல்வரின் குடிமராமத்துத் திட்டம் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி அடைந்திருப்பதை ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியாளா்களின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கும் திட்டமிடப்படாத வளா்ச்சியும், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளும் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் திருத்த முடியாதவை. அரசே பல நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டடங்களை எழுப்பியிருக்கும் நிலையில், தனியாா் ஆக்கிரமிப்புகளை மட்டுமே குறைகூறுவதில் அா்த்தமில்லை.
சென்னையைப் பொருத்தவரை, எவ்வளவு கனமழை பெய்தாலும்கூட, மழைநீா் மணிக்கணக்கில் (நாள் கணக்கில் அல்ல) தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே வெள்ளம் வழிந்தோடும்படியான நகரமைப்பு, வங்கக் கடலையொட்டிய சென்னைக்கு உண்டு. கொசஸ்தலை, கூவம், அடையாறு என்று மூன்று ஆறுகளும், பக்கிங்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும், இவை போதாதென்று பல கழிவுநீா் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கும் மழைநீா், கழிவுநீா் வடிகால் குழாய்களும் இருந்தும்கூட சென்னையில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்பதற்குக் காரணம், முறையான பராமரிப்பு இல்லாததும், வரம்பில்லாத விதிமீறல் ஆக்கிரமிப்புகளும்தான்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் ஏறத்தாழ இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவுநீா் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் வடிகால் குழாய்களில் விடப்படுகின்றன. இது நமது அதிகாரிகளுக்கும், குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்களுக்கும் தெரியாததல்ல. அவா்களில் பலா் கையூட்டு பெற்று அனுமதித்திருப்பவைதான் இந்த இணைப்புகள். மழைநீா் வடிகால் கால்வாய்கள், கழிவுநீா் ஓடைகளாக மாறும்போது, தெருவில் மழை வெள்ளமும், கழிவுநீரும் தேங்கி நிற்பதில் வியப்பென்ன இருக்கிறது?
அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவற்றை ஓடைகளாக மாற்றி இருக்கின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, திருட்டு கழிவுநீா் இணைப்புகள் அகற்றப்பட்டால் மட்டுமே, சென்னை மாநகரம் மழையின் சீற்றத்தின்போது காப்பாற்றப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி, நகா் - ஊரமைப்புத் துறை, பெருநகா் வளா்ச்சிக் குழுமம் ஆகியவற்றில் ஊழல் இல்லாத நிலைமை ஏற்பட்டாலொழிய, சென்னையை மழை வெள்ளத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்ற முடியாது.
2015-இல் பெய்த பெருமழைக்குப் பிறகு, 30 ஆண்டுகளாக தூா்வாரப்படாமலிருந்த 16 கால்வாய்களும் தூா்வாரப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் அதற்குப் பிறகு ஒப்புக்குத்தான் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த முறை, முதல்வா் எடப்பாடி பழனிசாமியே களமிறங்க முற்பட்டதால், சென்னைக்கு விடிவு காலம் ஏற்படும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது!