உலகில் மிக அதிக அளவில் பக்தர்கள் அமைதியாக ஒருங்கிணையும் திருவிழா என்று பிரயாக்ராஜில் இன்று நிறைவடையும் மகா கும்பமேளாவை "யுனெஸ்கோ' மதிப்பிடுகிறது. கங்கையும், யமுனையும், நிலத்தடி நீராக சரஸ்வதியும் ஒன்றுகூடும் இடத்தில், பல மைல் தூரம் நடந்துசென்று மூழ்கிக் குளிப்பதன் மூலம் தங்களது முற்பிறவிப் பாவங்கள் தொலைகின்றன என்று காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஹிந்துத் துறவிகள், மடாதிபதிகள், மேனியெல்லாம் திருநீறுடன் காணப்படும் நாக சாதுக்கள், மண்டையோடு மாலையும், கையில் சூலாயுதம், வாள் ஏந்திய அகோரிகள் அனைவரும் கூடும் நிகழ்வு "கும்பமேளா'. இவர்களைப் பார்க்கவும், அவர்களிடம் ஆசி பெறவும், மூன்று நதிகள் கூடும் சங்கமத்தில் புனித நீராடவும் உலகெங்கும் இருந்து குவியும் பக்தர்கள் கும்பமேளாவின் தனிச்சிறப்பு.
இதுவரையில் ஏறத்தாழ 65 கோடி பக்தர்கள் இன்று நிறைவடைய இருக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியால் "ஒற்றுமைக்கான மகா யாகம்' என்று வர்ணிக்கப்படும் பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்காக மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2,100 கோடியை ஒதுக்கி இருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் வசதிகளுக்காக மாநில அரசு செலவழித்திருப்பது மேலும் ரூ.7,500 கோடி.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், இதற்காகவே ஓர் இடைக்கால நகரம் உருவாக்கப்பட்டது. 25 பகுதிகள் (செக்டார்கள்), மக்கள் குளிப்பதற்காக 12 படித்துறைகள் உள்ளிட்டவை, சுமார் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (40 சதுர கி.மீ.) உருவாக்கப்பட்டன. 23,000 சமையல் அறைகள், 1,50,000 கழிப்பறைகள், 11 மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள், 50,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் என்று எல்லாமே தயார் நிலையில் கடந்த 45 நாள்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களும், நான்கு முக்கிய கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன. சாதுக்களும், துறவிகளும், மடாதிபதிகளும் கூடும் 11 அகாடாக்களையும் (மடங்களையும்), ஆயிரக்கணக்கான துறவிகள் அதிகாலை வேளையில் புனித நீராடும் படித்துறைகளையும் ட்ரோன்கள் மூலம் தொய்வில்லாமல் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் இதற்கு முன்னால் உலகின் எந்தப் பகுதியிலும் கூடியிருக்க வாய்ப்பில்லை. சநாதன தர்மத்தின் சக்தியையும், ஒருங்கிணைப்பையும் எடுத்துக்காட்டும் விதத்தில் மகா கும்பமேளாவை நடத்திக் காட்ட வேண்டும் என்கிற பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரின் இலக்கு எட்டப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட "அமுதம்' ஒரு கும்பத்தில் (குடத்தில்) சேகரிக்கப்பட்டது. அதைத் கைப்பற்ற நடந்த போட்டியில் அமுதத்தின் துளிகள் நான்கு இடங்களில் சிந்தின. அப்படி சிந்திய பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜெயின், நாசிக் ஆகிய நான்கு நகரங்களிலும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி கும்பமேளா நடைபெறுகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வாரிலும், பிரயாக்ராஜிலும் "அர்த் கும்ப்' (அரை கும்பம்) மேளா கொண்டாடப்படுகிறது. நான்கு புனிதத் தலங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்ண கும்பமேளா (முழுமையான கும்பமேளா) நடைபெறுகிறது. பிரயாக்ராஜில் மட்டும் 12-வது பூர்ண கும்ப மேளா, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாகக் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இப்போதைய மகா கும்பமேளா முக்கியத்துவம் பெறுகிறது.
கும்பமேளா நடைமுறையை ஏற்படுத்தியவர் "அத்வைதம்' முன்மொழிந்த ஆதிசங்கரர் என்று கூறப்படுகிறது. நாடு தழுவிய அளவில் மடாதிபதிகளும், துறவிகளும் கூடும் சங்கமமாகக் கும்ப மேளாவை உருவாக்கி, அந்த சங்கமத்தின்போது ஆத்ம விசார விவாதங்களை முன்னெடுப்பது, சநாதன தர்மத்தை நிலைநாட்டவும், வலுப்படுத்தவும் திட்டங்கள் வகுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது என்பதுதான் ஆதிசங்கரரின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.
நிர்வாணி, அடல், நிரஞ்சனி, ஆனந்த், ஜூனா, ஆவாஹன், அக்னி, நிர்மோஹி, திகம்பர் அனி, நிர்வாணி அனி, நயா உதாசீன், படா உதாசீன், நிர்மலா என்று 13 ஆயுதம் ஏந்திய அகோரி துறவியரின் திருமடங்கள் (அகாடா) கும்ப மேளாக்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவெளியில் அதிகம் வராத அந்த ஆயுதம் ஏந்திய, ஒருசில நிர்வாண துறவிகளைத் தரிசிப்பதற்காகவே பல பக்தர்கள் கும்ப மேளாவுக்குச் செல்கிறார்கள்.
கும்ப மேளாவில் "தர்ம சன்சத்' எனப்படும் துறவிகளின் கூட்டம் நடைபெறும். பல அகாடாக்களின் தலைவர்கள் அதில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஹிந்துக் கோயில்களையும், புனிதத் தலங்களையும் பாதுகாக்க "சநாதனக் குழு' (சநாதன் போர்ட்) ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மகா கும்ப மேளாவில் கூடிய "தர்ம சன்சத்' மத்திய அரசிடம் வைத்திருக்கிறது.
மகா கும்பமேளா பொதுவாகவே அரசியலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. 1918-இல் நடந்த கும்பமேளாவில் அண்ணல் காந்தியடிகள் கலந்துகொண்டு புனித நீராடினார். 2001-இல் சோனியா காந்தி கலந்துகொண்டார்.
என்னதான் முறையாகத் திட்டமிட்டாலும் இதுபோன்ற நிகழ்வுகளில் சில தவறுகள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. 1954 கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதோடு ஒப்பிடும்போது, 65 கோடி பேர் 45 நாள்களில் புனித நீராடப் பிரயாக்ராஜில் குவிந்தும்கூடப் பெரிய அசம்பாவிதங்கள் இல்லாமல் மகா கும்பமேளா நிறைவடைந்திருக்கிறது என்பதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எத்துணை பாராட்டினாலும் தகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.