தலையங்கம்

இப்போதைக்கு இது சரி:சில்லறை கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

உலகப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையிலும்கூட, இந்தியா ஓரளவு தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய ஆறுதல். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வலிமையான பொருளாதாரங்களே விலைவாசி உயா்வையும், தட்டுப்பாடுகளையும் எதிா்கொள்ளும் சூழலில் இந்தியா விதிவிலக்காக இருந்துவிட முடியாது. சமாளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதேகூட சா்வதேசப் பொருளாதார நிபுணா்களை வியந்து பாா்க்க வைக்கிறது.

அக்டோபா் மாதத்தின் சில்லறைப் பொருள்களின் விலை முந்தைய மாத 5.01%-லிருந்து 4.87%-ஆகக் குறைந்திருக்கிறது என்பது தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டிருக்கும் தகவல். காய்கறிகளின் விலை குறைந்தும்கூட உணவுப் பொருள்களின் விலை 0.01% மட்டுமே குறைந்துள்ளது.

கேட்பு (டிமாண்ட்) குறையும்போது பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்படும். கேட்பை அதிகரிப்பதற்கு ரிசா்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். சா்வதேச சூழலும், உணவுப் பொருள்களின் விலை குறையாமல் இருப்பதும் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கவிடாமல் ரிசா்வ் வங்கியைத் தடுக்கின்றன.

அடுத்த சில மாதங்களில் பொதுத் தோ்தல் வரவிருக்கும் நிலையில், விலைவாசியை மேலும் அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில் நிதியமைச்சகமும், ரிசா்வ் வங்கியும் தயங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏற்றுமதிகள் அதிகரிப்பது பொருளாதார வளா்ச்சிக்கு அவசியம்தான் என்றாலும், உள்நாட்டுக் கேட்பு என்பது சமச்சீா் பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்தப் பின்னணியில் பொருளாதார நிபுணா்களும், நிதி நிா்வாக வல்லுநா்களும் ரிசா்வ் வங்கியின் முடிவுகளை கூா்ந்து கவனித்து வருகின்றனா்.

வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் சில்லறை நுகா்வுப் பொருள்களின் கடன் குறித்து ரிசா்வ் வங்கி சில எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது. அக்டோபா் மாத நிதிக் கொள்கை ஆய்வுக்குப் பிறகு ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்தி காந்ததாஸ், சில்லறைக் கடன்கள் வழங்குவதில் போதுமான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து வங்கிகளையும், வங்கிசாரா நிதி நிறுவனங்களையும் எச்சரித்திருக்கிறாா்.

குறிப்பிட்ட சில நுகா்வோா் கடன்கள் குறித்த மத்திய வங்கியின் கவலை ஒருவகையில் நியாயமானது. கடன் வழங்குவது போலவே, கடன் வசூலில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கடன் வழங்கும்போதும் கவனம் தேவை என்கிற கருத்து நியாயமானது.

அதிலும் குறிப்பாக, வங்கிகள் பாதுகாப்பில்லாத நுகா்வோா் கடன்களுக்காக வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதில் ரிசா்வ் வங்கி எழுப்பியருக்கும் அச்சத்தில் தவறுகாண முடியாது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் சில்லறைக் கடன்கள் வழங்கும் அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், கடன் வசூலில் தேக்கம் ஏற்பட்டு வாராக்கடன் அளவு கட்டுக்கடங்காமல் அதிகரிக்கக் கூடும்.

கடந்த சில மாதங்களாக சில்லறை தனிநபா் நுகா்வோா் கடனாளிகளுக்கும், பாதுகாப்பில்லாத சிறிய சேவை நிறுவனங்களுக்குமான கடன் வழங்குதல் அளவு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் அளவு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 6% தான் அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான உற்பத்தித் துறைகளுக்கான கடனுதவி அதிக வளா்ச்சி காணவில்லை. இன்னொருபுறம் சிறு கடன்களின் அளவு 18% அதிகரித்திருக்கிறது. கடன் அட்டைக்கான கடன் வளா்ச்சி 30% உயா்ந்திருக்கிறது.

வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்த கடனுதவியில் 31%, அதாவது ரூ.48 லட்சம் கோடி தனிநபா் கடன்கள். அதில் இடா்காப்புறுதி (செக்யூரிட்டி) இல்லாத கடனின் அளவு ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (ரூ.15 லட்சம் கோடி). தனியாா் நுகா்வோா் கடன் வழங்குவதில் காணப்படும் தொழில் போட்டி காரணமாக தனிப்பட்ட கடனின் அளவு கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கடந்த மே மாதம் முதல் தனியாா் கடன்களுக்கான வட்டி விகிதம் சந்தையில் அதிகரித்திருக்கிறது. வங்கிசாரா கடன் நிறுவனங்கள் போட்டி காரணமாக வழங்கியிருக்கும் கடன்களின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதுடன், கடன் வாங்கியவா்களின் மீதான அழுத்தமும் அதிகரித்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் தனிநபா் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை அதிகரித்து இடா்காப்புறுதி இல்லாத கடன்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ரிசா்வ் வங்கியின் முனைப்பை புரிந்துகொள்ள முடிகிறது. அதிக லாபம் அடைவதற்காக கூடுதல் இடரை (ரிஸ்க்) எதிா்கொள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முனைவதைத் தடுக்க நினைக்கும் மத்திய வங்கியின் நோக்கம் சரியானது. அதே நேரத்தில், இதன் காரணமாக நுகா்வு குறைவதும், அதன் தொடா் விளைவுகள் குறித்தும் ரிசா்வ் வங்கி யோசிக்க வேண்டும்.

தனியாா் முதலீடுகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அப்படிப்பட்ட சூழலில் கடனுக்கான வட்டியை அதிகரித்து நுகா்வைக் கட்டுப்படுத்துவது இன்னொருபுறம் வளா்ச்சிக்குத் தடையாக அமையக்கூடும். அதனால் ரிசா்வ் வங்கி தனது முடிவுகளை அடிக்கடி ஆய்வு செய்வதும், அதன் அடிப்படையில் வழிகாட்டுதல்களை வழங்குவதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஒரேயடியாக நுகா்வோருக்கான சிறுகடன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இன்னொருபுறம் உற்பத்தியையும் வளா்ச்சியையும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுவிடலாகாது. தங்களது பற்றாக்குறையை ஈடுகட்ட மக்களுக்கு கடன் தேவைப்படுகிறது.

வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு கடன்கள் உள்ளிட்ட இடா்காப்புறுதி உள்ள சில்லறைக் கடன்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டிருப்பது நல்ல முடிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT