தலையங்கம்

வாராக்கடனல்ல, மக்கள் பணம்! | நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்கள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி அடைக்காதவர்கள், வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பால் திவாலாகி சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லா வசதிகளுடன் இருந்தும் பல கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று திருப்பி செலுத்தாத மோசடியாளர்களை என்னவென்று சொல்ல?
 வங்கிக் கடன்களை திருப்பி அடைக்காத கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நிதியமைச்சகம் தாக்கல் செய்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் செய்தி. விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும், மெஹுல் சோக்ஷியும் மட்டுமல்ல; அவர்களைப் போன்ற வங்கிக் கடன் மோசடியாளர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
 திட்டமிட்டு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி அடைக்காத 50-க்கும் மேற்பட்ட மோசடியாளர்களிடமிருந்து வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணம் ரூ. 92,570 கோடி. கீதாஞ்சலி ஜெம்ஸ் என்கிற வைர வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் மெஹுல் சோக்ஷி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு திருப்பித் தர வேண்டிய கடன் நிலுவை மட்டும் ரூ.7,848 கோடி.
 ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக பொதுத்துறை வங்கிகளிலிருந்து கடன் வாங்கி திருப்பி அடைக்காதவர்களின் எண்ணிக்கை 2017-இல் 8,045-ஆக இருந்தது. அது இப்போது 12,439-ஆக அதிகரித்திருக்கிறது. தனியார் வங்கிகளிலும் இதுபோல கடன் வாங்கி ஏமாற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் 2,447 பேர் காணப்படுகிறார்கள். போதுமான அசையா சொத்துகள் ஈடாகப் பெறாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கியதன் விளைவுதான் இந்த வாராக்கடன்கள் என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.
 வாராக்கடன் அதிகரித்து வருவது பல வங்கிகளை மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னணி வங்கிகள் ரூ.11.18 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இதை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் ரூ.8.16 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிதள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
 வங்கிகளின் வரவு - செலவு புத்தகத்தில் நீண்டகாலமாக ஆஸ்தியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதால் அவற்றை திரும்பப் பெறும் முயற்சிகள் கைவிடப்பட்டன என்று அர்த்தமில்லை என்பது வங்கிகளின் வாதம். வாராக்கடனை தொடர்ந்து இருப்பாகக் காட்டிவரும்போது, வங்கிகளின் ஆஸ்தி அளவு போலித்தனமான அதிகரிப்பைக் காட்டுகிறது. அவற்றை அகற்றி வைப்பதன் மூலம் மட்டுமே உண்மையான நிதி நிலைமையைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது வங்கி நிர்வாகத்தின் வாதம்.
 வரவு - செலவு கணக்குப் புத்தகம் முறைப்படுத்தப்படுவது, அதன் மூலம் எதார்த்த நிலைமையைத் தெரிந்துகொள்வது என்பவற்றில் தவறில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் குறிப்பிடுவதுபோல, நீண்டநாள் வாராக்கடனை மீட்டெடுக்கும் முயற்சி, தள்ளுபடி செய்யப்படுவதுடன் கைவிடப்படுகிறது என்பதுதான் உண்மை. கடந்த ஐந்தாண்டுகளில் மீட்டெடுக்கப்பட்ட வாராக்கடன் தொகை வெறும் 13% மட்டுமே.
 வாராக்கடன் தள்ளுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004 முதல் 2014 வரை ரூ.2.11 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவில் தள்ளுபடி செய்து வரவு - செலவு கணக்குகளை முறைப்படுத்தும் வழக்கம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது.
 இதே காலகட்டத்தில், கடன் வாங்கி மோசடி செய்த 515 வழக்குகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் ரூ.45,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வங்கிகள் முனைப்பு காட்டுவதில்லை என்பது தெரிகிறது.
 உலக அளவில் வங்கி மோசடிகளும், வாராக்கடன்களும் புதிதல்ல. அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் வங்கி மோசடி போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியாவைப் போல மோசடியாளர்களும், வங்கி உயரதிகாரிகளும் திட்டமிட்டு நடத்தும் வாராக்கடன் மோசடிகள் ஏனைய வளர்ச்சி பெற்ற நாடுகளில் நடந்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகிறார்கள். அங்கே கண்காணிப்பு அமைப்புகள் ஊழல் இல்லாமல் நேர்மையாகச் செயல்படுகின்றன. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் யாருக்கும் சொந்தமில்லாதவை என்கிற எண்ணம் காணப்படுவதால் மோசடிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.
 வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வது, "பேட் பேங்க்' உருவாக்கி அதற்கு மாற்றுவது உள்ளிட்ட முயற்சிகள் மோசடிகளைக் குறைக்க உதவாது. முறையாகத் தவணை செலுத்தும் தொழில் நிறுவனங்கள், தவணை தவற நேர்ந்தால் அந்த நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், திட்டமிட்டு மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு இரக்கமின்றித் தண்டிப்பதுமே வாராக்கடன்கள் குறைவதற்கான வழிகள். இவை அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதவையா என்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT