மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் 1945 பிப்ரவரி 16-ஆம் தேதி பிறந்த ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக, மாநிலங்களவை உறுப்பினராக, மாநில ஆளுநராக உயர்ந்த வரலாற்றுக்குப் பின்னால் கடினமான உழைப்பு மட்டுமே இருக்கவில்லை. தியாகம், கொள்கைப் பிடிப்பு, பொது வாழ்க்கையில் நேர்மை, தனிமனித ஒழுக்கம், தேசப் பற்று, தாய்மொழிப் பற்று என்று எண்ணிலடங்காத பல குணாதிசயங்கள் இல.கணேசனை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக உயர்த்திப் பிடித்தன.
சாமானிய நடுத்தரக் குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இல.கணேசனின் தொடக்ககால வாழ்க்கையும் மிகச் சாதாரணமானது. தனது பள்ளி இறுதிப் படிப்புத் தேர்வுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊழியராகச் சேர்ந்தபோது அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் தேசப்பற்று இருந்தது. அதுதான் அவரை ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்) இயக்கத்தில் இணைத்தது.
அவருக்குள் நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்த சமூக சிந்தனையும், பொது வாழ்க்கை மீதான நாட்டமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஷாகாக்களில் (கிளைகளில்) பங்குபெற்றபோது உயிர்த்தெழுந்தன. ''ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் பார்வையாளராகப் பங்குபெறச் சென்ற என்னை அதன் தேசப்பற்றும் செயல்பாடுகளும் இரும்பைக் காந்தம் ஈர்த்துக் கொள்வதைப்போல இழுத்துக் கொண்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர ஊழியனாக என்னை இணைத்துக் கொள்வது என்று நான் முடிவெடுத்து விட்டேன்.'' என்று அவற்றை நினைவுகூர்வார் அவர்.
1991- ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பிரபாரியாக (அமைப்புச் செயலாளர்) அனுப்பப்பட்டு அரசியல்வாதியாக ஞானஸ்நானம் பெற்றார் இல.கணேசன். பாஜகவுக்கு முக்கியத் தலைவராக இல. கணேசன் அனுப்பப்படுவதற்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ் 'பிரசாரக்காக' தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்தார் அவர். காமராசரைப்போல, கருணாநிதியைப்போலத் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் தெரிந்து வைத்திருந்த தலைவர் இல. கணேசன். அவர் மோட்டார்சைக்கிளில் பயணித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்த வரலாறு, இன்றைய தலைமுறை பாஜக தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழக அரசியலில் எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுத்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. மாற்றுக் கட்சியினராலும் நேசிக்கப்பட்டவர் என்று அண்ணாவைச் சொல்வார்கள். அதேபோல அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட தலைவர்களில் இல. கணேசனைத்தான் குறிப்பிட முடியும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அன்பால் எல்லோருக்கும் நண்பராக வலம் வந்தவர் இல. கணேசன். திராவிட இயக்கம் சாராத ஒருவர் வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார் என்றால் அது இல.கணேசனுக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், இல.கணேசனும் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்குகளாக இணைந்து பணியாற்றியவர்கள். நரேந்திர மோடி பிரதமரானதும் அவருடனான தனது நெருக்கத்தை இல.கணேசன் வெளிக்காட்டியதே இல்லை. அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய போதும் சரி, ஆளுநராக நியமித்தபோதும் சரி. ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்கின் மனோபாவத்துடன் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஓர் ஆளுநர் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான வரைமுறைகளில் இருந்து இல.கணேசன் விலகியதே இல்லை. ஆளும் கட்சியுடன் அனுசரித்து, அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டத்திலிருந்து விலகி நடப்பதை அனுமதிக்காமல் கண்ணியத்துடன் செயல்பட்ட ஆளுநர் என்று அவருடன் பணியாற்றிய மணிப்பூர், மேற்கு வங்கம், நாகாலாந்து முதலமைச்சர்கள் கட்டியம் கூறுவார்கள்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எப்போது ஏற்படும்? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் ''ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்பது என்கிற வழக்கத்தைக் கைவிட்டு, ஜெயிக்க வேண்டிய கட்சி எது என்று பார்த்து மக்கள் வாக்களித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும்!''
பாஜகவின் தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்த குருஜி கோல்வல்கர், தேவரஸ், சுதர்சன், மோகன்
பாகவத் ஆகியோரிடமும் நெருங்கிப் பழகியவர் இல.கணேசன். அவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் பல செய்திகளும், அனுபவங்களும் அவரிடம் இருந்தன. அவற்றை எல்லாம் பதிவு செய்யாமல் அவர் நம்மிடமிருந்து விடைபெற்றது வரலாற்றுக்கு மிகப்பெரிய இழப்பு.
இல.கணேசனுக்கும் தினமணிக்குமான தொடர்பு அவசர நிலையின்போது தொடங்கியது. இல.கணேசனின் மூத்த தமையனார் இல.சேஷன் ராம்நாத் கோயங்காவின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாகத் திகழ்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்காக இருந்த இல. கணேசன் அவசர நிலையின்போது தலைமறைவாகி, இந்திரா காந்தியின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்தார். அதற்கு ஊக்கமும், ஆக்கமும் வழங்கி உதவியவர் தினமணியின் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என்.சிவராமன் என்பதை அடிக்கடி நினைவுகூர்வார் இல.கணேசன்.
ஆர்.எஸ்.எஸ் பிரசாரக், பாஜக தலைவர், ஆளுநர் எல்லாவற்றையும்விட அவர் தமிழ்ப் பற்றாளர் என்பதுதான் இல. கணேசனின் தனிச்சிறப்பு. தேசிய இயக்கத்தைச் சார்ந்த இல.கணேசன் நிறுவிய 'பொற்றாமரை' என்கிற இலக்கிய அமைப்பு, அவர் ஆளுநராகப் பொறுப்பேற்பது வரை தொடர்ந்து நடத்திய இலக்கியக் கூட்டங்கள், தமிழ் இலக்கியத்தை நீர் ஊற்றி வளர்த்தன. தமிழும், தமிழகமும் தமிழ் இலக்கிய உலகமும் அவரது பேரிழப்பை எதிர்கொள்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.