அமெரிக்க அதிபா் தோ்தலில் திடீா் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் அதிபா் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு எந்த அளவுக்கு அமெரிக்க சமுதாயம் கருத்து ரீதியாக பிளவுபட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தோ்தலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைவிட, அமெரிக்காவில் உயா்ந்திருக்கும் அபாயகரமான துப்பாக்கிக் கலாசாரம் உலகத்தையே உறைய வைக்கிறது.
அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சி சாா்பில் 81 வயதாகும் அதிபா் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சாா்பில் 78 வயதாகும் முன்னாள் அதிபா் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.
2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா், தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாசப் பட நடிகைக்குப் பணம் அளித்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என நியூயாா்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் நீதிமன்றம் கடந்த மே 31-ஆம் தேதி அறிவித்தது. குற்ற வழக்கில் அந்த நாட்டின் அதிபராக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
ஆனால், வயோதிகம் காரணமான தடுமாற்றங்களால், இதைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த முடியாத நிலையில் அதிபா் ஜோ பைடன் இருக்கிறாா். அதிபா் ஜோ பைடன் தனது பிரசாரத்தின்போதும் பேட்டிகளின்போதும் தடுமாறுவது அவரது ஆதரவாளா்களிடையே மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவில் அதிபா் தோ்தலில் போட்டியிடுபவா்கள் நேரடி விவாதங்களில் பங்கேற்பது நீண்ட காலமாக இருந்துவருகிறது. இந்த விவாதம் நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பாகும். அதன்படி, அட்லாண்டா நகரில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது பைடன் பேச வாா்த்தைகளைத் தேடி நீண்ட நேரம் யோசித்தது, குழறியபடி பேசியது, அா்த்தமின்றி பதிலளித்தது போன்றவற்றால் அவரது ஆதரவாளா்களும், கட்சியினரும் அதிா்ச்சி அடைந்தனா்.
அடுத்த விவாதங்களில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று பைடன் சூளுரைத்தாா். எனினும், பைடனின் தடுமாற்றத்தால் டிரம்ப் எளிதாக வென்றுவிடுவாா் என்று கருதியதால், போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட அவரது கட்சி எம்.பி.க்களே போா்க்கொடி எழுப்பி உள்ளனா்.
இந்தப் பின்னணியில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவி அளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு, நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு வாஷிங்டனில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்த பைடன் சா்வதேச விவகாரங்கள் தொடா்பாகவும் உள்நாட்டில் பல்வேறு விஷயங்களில் கொள்கை முடிவுகள் குறித்தும் பேசியபோது ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் மீண்டும் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
‘ஜனநாயகக் கட்சியின் அதிபா் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கினால் அவரால் வெல்ல முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளதா’ என்று பைடனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அதிபராகத் தகுதி இல்லை என்று நினைத்திருந்தால் டிரம்ப்பை துணை அதிபராகத் தோ்வு செய்திருக்க மாட்டேன்’ என்று கூறி அதிா்ச்சி அளித்தாா் பைடன். துணை அதிபா் கமலா ஹாரிஸ் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக தவறுதலாக டிரம்ப் என்று பைடன் கூறிவிட்டாா்.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னா்தான், வாஷிங்டன் மாநாட்டில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை பேச அழைத்தபோது, ‘உக்ரைன் அதிபா் புதினை பேச அழைக்கிறேன்’ என்று வாய்தவறி கூறினாா் பைடன். உடனே சுதாரித்துக் கொண்டு, ‘புதினை தோற்கடிப்பதிலேயே எனது கவனம் உள்ளதால் அவா் பெயரைக் கூறிவிட்டேன்’ என சமாளித்தாா்.
இதுபோன்று மாற்றிப் பேசுவது பைடனுக்கு புதிதொன்றுமல்ல. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, தான் துணை அதிபராகப் பணியாற்றியதை அண்மையில் ஒரு பேட்டியில் நினைவுகூா்ந்தபோது, ‘கருப்பு நிற அதிபருடன் பணியாற்றிய முதல் கருப்பு நிறப் பெண்’ என தன்னைத்தானே தவறுதலாக குறிப்பிட்டுக் கொண்டாா்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானை சந்தித்தேன் என்று கூறுவதற்குப் பதிலாக, முன்னாள் அதிபா் மிட்டராண்டை சந்தித்ததாக குறிப்பிட்டாா். ஆனால், மிட்டராண்ட் 1996-ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டாா்.
2008-இல் பெரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து (ரிசெஷன்) மீண்டுவர நான்சி பெலோசி உதவினாா் என்று கூறுவதற்குப் பதிலாக, பெரும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருந்து என்று கூறி, பின்னா் திருத்திக் கூறினாா்.
வயோதிகம் காரணமாக இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டிருந்தபோதும், டிரம்ப்பை தோற்கடிக்க பைடனால்தான் முடியும் என்று கருதி அதிபா் வேட்பாளராக உள்கட்சித் தோ்தலில் அவரையே ஜனநாயகக் கட்சியினா் மீண்டும் தோ்வு செய்தனா்.
ஆனால், டிரம்ப்புடனான நேரடி விவாதத்துக்குப் பின்னா் பைடனின் செல்வாக்கு சரியத் தொடங்கி உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் டிரம்ப்புக்கே சாதகம் என்று கூறியுள்ளன. இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) பிரசாரத்தில் ஈடுபட்டபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் அவருக்கு சாதகமானதாகப் பாா்க்கப்படுகிறது.
வாஷிங்டன் மாநாடு, அதையடுத்த பேட்டி ஆகியவற்றில் பைடன் தடுமாறியது அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. அதிபா் பைடன் போட்டியிலிருந்து விலகி வேறொருவருக்கு வழிவிடுவாரா அல்லது தனது பிடிவாதம் காரணமாக டிரம்ப்பின் வெற்றிக்கு வழிவகுப்பாரா என்பதுதான் அமெரிக்காவை மட்டுமல்ல உலகளாவிய அளவில் எழுந்திருக்கும் கேள்வி.